தங்கம் - கவர்ச்சி விலை, செய்கூலி, சேதாரம் இன்னபிற விஷயங்கள்!

இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம்
தங்கம் - கவர்ச்சி விலை, செய்கூலி, சேதாரம் இன்னபிற விஷயங்கள்!

இந்தியக் குடும்பங்களில் சுமார் 25,000 டன் தங்கம் வைத்திருப்பதாக உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) புள்ளிவிவரம் சொல்கிறது. நம் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தங்கம் என்ற உலோகம். அரசன் ஆனாலும் சரி ஆண்டி ஆனாலும் சரி, கடுகளவாவது தங்கம் இல்லாமல் வாழ்வதில்லை. இந்த அளவு மதிப்பு வாய்ந்த உலோகத்தை வாங்கும் பொழுது இன்று வரை யாரும் முழுமனதுடன் வாங்குவதில்லை. காரணம் தம்மை ஏமாற்றியிருப்பார்களோ என்ற உணர்வு. உண்மை என்னவென்றால் சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லது ஏமாந்துள்ளார்கள்,  தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில்... 

கடந்த நூறு வருடங்களில் இருந்த தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

100 ஆண்டுகளில் 1,300 மடங்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1920 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாய் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை. நூறு ஆண்டுகளில் சுமார் ஆயிரத்து முன்னூறு மடங்கு உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை. 1920 -ல் இருந்து 1960 வரையிலான 40 ஆண்டு காலகட்டத்தில் தங்கத்தின் விலை வெறும் 80 ரூபாய் மட்டுமே உயர்ந்தது. அதன்பிறகு தான் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. அடுத்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 20 மடங்கு உயர்ந்து 1987 ஆம் ஆண்டு ஒரு சவரன் 2,016 ரூபாய்க்கு விற்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 2008 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாயை தாண்டியது.

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது இந்த பதினோரு ஆண்டுகளில்தான். 2008-ல் 10,040 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது சுமார் 17 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 27 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. தனிநபர்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் கூட தங்கத்தின் மீதான முதலீட்டில் ஆர்வம் காட்டுகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனிமனித வருமானம் அதிகரித்து வருவதால் தங்கத்தின் மீதான சில்லறை முதலீடு அதிகரித்துள்ளது.

பல அரசாங்கங்கள் கூட தங்கள் நாட்டு மத்திய வங்கி மூலம் தங்கத்தை பெருமளவு சேமித்து வைக்கின்றன. World Gold Council தகவலின் படி 2018 வரை பல்வேறு நாட்டு அரசுகள் சுமார் 450 டன் வரை தங்கத்தை சேமித்து வைத்துள்ளன. இப்படி தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. உலக அளவில் தற்போதைய தங்கத்தின் தேவையை விட ஆயிரம் டன் தங்கம் குறைவாக உள்ளது என்கிறது ஒரு புள்ளி விபரம். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்து கொண்டே வந்தாலும், மக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

916 என்பது என்ன?

தூய தங்கத்தில் நகைகள் செய்ய முடியாததால், தங்கத்துடன் பிற உலோகங்கள் மிகச்சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. 22 கேரட் நகைகளில் தங்கத்தின் அளவு 91.6 சதவீதமாகும்;​ அதிகமாக நகைக்கடைகளில் விற்கப்படுவதும் இவைதான். 916 என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில்  91.6%   சுத்தமான  24  கேரட்  தங்கம்.  மீதி  8.4  சதவீதம்  செம்பு, மற்றும்  வெள்ளி  ஆகும். 91.6   தங்கம்தான்  22 கேரட்  தங்கம். இதை ஞாபகப்படுத்தும் விதத்தில்தான், '916 ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட தங்கத்தை வாங்குங்கள்' என பி.ஐ.எஸ் எனப்படும் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் அறிவுறுத்திவருகிறது. 875, 750, 585 ஹால்மார்க் நகைகள், முறையே 916 க்கு அடுத்த நிலையில் உள்ள தங்கத்தின் அளவைக் குறிக்கின்றன.

KDM   என்றால் என்ன ?

முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை  பயன்படுத்துவார்கள். (தங்கம் + வெள்ளி + செம்பு )  இந்த மூன்றும் சேர்ந்தது தான் பொடி.  இந்தப்  பொடியை பயன்படுத்தி  நகை பற்றவைக்கும் போது  பொடியில் உள்ள செம்பு , மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன்  சேர்ந்து விடும். அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும். ஆனால் KDM வந்த பிறகு அந்த பிரச்சனை  இல்லை. ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தால்  போதும். பற்றவைக்க இதனை பயன்படுத்தலாம். 

பற்றவைக்கும் போது  ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும்  தீய்ந்து  போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும்  நகையில் இருக்கும்.

