தேவை... மதுபானக் கடைகள் அல்ல! மனநல ஆலோசனை  மையங்களே!

வரும்முன் காப்பது அரசின் கடமை. பலதுறைகளில் முன்னேற்றத்தையும், புதுமைகளையும் புகுத்தி வரும் அரசு, இளைஞர்,  யுவதிகள் நிறைந்துள்ள கல்வித்துறையில் உடனடியாக சிறப்பு மனநல ஆலோசனை மையங்களை துவக்குவது
தேவை... மதுபானக் கடைகள் அல்ல! மனநல ஆலோசனை  மையங்களே!

இளைஞர்களை நாடிச் சென்று, அவர்களிடையே கலந்துரையாடி மனமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வருங்கால இந்தியா வல்லரசாக மாறும் என்ற அசையா நம்பிக்கையுடன் இறுதி மூச்சுள்ளவரை ஓயாது உழைத்தவர் அறிவியல் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மேதகு அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்றைய இந்திய இளைஞர்களோ வேகமாக ஆதிக்கம் பெற்று வரும் மேலைநாட்டு நாகரீக மோகத்தில் மூழ்கி ராகிங், ஈவ் டீசிங்கில் ஈடுபடுவதும், மது, போதை வஸ்துகளுக்கு அடிமையாவதும் இன்டர்நெட் செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் அறிவியல் வளர்ச்சியை தவறாக கையாளும் சைபர் குற்றங்கள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகி பெருகி வரும் பாலியல் குற்றங்கள், திரைப்பட காட்சிகளை பார்த்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ,அதிகரித்து வரும் கொலை கொள்ளை, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பலவிதமான மோசடிகளில் ஈடுபடுபவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதின் மூலம் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் என பிரச்சினைகள் பெருகிக்கொண்டே போகிறது.

ராகிங், ஈவ் டீசிங் கொடுமையால் மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும் தேர்வு சமயத்தில் பெற்றோர்கள்,  வகுப்பு ஆசிரியர்களின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொள்வதும், சினிமா ஆசையில் வீட்டை விட்டு வெளியேறும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த சமூகத்தீமையை வேரோடு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு ஆவார்கள். வரலாறுகள் இன்றைய இளைஞர்களின் புகழையும், சாதனைகளையும் தான் கூறவேன்டுமே ஒழிய, அதிகரித்து வரும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையையும், குற்ற வழக்குகளையும் தண்டனைகளையும் கூறக் கூடாது.

மேற்கண்ட அவலநிலை மாற அனைத்து கல்வி நிலையங்களிலும், கல்லூரி மாணவ ,மாணவியர் தங்கிப் படிக்கும் விடுதிகளிலும், இளைஞர்கள் தங்கும் ஓய்வு விடுதிகளிலும் (YOUTH HOSTEL ) மனநல ஆலோசனை மையங்கள் (MENTAL HEALTH COUNSELLING CENTRE ) துவங்குவது அவசியம். தகுதியும் தேர்ச்சியும் பெற்ற மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், தன்னார்வலர்களின் வழிகாட்டுதலுடன் இம்மையம் செயல் படவேண்டும்.குறிப்பாக விடலைப் பருவத்தில் (ADOLESCENT PERIOD) மாணவ , மாணவியருக்கு பாலியல் உணர்வுகள் துளிர் விடும் பருவத்தில் , உடல், மன ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால், பல புதிருக்கும் பிரமிப்புக்கும் ஆட்படும் இவர்கள், சரியான வழிகாட்டுதல் இன்றி திசை மாறிச் செல்ல தூண்டல்கள் பல ரூபங்களில் இன்று அதிகரித்துள்ளது.

