கேள்விகளை எழுப்பும் 10 சதவீத இடஒதுக்கீடு?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பல கேள்விகளை எழுப்புகிறது. 
கேள்விகளை எழுப்பும் 10 சதவீத இடஒதுக்கீடு?


மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பல கேள்விகளை எழுப்புகிறது. 

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா நேற்று (செவ்வாய்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்றைய இரவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 323 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து, மசோதாவை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவையை மேலும் ஒரு நாள் (புதன்கிழமை) நீட்டித்தது. இந்த மசோதா மீதான விவாதம்  மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. 

இந்த மசோதாவுக்கு தகுதியானவர்களாக மத்திய அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை தகுதிகள், ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கவேண்டும். நகராட்சிக்குட்படுத்தப்பட்ட இடத்தில் 1000 சதுர அடிக்கும் குறைவாக நிலம் மற்றும் நகராட்சிக்குட்படாத இடத்தில் 2000 சதுர அடிக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கவேண்டும். 

ஆனால், இடஒதுக்கீடு தொடங்கப்பட்ட காலத்தில், கல்வி அல்லது சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கோ அல்லது குழுவினருக்கோ தான் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. காரணம்  இந்தியாவில், பொருளாதார ரீதியில் தனிநபர் மீதான பாகுபாடு இல்லை. சாதி ரீதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தான் பாகுபாடு உள்ளது. 

அதனால், இடஒதுக்கீட்டின் நோக்கமாக கருதப்பட்டது சாதி ரீதியில் ஒடுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கவேண்டும், அதன்மூலம், அந்த சமூகம், சமுதாயத்தில் மேம்படும் என்பது. இதன் அடிப்படையில் துவங்கப்பட்டது தான் தனித் தொகுதி. இதையடுத்து, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு முறையில், பொருளாதாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. 

சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களாக கருதுவதற்கு எதனை அடிப்படையாக கொள்ளவேண்டும் என்பதை ஆராய இந்தியாவில் 2 ஆணையங்கள் அமைக்கப்பட்டது. முதலாவது, காகா காலேல்கர் ஆணையம். காகா காலேல்கர் தலைமையிலான குழு 1953-இல் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில் சாதி ரீதியிலாகவே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதனால், சாதியின் அடிப்படையில் தான் சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கொள்ளமுடியும் என்ற வகையில் அறிக்கை சமர்பித்தது. 

பிறகு, 1978-இல் பிபி மண்டல் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமும், பொருளாதார ரீதியிலான சமூக கட்டமைப்பை முன்வைக்கவில்லை. சாதி ரீதியிலான கட்டமைப்பையே மண்டல் ஆணையமும் முன்வைத்தது.           

ஆனால், மத்திய அரசு தற்போது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு என்று மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இடஒதுக்கீடு என்ற முறையை உருவாக்கிய காலத்தில், அந்த முறையில், முற்றிலுமாக தவிர்க்கப்பட்ட ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போது இடஒதுக்கீடு வழங்குவது என்பது எப்படி இடஒதுக்கீடாகும்?

மேலும், இந்த மசோதாவில் ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் என்றால் மாதத்திற்கு சுமார் 66,000 ஆகிறது. மாதம் வருமானம் 66,000 ஆக இருக்கும் ஒரு நபரை எப்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய நபராக கருதமுடியும்?

மேலும், 1991-இல் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், மண்டல் கமிஷன் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நரசிம்ம ராவ் கொண்டு வந்த இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருதி அதை ரத்து செய்தது. அப்படி இருக்கையில்,  மத்திய அரசு அதே பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தற்போது எப்படி செயல்படுத்த முடியும் என்று எண்ணுகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com