KDM என்றால் தங்கம், இதில் காட்மியம் 92 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்ற விகிதத்தில் கலக்கப்படலாம், இது 92 சதவீத தூய்மையை உறுதி செய்கிறது. காட்மியம் - சாலிடர் நகைகள் கே.டி.எம் நகைகள் என்று பரவலாக அறியப்பட்டன. கே.டி.எம் தங்கம் பிரபலமாக இருந்தபோதிலும், இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டதால் அது புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. செயலாக்கத்திற்குப் பிறகு தங்கத்தின் தூய்மையை மேம்படுத்த உதவுவதற்காக, தாமிரத்தை மாற்ற காட்மியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இது அணிபவர்களுக்கு கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது, எனவே தொழில்நுட்பம் தடைசெய்யப்பட்டு பிற மேம்பட்ட உலோகக் கலவைகளால் மாற்றப்பட்டது.

'செய்கூலி ​​மற்றும் சேதாரம்' 
 
 

நகை வாங்குவோரைப் பெரிதும் குழப்புவது 'செய்கூலி ​​மற்றும் சேதாரம்'. செய்கூலி என்பது நகை செய்வதற்கான கூலி, இது கடைக்குக் கடை மாறுபடுகிறது. சேதாரம் என்பது நகை செய்யும்போது ஏற்படும் உலோகத்தின் இழப்பு. இந்த இழப்பை ஈடுகட்ட, நகை வியாபாரிகள் நேரடியாக வாடிக்கையாளர்களிடமே சேதாரத்தொகையை வாங்குகின்றனர். நகையைப் பொறுத்து 5% முதல் கிட்டத்தட்ட 30% வரைக்கூட சேதாரத் தொகை வசூலிக்கப்படுகிறது. செய்கூலி, சேதாரம் மற்றும் வரிப்பணம் போன்றவற்றில்தான் உபரியாக பணத்தை இழக்கிறோம்.

ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. 

உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள்?  

”எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும்.
 
கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும் 30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.
 
இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும். இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும். இது டிசைனைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடும். அதோடு கூடுதலாகக் கொடுத்த 6 கிராம் தங்கத்தில் சேதாரம்போக மீதமுள்ள 5.200 கிராம் தங்கத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.

இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனுடைய தற்போதைய விலை 1,700 ரூபாய். பெரும்பாலான கடைகளில் சேதாரத்தை சதவிகிதத்தில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு நகைக்கு 5 சதவிகிதம்தான் சேதாரம் என்றால் நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை 3-லிருந்து 5 சதவிகிதம் வரை கூடுதலாக வைத்து விற்கிறார்கள்.

தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே பெரிய, சிறிய என அனைத்து கடையிலும் ஒரே விலைதான். ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சில தங்க நகை வியாபாரிகள் தங்கத்தின் தரத்தைக் குறைத்து சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தந்தனர். ஆனால், தற்போது சரியான தரத்தைக் கொடுத்து சேதாரத்தில் லாபத்தை வசூல் செய்துவிடுகிறார்கள்.

சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.

ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது அதனை அடிப்படையாக வைத்துதான் நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் சேதாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம்!” தங்க நகையில் சேதாரம் என்பதெல்லாம் தென் மாநிலங்களில்தான்.வட மாநிலங்களில் எல்லாம் தங்க நகைகளுக்கு தனியாகச் சேதாரம் கணக்கிடுவதில்லை. மற்ற பொருட்களை போலவே சேதாரத்தை நகையின் விலையில் சேர்த்து விற்கிறார்கள்.  

செய்கூலி சேதாரம் என்பது தங்க நகை விற்பவர்களின் ஏக போக உரிமையாகப் போய்விட்டது இந்தியாவில். ஒரு பொருள் செய்தால், செய்த பொருளின் மூலப் பொருள் கழிவுகள் பெரும்பாலும் மறு சுழற்சி செய்து திரும்ப மூலப் பொருளாக மாற்றிக் கொள்ள இன்றைய விஞ்ஞான உத்திகள் நிறைய உண்டு....ஆனால் தங்கம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. நகை வியாபாரிகள் கோடிகளில் கொள்ளை அடிக்கும் வியாபார உத்திகளில் சேதாரம் ஒன்று....நினைவில் கொள்ளுங்கள்.