இந்த வயது ,பெற்றோரை சார்ந்திருக்கின்ற நிலையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்பட நினைக்கும் காலகட்டம். சக நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தவறான பாதையை நாடிச் செல்வதும், ஜாலி என்ற பெயரில் ஒரு முறை ருசி பார்த்துவிட்டு பின்பு விட்டு விடலாம் என்றும் அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வக்கோளாறால் போதை பொருட்களுக்கு அடிமையாதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர் பலர். எனவே SSLC, +2 அளவில் மனநல ஆலோசனை மையம் செயல் படுவது மிகவும் சிறந்தது

சட்டத்தின் கெடுபிடிகள் மூலம் ஈவ் டீசிங் போன்ற சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இளம் வயதினரை கைது செய்வதும் ,போலீஸ் விசாரணை, கோர்ட் விசாரணை என்பது மற்ற இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமையுமே தவிர இது ஆரோக்கியமான வழிகாட்டல் அல்ல!

மேலும் எல்லா இளைஞர்களும் இது போன்ற வன்செயல்களில் ஈடுபடுவது இல்லை. ஒருசில இளைஞர்களே இப்பிரச்சினைக்கு தலைமையேற்கின்றனர். அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக கண்டறிந்து, வகுப்பறையில் மற்றவர்கள் முன்பாக திட்டுவதும், கண்டிப்பதுவும், அடிப்பதுவும் தவறான அணுகுமுறையாகும். பரிவுடன் தனியே அழைத்துப் பேசி மனநல மையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும். தகுதியும் தேர்ச்சியும் பெற்ற உளவியல் ஆலோசகர்கள் பக்குவமாகவும் பரிவுடனும் பேசி அவர்களுடைய ஆழ்மன பதிவுகள், எதிர்பார்ப்புகள், ஆளுமை குறைபாடுகள், வீட்டுச்சூழல், வளர்ப்புமுறை, பெற்றோர்களின் நடவடிக்கை, அணுகுமுறைகளை ஆராய்ந்து , ஆலோசனை வழங்குவதின் மூலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிலைமையை உணரவும்,  தான் செய்வது தவறு என புரிந்து கொள்கிறார்கள். பெற்றோர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கப்படும்போது மனம் நிறைவடைந்து மேற்கொண்டு இது போன்ற சம்பவங்களில் கலந்து கொள்ளாமல், படிப்பதிலும் விளையாட்டுக்களிலும் ஆர்வம் திசை திருப்பப்படுகிறது.

உடற்பயிற்சி,விளையாட்டு N,C.C, N.S.S.  போன்றவற்றில்  மாணவர்களை ஈடுபடுத்துவது போல் மாணவர்களின் மனநிலையை சீர்படுத்தி ஒழுங்குபடுத்தவும், நல்ல குறிக்கோள்களை அமைத்து கொண்டு சரியான பாதையில் வழி நடத்தி செல்ல, மனநலம் சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகள், யோகா, தியானம், பிரார்த்தனை, ஹிப்னாடிச பயிற்சி, தன்னம்பிக்கை வளர உதவும் பயிற்சிகள் அனைத்து கல்வி நிலையங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். இவற்றின் மூலமாக குணக் கோளாறுகளையும் (CHARACTER DISORDER ) நடத்தைக் கோளாறுகளையும் (CONDUCT DISORDER ) ஆரம்பத்திலேயே சரி செய்து உடல்நலமும் மனா நலமும் சீரடைந்து நல்ல ஒழுக்கமுள்ள மாணவர்களையும் இளைஞர்களையும் உருவாக்கலாம்.

கல்வி நிறுவனங்களில் அடிக்கடி பெற்றோர்களை அழைத்து பேசி ,ஆலோசனை வழங்குவதின் மூலம் ,குறைகளை நிவர்த்தி செய்யும்போது குடும்ப சூழல் அமைதியாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைகிறது.குழந்தைகள் அதிகம் நேசிக்கவும் பெற்றோர்களுடனும் ,உறவினர்களுடனும் அன்பாகவும் பாசமாகவும் , பிரியத்துடனும் நடந்து கொள்கிறார்கள்.

