சென்னை மீது படையெடுக்க உள்ள முக்கியமான மூன்று பிரச்னைகள்: தாங்குவார்களா சென்னைவாசிகள்?

தற்போது சென்னையை மிக மோசமாக தாக்கவிருக்கும் 3 பிரச்னைகளும் ஓரளவுக்கு சென்னைவாசிகளுக்கு நன்கு தெரிந்தவைதான். எதுவுமே புதிதல்ல.
சென்னை மீது படையெடுக்க உள்ள முக்கியமான மூன்று பிரச்னைகள்: தாங்குவார்களா சென்னைவாசிகள்?

தற்போது சென்னையை மிக மோசமாக தாக்கவிருக்கும் 3 பிரச்னைகளும் ஓரளவுக்கு சென்னைவாசிகளுக்கு நன்கு தெரிந்தவைதான். எதுவுமே புதிதல்ல.

அவை, தமிழகத்தில் 24% மழைப் பற்றாக்குறை என்ற நிலையில், இது சென்னைக்கு 55% ஆக உள்ளது. மிகக் குறைந்த வடகிழக்குப் பருவமழை, அணை மற்றும் நீர்நிலைகளில் மிகக் குறைந்த அளவு நீர் இருப்பு, டிசம்பர் மாதத்திலேயே குறைந்து போன நிலத்தடி நீர்மட்டம் ஆகிய முப்படைகள்தான் மிக விரைவில் சென்னையை மிக மோசமான நிலையில் தாக்க உள்ளன.

நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் அனைத்தும், சென்னையில் பரவலாக நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஜூலை மாதம் முதல் படிப்படியாகக் குறைந்து சராசரியாக தற்போது 1 - 1.5 மீட்டர் அளவுக்குக் குறைந்திருப்பதை உறுதி செய்துள்ளது.

அதாவது மழை நிலவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ரெயின் சென்டர், 2015ம் ஆண்டு முதல் சென்னை நகரின் நிலத்தடி நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில், 70 சதவீத கிணறுகள் வரும் கோடைக்காலத்தில் முழுவதுமாக வறண்டுபோகும் என்று கணித்துள்ளது. ஆனால் இதே காலத்தில் கடந்த ஆண்டு வெறும் 25 கிணறுகள்தான் வறண்டு போயின. 

சென்னையில் குறிப்பாக கோயம்பேடு, வளசரவாக்கம், விருகம்பாக்கம், மாம்பலம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு 3 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு இதேப் பகுதிகளில் மிக மோசமான அளவில் அதாவது 7 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது என்று ரெயின் சென்டரின் இயக்குநர் சேகர் ராகவன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் படிப்படியாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்ததைக் காண முடிகிறது. தி.நகர், திருவல்லிக்கேணி, சூளைமேடு, மதுரவாயல் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1 மீட்டர் அளவுக்குக் குறையும். அடையாறு, வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் இது 7 மீட்டரைத் தொடும். இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் என்பது எலும்புக்கூடாகும் நிலை உள்ளதாகவும் அவர் எச்சரிக்கிறார்.

ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை பற்றாக்குறை, அதன் காரணமாக ஏரி, அணைகளில் நீர் இருப்புக் குறைவு போன்றவையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போகப் பெரியக் காரணங்களாக அமைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கனத்த இதயத்தோடு சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்த போது, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 4 ஏரிகளிலும் இருக்கும் ஒட்டுமொத்த நீர்  இருப்பு 1429 மில்லியன் கன அடியாகும். இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு 5002 மில்லியன் கன அடி நீர் இருப்பில் இருந்தது.

தற்போது இருக்கும் நீர் இருப்பையும், வீராணம் ஏரி நீர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து கிடைக்கும் நீரைக் கொண்டு சென்னையில் வெறும் 2 மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என்று மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 

இவற்றின் மூலம் சென்னையை மிகப்பெரிய பேரிடர் விரைவில் தாக்கவிருக்கிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது. வேறு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முன்னேற்பாடுகள், தற்காப்புகள் செய்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த முப்படைத் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? காலம் கடந்த பிறகு என்னதான் செய்துவிட முடியும்? 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com