வேட்புமனுவோடு தாக்கல் செய்த சொத்து விவரங்கள்! ப.சிதம்பரம் சிக்கிய கதை

வேட்புமனுவோடு தாக்கல் செய்த சொத்து விவரங்கள்! ப.சிதம்பரம் சிக்கிய கதை

பல நாடுகளில் சொத்துகள், பல வங்கிக் கணக்குகள், ஏராளமான `ஷெல்’ நிறுவனங்கள் போன்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து நிற்கிறோம்.

''பல நாடுகளில் சொத்துகள், பல வங்கிக் கணக்குகள், ஏராளமான `ஷெல்’ நிறுவனங்கள் போன்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து நிற்கிறோம். இவையெல்லாம் பேய்க் கதைகளின் அத்தியாயங்கள். ஒருநாள் இந்தப் பேய்கள் புதைக்கப்படும்'' - ப.சிதம்பரம் கைதுக்குப் பிறகு, அவரின் குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

''அவமானப்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிதான்'' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான வாசகம். 'நாங்கள் போதுமான செல்வத்தைக் கொண்ட குடும்பம். அனைவரும் வருமானவரி செலுத்துபவர்கள். பணத்துக்காக நாங்கள் ஏங்குவதில்லை. சட்டவிரோதமான வழிகளில் பணம் தேட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை'' எனச் சொல்லியிருக்கிறார்கள்.

''நாங்கள் பெருமளவு செல்வத்தைக் கொண்ட குடும்பம்'' எனச் சொல்லியிருக்கும் ப.சிதம்பரம் குடும்பத்தின் சொத்துகள்தான் எவ்வளவு? 2004-க்கு முன்பு சிதம்பரம் குடும்பத்துக்கு எவ்வளவு சொத்துகள் இருந்தன என்பதற்கான எந்தப் புள்ளி விவரமும் யாரிடமும் இல்லை. ஏனெனில் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்துதான் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்கிற விதி கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டபோது அவர் காட்டிய சொத்து மதிப்பு 17.79 கோடி ரூபாய்.

அதன் பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ப.சிதம்பரம் போட்டியிட்டபோது வேட்புமனுவோடு தாக்கல் செய்த சொத்து விவரங்கள் என்னவென்பதைப் பார்ப்போம். அதில் குறிப்பிட்ட சொத்துகளின் மதிப்பு 2009-ம் ஆண்டு கணக்கீடுதான். 2009 ஏப்ரல் மாத கணக்குப்படி உள்ள விவரங்கள்:

ப.சிதம்பரம் பெயரில்
ரொக்கம் கையிருப்பு: ரூ 2.5 லட்சம்.
வங்கி வைப்புத்தொகை: 6 வங்கிகளில் 3.33 கோடி ரூபாய்.
நிறுவனப் பங்குகள்: 8 நிறுவனங்களில் 57.46 லட்சம் ரூபாய்.
ஆயுள் காப்பீடு, மற்ற சேமிப்புகள்: 43.25 லட்சம் ரூபாய்.
வாகனங்கள்: இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள். இதன் மதிப்பு 11,32,097 ரூபாய்.
நகைகள்: 32 கிராம் தங்கம், 3.25 காரட் வைரம். இதன் மதிப்பு 89,860 ரூபாய்.
அசையா சொத்து: ஆத்தூர் கிராமத்தில் 38.72 ஏக்கர் காபி எஸ்டேட். இதன் மதிப்பு 85.18 லட்சம் ரூபாய்.
மனைவி நளினி சிதம்பரம் பெயரில்
ரொக்கம் கையிருப்பு: ரூ.3.29 லட்சம்.
வங்கி வைப்புத்தொகை: 5 வங்கிகளில் 3.26 கோடி ரூபாய்.
நிறுவனப் பங்குகள்: 14 நிறுவனங்களில் 19.99 லட்சம் ரூபாய்.
ஆயுள் காப்பீடு, மற்ற சேமிப்புகள்: 33.06 லட்சம் ரூபாய்.
வாகனங்கள்: 2 கார்கள். இதன் மதிப்பு 10,05,171 ரூபாய்.
நகைகள்: 1,437 கிராம் தங்கம், 76.61 காரட் வைரம், 52 கிலோ வெள்ளி. இதன் மதிப்பு 37,23,240 ரூபாய்.
அசையாச் சொத்து: 43 ஏக்கர் காபி எஸ்டேட், செங்கல்பட்டில் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் 43 ஏக்கர் நிலம், அதே பகுதியில் 2.44 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், கல்லல் மானகிரியில் 19.15 ஏக்கர் நிலம், காரைக்குடியில் 10,920 சதுர அடியில் கட்டடம், மானகிரியில் 9.36 ஏக்கர் நிலம் மற்றும் கட்டடம், சிவகங்கையில் 6,110 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம். இதன் மொத்த மதிப்பு 7,63,84,465 ரூபாய்.