இந்தியா தவிர ஏனைய உலக நாடுகளிலும் தங்கம் விற்கிறார்கள். அங்கெல்லாம் சேதாரம்எனும் சொல்லே இல்லை....ஒன்றே ஒன்றுதான்...கூலி. அதில் எந்த விதமான சேதாரத்தையும் சேர்க்க மாட்டார்கள். உதாரணமாக, துபாயில் உள்ள நகைக்கடைகளில் எந்த ஒரு அணி வாங்குகிறீர்களோ அதற்கென்று நியாயமான ஒரு கூலி நிர்ணயித்திருப்பார்கள். ..உதாரணத்திற்கு,  வளையல் என்றால் அதிக பட்சம் ரூபாய் நூறு ஒரு கிராமிற்கு கூலி. இதுவும் கைவேலைப்பாட்டிக்காக மட்டும் இந்த கூலி..இதையே கருவி மூலம் செய்யும் வேலைக்கு இந்தக் கூலி பாதி தான்.செயின் ஒன்றுக்கு கூலி ரூ 40௦-80 /கிராம் , மோதிரம் ரூ 40 -60 . அவ்வளவேதான்.

அப்போ துபாயில் பொன் வேலை செய்பவர்களுக்கு சேதாரம் இல்லையா என்ன? 

இருக்கிறது அங்கு மட்டும் இல்லை இங்கும்தான். ஆனால் துபாயில் வேலை செய்து மீந்த தங்கத் துகள்களை மீண்டும் எடுத்து உருக்கி திரும்ப உபயோகிக்கிறார்கள். உதாரணமாய் ஒரு வளையல் செய்ய 100 கிராம் மூலப் பொருள் வேண்டும் என்றால் அது செய்து முடித்த பின் 88 கிராமாக இருக்கும் . ஆக 12 கிராம் சேதாரத் தங்கம். இதைத்தான் இங்கு சேதாரம் என்று சொல்லி அதன் விலையை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் இங்குள்ள எத்தர்கள்.

சரி அதற்குப் பின் என்ன நடக்கிறது துபாயில்? பொடித் தங்கத்துகளை சேர்த்து எடுத்து மீண்டும் உருக்கி கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கே திரும்ப எடுக்கிறார்கள். அப்போ தங்கமே வீணாவதில்லையா என்றால், ஆகிறது சுமார் 200 மில்லி கிராம் அளவு மட்டுமே. அதாவது 88 கிராம் தங்க வளைக்கு சேதாரம் 0௦.022 % இதன் இழப்பை கூலியில் சேர்த்து விடுவார்கள்.

அது மட்டுமல்லாது எல்லா நகைகளிலும் அரசாங்கத்தின் 22 ct முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஒரு மூக்குத்தியின் திருகாணி கூட பாக்கியின்றி. துபாய் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அரசாங்க முத்திரை அவசியம். அரசாங்கம் இதற்கென்றே ஒரு தனி இலாக்கா அமைத்து மக்களை ஏமாற்றும் கடைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. முத்திரை இல்லாத நகை விற்பவரின் கடை சீல் வைக்கப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும்.கூடவே அதிக பட்ச தண்டனையாக முப்பது வருட சிறை வாசம்.

இங்கு என்ன நடக்கிறது? ஒரு கழிவிற்காக அந்த சூபர்வைசரிடம் சிரித்துப் பேசி கவர வேண்டியிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நகை வாங்கும் பொது சேதாரமான கழிவு தங்கத்தை உங்களுக்கே திருப்பித்தரச் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சேதாரத்திற்கான பணம் கொடுத்து இருக்கிறீர்கள். செய்கூலியும் கொடுத்திருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு சட்ட பூர்வமான உரிமை உண்டு திரும்பிப் பெற. உருக்கித்தர ஆயிரம் கொல்லர்கள் இருக்கிறார்கள்.

துபாயில் நகை வாங்கினால்?

துபாயில் நகை வாங்க நீங்கள் போக வேண்டியதில்லை...உங்கள் நண்பரை வாங்கச் சொல்லுங்கள் அங்கிருந்தால் அல்லது சுமார் ஒரு லட்சம் வரை நகை வாங்க உங்கள் திட்டம் என்றால், இங்கிருந்து ஷார்ஜா செல்ல விமானக் கூலி ரூ 6000 + 6000, விசா ரூ 4000. விமான நிறுவனமே விசாவிற்கு ஏற்பாடு செய்கிறது. ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகை இங்கு இன்றைய விலைக்கு செய்கூலி சேதாரம் வரி போக ரூ 70000௦௦௦௦ திற்கு கிடைக்கும். அரசாங்க முத்திரையோடு உத்திரவாத தங்கம், விமானத்தில் வெளிநாடு பயணம். உங்களை ஏமாற்றுவோரின் முகத்தில் நாமம். இத்தனை வசதிகள் உள்ளது. உங்களை ஏமாற்றுவோரின் எக்களிப்புக்குக் காரணம் இங்கு சரியான தங்க விற்பனை சட்டம் இல்லாததே... அப்படி ஒன்று இருந்தால் இந்த செய்கூலி சேதாரத்திற்கு ஒரு ISI தர நிர்ணயம் இருக்கும். அதுபோல ஒரு சட்டம் அரபுநாடுகளில் நடப்பில் உள்ளதால் அரபு நாடுகளில் தங்க விற்பனையில் எந்த ஏமாற்றும் இருப்பதில்லை. நினைத்துப் பாருங்கள், ஹெல்மெட் போடுவதில் காட்டும் கண்டிப்பை அரசு இதுபோன்ற விசயங்களில் காட்டுவதில்லை. இந்தியா போன்ற வலுவில்லாத சட்ட அமைப்பு உள்ள நாட்டில் எதையும் விலைக்கு வாங்கலாம். தங்க சட்டத்தைக் கூட...

