ரயில்வே தனியார்மயமானால்.. சேர, சோழ, பாண்டியன் விரைவு ரயில்கள் என்ன பெயரில் மாறுமோ?

பச்சைக்கொடி காட்டிவிட்டது பா.ஜ.க அரசு. சேரன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயில்தடங்களில் இனி அம்பானி எக்ஸ்பிரஸ், அதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடலாம்.
ரயில்வே தனியார்மயமானால்.. சேர, சோழ, பாண்டியன் விரைவு ரயில்கள் என்ன பெயரில் மாறுமோ?

பச்சைக்கொடி காட்டிவிட்டது பா.ஜ.க அரசு. சேரன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயில்தடங்களில் இனி அம்பானி எக்ஸ்பிரஸ், அதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடலாம்.

அசுரபலத்தில் அரியணை ஏறியதும் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய பா.ஜ.க அரசு, ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் பணியை ‘தேஜஸ்’ வேகத்தில் செய்துகொண்டிருக்கிறது.

இந்திய மக்களின் முக்கியமான பொதுப் போக்குவரத்தாக விளங்கி வருகிறது இந்திய ரயில்வே. தினமும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந்திய ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சுமார் 13 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிற இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய அரசுத்துறை. இதைத் தனியாருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நீண்டகாலமாகச் சிலர் சொல்லிவருகிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பும் ரயில்வேயில் முதலீடு செய்ய தனியார் முன்வரவில்லை என்பதுமே அதற்குக் காரணம். ஆனால் இன்றைக்கு ‘100 நாள் செயல்திட்டம்’ என்று அறிவித்து, ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதை உறுதிசெய்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான `பா.ஜ.க.’ அரசு.

ரயில்வே பட்ஜெட் ரத்து!
இதற்கு முன்பாக, கடந்த ஐந்தாண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியிலேயே ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. நீண்டகாலமாக, ரயில்வே துறைக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவந்தது. 2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரயில்வே துறைக்குத் தனி பட்ஜெட் என்பது ரத்துசெய்யப்பட்டது. 

பின்னர், ரயில்வே துறையில் ‘சீர்திருத்தங்கள்’ மேற்கொள்ள பிபேக் தேப்ராய் என்பவர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. ‘அனைத்தையும் தனியாரிடம் கொடு’ என்ற தாரக மந்திரத்துடன் பல பரிந்துரைகளை அளித்தது பிபேக் தேப்ராய் குழு.

அனைத்தையும் கழற்றிவிடு!
தனியார்மயத்தை இலகுவாக மேற்கொள்ள வசதியாக, ‘மையமான வேலைகள்’ (Core Activities), ‘மையமற்ற வேலைகள்’ (Non Core Activities) என ரயில்வே பணிகளை இரண்டாகப் பிரித்து, மையமற்ற வேலைகள் எதையும் ரயில்வே வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியிருக்கிறது பிபேப் தேப்ராய் குழு.

ரயில் பயணச்சீட்டுகள் மற்றும் ரயில்வேக்குத் தேவைப்படும் நோட்டுகள் போன்றவற்றை அச்சடிக்க இந்தியா முழுவதும் ரயில்வே அச்சகங்கள் உள்ளன. ரயில்வே ஊழியர்களின் குழந்தைகளுக்கென ரயில்வே பள்ளிக்கூடங்களும், ரயில்வே ஊழியர்களுக்கென மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. இவற்றை மையமற்ற வேலைகள் என்று வகைப்படுத்தியுள்ளனர். இடத்துடன், ரயில்வே பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவரும் ரயில்வே பாதுகாப்புப் படையையும் (ஆர்.பி.எஃப்) சேர்த்துள்ளனர். இவற்றை ரயில்வேயிலிருந்து கழற்றிவிட வேண்டும் என்பது பிபேக் தேப்ரா குழுவின் பரிந்துரை.

ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள், ரயில் சக்கரங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிற ஐ.சி.எஃப். உள்ளிட்ட ஏழு உற்பத்திப் பிரிவுகளும், ரயில்வே பணிமனைகளும் ரயில்வேயிடம் இருக்கக்கூடாது என்பதும் பிபேக் தேப்ராய் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று. மேலும், ரயில்வே சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து ‘ரயில் வளர்ச்சி ஆணையம்’ ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் ஆகியவற்றை இயக்குவதற்கு அந்த ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

மூடப்படும் அச்சகங்கள்!
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. இதற்கு, சில ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் (டி.ஆர்.இ.யூ.) செயல் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் பேசினேன்.