மகன் கார்த்தி சிதம்பரம் பெயரில்
ரொக்கம் கையிருப்பு: ரூ.16,241.
வங்கி வைப்புத்தொகை: 3 வங்கிகளில் 4.13 லட்சம் ரூபாய்.
நிறுவனப் பங்குகள்: 3 நிறுவனங்களில் 1.43 லட்சம் ரூபாய்.
நகைகள்: 4.5 கிராம் தங்கம், 4 காரட் வைரம்.
அசையா சொத்து: சென்னையில் 4.53 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிரவுண்ட் இடம்.
ப.சிதம்பரம் பெயரில் ரூ.10.68 கோடி ரூபாய், நளினி சிதம்பரம் பெயரில் 12.23 கோடி ரூபாய், கூட்டுக் குடும்பச் சொத்து 4.59 கோடி ரூபாய் என ப.சிதம்பரம் குடும்பத்திடம் 2009-ம் ஆண்டு இருந்த மொத்தச் சொத்துகளின் மதிப்பு 27.5 கோடி ரூபாய். 2004-ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு 17,79,23,437 ரூபாயாக இருந்தது.

கடைசியாக 2016-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டார். அப்போது தனது சொத்துக் கணக்குகளைக் காட்டியிருக்கிறார். அதில் அவரது குடும்பத்தினரின் கையிருப்பாகக் காட்டிய தொகை 4,92,097 ரூபாய். நிதி நிறுவனங்கள், வங்கி வைப்புத்தொகையாக ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு 25.72 கோடி ரூபாயும் பாண்டுகள், நிறுவனப் பங்குகள் வகையில் 13.47 கோடி ரூபாயும் என்.எஸ்.எஸ் மற்றும் வங்கி சேமிப்புகள் வகையில் 35 லட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீடு, மற்ற சேமிப்புகள் வகையில் 10 லட்சம் ரூபாயும் வாகனங்களின் மதிப்பில் 27 லட்சம் ரூபாயும் நகைகள் மதிப்பில் 85 லட்சம் ரூபாயும் அசையா சொத்துகள் கணக்கில் 41.35 கோடி ரூபாயும் கணக்குக் காட்டியிருக்கிறார். மொத்தமாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் 2016-ம் ஆண்டு காட்டிய சொத்து மதிப்பு 95.66 கோடி ரூபாய். 2014 - 2015-ம் ஆண்டில் தனக்கு 8.58 கோடி ரூபாய் வருவாய் வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதே காலகட்டத்தில் அவரின் மனைவிக்கு 1.25 கோடி ரூபாய் வந்திருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் காட்டிய சொத்துகளின் மதிப்பு 79.37 கோடி ரூபாய்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை சி.பி.ஐ-யும் அமலாக்கத் துறையும் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்திருக்கும் நிலையில், அடுத்து அமலாக்கத் துறையும் அவரை கைதுசெய்ய வலை விரித்திருக்கிறது. அமலாக்கத் துறை கைதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ப.சிதம்பரம். ''குற்றமாக இல்லாத காலத்தில் செய்த செயலுக்காக ஒருவர்மீது கொள்ளைக்கும்பல் தலைவர் என்ற வர்ணம் தீட்ட முயல்கிறார்கள்'' என நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வாதத்தை வைத்திருக்கிறது. ''வீடுகள், சொத்துகள் பற்றிய விவரங்கள் எங்களிடம் இருக்கிறது'' என நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது அமலாக்கத்துறை.

ஆனால், ''உலகின் எந்தப் பகுதியிலும் வெளியில் தெரியாமல் வங்கிக்கணக்கோ, சொத்துகளோ, `ஷெல்’ நிறுவனமோ இருப்பதாக மத்திய அரசு சிறிய ஆதாரத்தைக்கூட வெளியிட முடியாது என்று சவால்விடுகிறோம்'' எனச் சொல்லிருக்கிறது ப.சிதம்பரம் குடும்பம்.

இந்தச் சவாலில் மத்திய பாஜக  அரசு ஜெயிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ-யோ அமலாக்கத் துறையோ நிரூபிக்கத் தவறினால், 2 ஜி வழக்கில் விடுவிக்கப்பட்ட ஆ.ராசா, `2ஜி - அவிழும் உண்மைகள்' என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டாரே, அதுபோல ப.சிதம்பரமும் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – அள்ளிவிடப்பட்ட பொய்கள்’ எனப் பரபரப்பு புத்தகம் எழுதுவாரோ?.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com