தங்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து இந்த வருட பட்ஜெட்டில் வந்தபோது, லாபம் சுருங்குகிறது என்று இந்த தங்க வணிகர்கள் தங்கள் கடைகளை ஒரு வாரம் பூட்டி கதவடைப்பு செய்து வரி உயர்வை திரும்பப் பெற வைத்தார்கள்... தங்கள் லாபம் சுருங்கியதற்க்கே இப்படிச் செய்தவர்கள், தங்க நகைக்கு தனி சட்டம் வந்தால் வேறு என்னெல்லாம் செய்ய மாட்டார்கள்?  மக்கள்....எல்லா மூலைகளில் இருந்தும் எல்லா முனைகளில் இருந்தும் எல்லாக் கயவாணிகளிடமும் ஏமாறுகிறார்கள்.... படித்திருந்தும்... கேள்வி கேட்கத் தெரியாமல்...!

சில டிப்ஸ்...

1. சேதாரம் வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இதுவும் கடைக்கு கடை மாறுபடும். சில கடைகளில், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும், மற்றவர்களிடம் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும். செல்லும் முன் சற்றே விசாரிப்பது நல்லது. 

2. தர முத்திரை தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழான `பிஐஎஸ்’ (BIS – Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். BIS முத்திரை என்பது கீழ்க்காணும் 5 அம்சங்களை உள்ளடக்கியது.  பிஐஎஸ் முத்திரை.  தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.  பிஐஎஸ் முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை. குறிப்பிட்ட நகைக்கு பிஐஎஸ் முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்து, 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்து, 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்து… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். கடந்த ஆண்டுக்கு, (2016) 'Q' என்ற எழுத்து இருக்கும்). நகை விற்பனையாளரின் முத்திரை.
3. ஆன்டிக் நகைகள் ஆன்டிக் (பழங்கால) நகைகளுக்கு சேதாரம் 25% - 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நலம். அதேபோல், கல் நகைகளும் ஒப்பீட்டளவில் தங்க நகைகளை விட விலை எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
4.  19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும். 
5. எடையில் கவனம் என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். மேலும், பில்லில் மொத்த தொகையை மட்டும் பார்த்துவிட்டு பணத்தைச் செலுத்தாமல், செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பிரித்துப் படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். 
6. பழைய நகைகள் பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம் தங்கத்தைக் கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்குவதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்றவது நல்லது.
7. 'கேடிஎம்' தவிர்க்கவும் 'கேடிஎம்' (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதன் நம்பகத்தன்மை கடையை பொறுத்தே அமையும் என்பதால், 'கேடிஎம்' என்பதை தங்கத்தின் தூய்மைக்கான சான்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, 'பிஐஎஸ்' முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்கலாம்.
 8. ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்சனை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கோர முடியும் என்பதால், தவறாமல் பில் கேட்டு வாங்கவேண்டும்.

தேவையான சட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

சாலையோரக் கடைகளில் 10 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கும் போது, நாம் காட்டும் கண்டிப்பு சேதார விசயத்தில் சேதாரமான நகை எங்கே என்று கேட்டதில்லை.

நகை செய்யும் பொது ஏற்படும் வேஸ்ட் துகள்கள் மீண்டும் நகை செய்ய பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதுவும் தற்கால CNC (Computer numerical control) களில் செய்யப்படும் நகைகளில் ஏராளமான சேதாரக் குறைப்பு ஏற்பட்டுள்ளது. பழைய நகைகளை மாற்றும் போது, குறைந்த விலையில் எடுத்துக் கொள்வது என நகை வியாபாரிகளின் மோசடிக்கு அளவே இல்லை.

தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை இந்திய அரசு வழங்குகிற மாதிரி சேதாரத்திற்கு ஓர் அளவை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, சேதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்! தேவையற்ற விசயங்களில் கட்டுப்பாடுகள், சட்டங்கள் கொண்டுவரும் அரசு, நகை வியாபாரத்தை ஒழுங்குபடுத்தினால், அரசு மற்றும் நுகர்வோர்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.

Image Courtesy: Financial Express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com