மருத்துவத்துறை பல முன்னேற்றங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மனநலம், மனநல மருத்துவம் மனோதத்துவத்துறையில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். தகுதியும், தேர்ச்சியும் பெற்ற மனநல மருத்துவரையோ, உளவியல் ஆலோசகர்களையோ, தகுதி வாய்ந்த மனநல காப்பகங்களையோ நாடிச்சென்று சிகிச்சை பெறவும், முறையான ஆலோசனை பெறவும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு படித்தவர்களும் விதி விலக்கல்ல. இந்த நிலை முற்றிலும் மாறவேண்டும். இன்றைய சூழலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மாந்த்ரீகம், பில்லி சூனியம், செய்வினை, நேரம் சரியில்லை என சாமியார்களையும், தரமற்ற விளம்பரங்களை பார்த்து தகுதியற்றவர்களை நாடிச்சென்று பணம் நகைகளை இழந்து ஏமாற்றம் அடைகிறார்கள். இறுதியில் நோய் முற்றி தற்கொலை செய்து கொள்பவர்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த மனநல காப்பகம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது .சரியான நேரத்தில் நோயாளியின் மனநிலையை கண்டறிந்து சிகிச்சைக்கு மனநல காப்பகத்தில் சேர்க்கும் போது ,நீண்ட நாள் மருந்துகள் ,தொடர் சிகிச்சை ,ஆலோசனைகள் குடும்பங்கத்தினர்களின் ஒத்துழைப்பு மூலம் பரிபூரண குணம் பெறலாம்.அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து மாவட்ட தலை நகரங்களில் சிறிய அளவில் மனநல காப்பகங்களை அமைப்பது அவசியம்.பள்ளி பருவத்திலேயே மனநலம்,மன நோய் குறித்து ,Cகளை மனநல ஆலோசனை மையங்களின் மூலமாக நடத்தலாம். பொது மக்களிடையே மனநோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மூலம், மூட நம்பிக்கைகளை உடைத்தெறியலாம். நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அந்தரங்கங்கள் ரகசியமாக பாத்து காக்கப்படும்.திரை படங்களில் பெண்கள் கேலி செய்யப்படுவதையும் ,ராக்கிங் கட்சிகளையும் மித மிஞ்சிய வன்முறை காட்சிகளையும் தடை செய்ய வேண்டும். தற்கொலை மரணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் இறங்குபவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் சமூக நலன் கருதி அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்த வேண்டும்இதுபோன்ற செய்திகள் ,முயற்சிகள் ,செயல்கள் மற்றவர்களுக்கு மனரீதியான தூண்டுகோலாகிறது.நாகரீக வளர்ச்சிக்கேற்ப கல்லூரி மாணவிகள் சினிமா நடிகைகளை போலவும் ,மாடலிங் போல ஆடை அணிவதை தவிர்ப்பதும்,மற்றவர்கள் கிண்டல் செய்ய தூண்டும்படியான ஆடைகளை அணியாமல் கவுரவமான ஆடைகளை அணிவது நலம்.

வரும்முன் காப்பது அரசின் கடமை. பலதுறைகளில் முன்னேற்றத்தையும், புதுமைகளையும் புகுத்தி வரும் அரசு, இளைஞர் , யுவதிகள் நிறைந்துள்ள கல்வித்துறையில் உடனடியாக சிறப்பு மனநல ஆலோசனை மையங்களை துவக்குவது தற்போதைய அவசர கடமையாகும்.பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மாணவர் தங்கும் விடுதிகள் ஓய்வு இல்லங்களில் இம்மையம் செயல்படுவதன் மூலம் வளர்ந்து வரும் இளைஞர்களின் மத்தியில் ஏற்படும் பல சமூக பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளியெறிய முடியும். முறையான வழிகாட்டுதலின்படி இளைஞர்களின் சக்தியை ஆக்கபூர்வமான வழியில் செயல்படுத்துவதன் மூலம் வருங்கால இந்தியா வளமான வல்லரசு

இந்தியாவாக உருவாகும் என்பதில் ஐயமில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com