“பிபேப் தேப்ராய் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது என்று மத்திய அமைச்சரவையில் 2017-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது, பா.ஜ.க.-2 அரசு கடந்த மே 30-ம் தேதி பதவியேற்ற பிறகு முதல் நடவடிக்கையாக, ரயில்வே அச்சகங்களை மூடும் உத்தரவு ஜூன் 3-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. சென்னை ராயபுரம் அச்சகம் உட்பட அனைத்து அச்சகங்களும் 2020 மார்ச் 31-க்குள் மூடப்பட்டுவிடும். இந்த அச்சகங்களில் இருக்கும் இயந்திரங்களைத் தனியாரிடம் கொடுத்துவிடுவது என்று முடிவுசெய்துள்ள அரசு, ரயில்வே துறைக்குத் தேவையான அச்சுப்பணிகளை அந்தத் தனியாரிடமே கொடுப்பது என்றும் முடிவு செய்திருப்பதுதான் வேடிக்கை.

பணிமனைப் பரிதாபங்கள்!
நாடு முழுவதும் 44 ரயில்வே பணிமனைகள் உள்ளன. ஐ.சி.எஃப். போன்ற ஏழு உற்பத்திப்பிரிவுகள் உள்ளன. இவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ‘ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்’ என மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளனர். பின்னர், பங்கு விற்பனைகள் மற்றும் கேந்திர விற்பனைகள் (strategic sales) மூலமாக இவற்றைத் தனியாரிடம் கொடுத்துவிடுவார்கள்.

இந்திய ரயில்வேயில் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில், சுமார் மூன்று லட்சம் பேர் பணிமனைகள் மற்றும் உற்பத்திப் பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள். இவர்களுடன் சேர்த்துதான் கார்ப்பரேஷனைத் தனியாரிடம் கொடுப்பார்கள். அதன் பிறகு, மூன்று லட்சம் பேரில் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

தங்க நாற்கரத்தடம்!
டெல்லி – மும்பை, டெல்லி – ஹவுரா வழித்தடங்களுக்குத் தங்க நாற்கரத்தடம் என்று பெயர். நாட்டின் மொத்தத் தண்டவாளத்தில் 20 சதவிகிதமும், நாட்டின் மொத்த ரயில் போக்குவரத்தில் 55 சதவிகிதமும் இந்த வழித்தடங்களில்தான் இருக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயிலை அனுமதிக்கப்போகிறார்கள். இதுபோக, முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வழித்தடங்கள் ஆகியவற்றிலும் தனியார் ரயில்களை அனுமதிக்கப்போகிறார்கள்.

கட்டணங்கள் உயரும்!
முதல் முயற்சியாக, இரண்டு ரயில்களை இயக்குவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி-க்கு அனுமதி அளித்துவிட்டனர். தேஜஸ் எக்ஸ்பிரஸும் தனியாரிடம் போகும் என்று சொல்லப்படுகிறது. நல்ல வருமானம் வரக்கூடிய ராஜதானி, சதாப்தி ரயில்களையும் தனியாரிடம் கொடுக்கத் திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்குவதற்குத் தனியாருக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிபேக் தேப்ராய் குழு பரிந்துரைத்துள்ளது. எனவே, நிறைய தனியார் ரயில்களை அனுமதிப்பார்கள். அதனால், ரயில் கட்டணங்கள் கடுமையாக அதிகரிக்கும். அதனால், ரயில் கட்டணங்களை இப்போதே அதிகரிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள்.

அதாவது, இப்போது 100 ரூபாய் கட்டணம் என்றால், 53 ரூபாய்தான் பயணிகளிடம் வாங்குகிறோம், மீதி 47 ரூபாயை மானியமாக அரசு கொடுக்கிறது என்று சொல்கிறார்கள். தற்போது வழங்கப்பட்டுவரும் இந்த மானியத்தை, ‘விட்டுக்கொடுங்கள்’ என்று பயணிகளிடம் கேட்பார்கள். அப்படிச் செய்தால் தற்போதுள்ள 53 ரூபாய் டிக்கெட் என்பது, 100 ரூபாயாக உயர்ந்துவிடும். சிறிது காலத்துக்குப் பிறகு மானியத்தை முற்றிலும் ரத்துசெய்துவிடுவார்கள். அதனால், கட்டணங்கள் அதிகரிக்கும்.

அதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை எப்படி ஒழித்தார்களோ, அதே பாணியில் ரயில் கட்டண மானியத்தையும் ஒழித்து, கட்டணத்தை உயர்த்தப்போகிறார்கள்.

புதிதாகத் தண்டவாளங்கள் அமைத்து ரயிலை ஓட்டிக்கொள்ளுங்கள் என்று தனியாரிடம் அரசு கடந்த 20 ஆண்டுகளாகச் சொல்லிவந்தது. ஆனால், யாரும் முன்வரவில்லை. ஏற்கெனவே ரயில்வே துறை போட்டுவைத்துள்ள தண்டவாளங்களில் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கேட்கிறார்கள். தற்போது மேற்குப் பாதை, கிழக்குப் பாதை என இரு பாதைகள் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைத்துவருகிறது. அவற்றில் தனியார் சரக்கு ரயில்களை இயக்க அனுமதியுங்கள் என்று பிபேக் தேப்ராய் குழு கூறியுள்ளது. சரக்குப் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதைகள் அவை. அதாவது, அவை செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், நாட்டின் 55 சதவிகித சரக்குப்போக்குவரத்து அந்தப் பாதைகளுக்கு மாறிவிடும்.

அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கையால் கடும் விளைவுகள் ஏற்படும். தனியார் வந்துவிட்டால், ரயில்வே துறை இயக்கும் ரயில்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும். ரயில்வேயின் வருவாய் பாதியாகக் குறையும். லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழப்பார்கள். பணியில் இருப்பவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆக்கப்படுவார்கள். பணிப் பாதுகாப்பு இருக்காது. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் இருக்காது”.

இன்னொருபுறம், அரசு எடுத்துவரும் தனியார்மய நடவடிக்கைக்கு ஆதரவான குரல்களும் ஒலிக்கின்றன. ரயில்வே துறையின் திறன்களை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. எனவே, ரயில்வேயைத் தனியாரிடம் கொடுத்தால்தான், இவையெல்லாம் சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இதுகுறித்துப் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடம் கேட்டபோது, “நம் நாட்டில் ரயில்கள் சராசரியாக 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதை, 160 கி.மீ-லிருந்து 180 கி.மீ. என்ற அளவுக்கு அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால், அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உதாரணமாக, 160 கி.மீ. வேகம் என்று அதிகரித்துவிட்டால் விவசாயிகளின் விளைபொருள்களைக் குறுகிய நேரத்தில் நகரங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும். ரயில்வேயின் திறனை உயர்த்த வேண்டும். அதற்கு நிறைய முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அரசால் அந்த அளவுக்கு முதலீடுகள் செய்ய முடியாது. அவ்வளவு பணபலம் அரசிடம் இல்லை. 

ரயில்வேயிடம் இருக்கும் அசையாச் சொத்துகளைத் தனியாரிடம் வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை முதலீடு செய்தால், ரயில்வே மூலமாக நிறைய பொருளாதார மாற்றங்கள் ஏற்படும். போட்டி சார்ந்த பொருளாதாரம் நாட்டுக்கு நல்லது. எனவே, ரயில்வேயில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் தேசத்துக்குப் பல நல்லவை நடக்கும்” .

பிரிட்டனில் அரசிடம் இருந்த ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்பட்டது. பெருமளவிலான ரயில்வே ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். ரயில் கட்டணங்கள் உயர்ந்தன. மிகப்பெரிய ரயில் விபத்துகள் ஏற்பட்டன. தண்ட வாளங்கள், இன்ஜின் உள்ளிட்ட பராமரிப்புகளில் கவனம் செலுத்தப்படாததே விபத்துகளுக்குக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு கட்டத்தில், ரயில்வே தனியாரிடம் இருக்க வேண்டுமா, அதை மீண்டும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அரசே மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பெரும்பான்மையோர் வாக்களித்தனர்.

அர்ஜென்டினாவிலும் ரயில்வே தனியார்மயம் ஆக்கப்பட்டு, தோல்வியில்தான் முடிந்தது. இந்த உலக அனுபவங்களையெல்லாம் கணக்கில் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com