Enable Javscript for better performance
Why did Sujatha forget to save them?! |சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்?- Dinamani

சுடச்சுட

  

  அந்தக் கணவன், மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம்! சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்?

  By RKV  |   Published on : 07th January 2019 11:44 AM  |   அ+அ அ-   |  

  nadhiyoram_sujadha

   

  நேற்று யூ டியூப் பிஹைண்ட்வுட்ஸ் டிவியில்  ‘நதியோரம்’  என்றொரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. இந்தப் படத்தின் டைட்டில் கார்டு என்னை எப்படி ஈர்த்தது என்று தெரியவில்லை. சும்மா பார்த்து வைப்போமே என்று தான் அதை ஓட விட்டேன். பார்க்கத் தொடங்கும் போது தெரியாது அது சுஜாதாவின் சிறுகதை என்று. ஆனால் கிளைமேக்ஸில் ஒப்புக் கொள்ள முடிந்தது. சுஜாதாவைத் தவிர வேறு யாராலும் இப்படியொரு கதையை நச்செனச் சொல்லி முடிக்க முடியாது என்பதை. கதை மிக எளிமையானது.

  வடக்கில் வேலையில் இருக்கும் பிராமண இளைஞர் ஒருவருக்கு அவரது அப்பா பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். எல்லாம் முடிவான பிறகே மகனை அழைத்து பெண்ணின் புகைப்படத்தை அளித்து ‘இவள் தான் பெண், இந்தத் தேதியில் திருமணம் நீ வந்து தாலி கட்டு என்கிறார். மகனோ, இப்போது எனக்குத் திருமணம் வேண்டாம் என மறுக்க, தகப்பனார் ஒரேயடியாக ‘எல்லாம் பேசி முடிச்சாச்சு...  நீ வந்து தாலி கட்டறேன்னா, கட்டறே.. அவ்வளவு தான்’ என்று கட்டளையிடுகிறார்.

  அந்தப்பக்கம் பெண் வீட்டில் ‘பையனின் புகைப்படத்தை பெயருக்குக் காட்டி அவளது சம்மதமும் வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. கூடக் கொஞ்ச நேரம் புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் ஆசையில் பெண் இருக்கையில், அவளது தந்தை... வெடுக்கென புகைப்படத்தை அவளிடமிருந்து பிடிங்கி... எத்தனை நேரம் இப்படி உத்துப் பார்த்துண்டு இருப்ப’ கல்யாணத்துக்கெல்லாம் உன் சம்மதம் அநாவசியம் என்பதாக நடந்து கொள்கிறார்.

  அந்தப் பக்கம் பையனுக்கு பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாது.

  இந்தப்பக்கம் பெண்ணுக்கும் பையனைப் பற்றி எதுவும் தெரியாது. அப்படியென்றால் கதை நிகழும் காலம் நமக்குத் தெரியாமலா போய்விடும்.. ஆமாம் இந்தக் கதை நிகழ்வது 1980 களில்.

  நிகழுமிடம் சென்னை என்கிறார்கள் (நம்பத்தான் முடியவில்லை). சென்னையை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமை என்பதைக் காட்டிலும் வெகு குளுமையாக இருக்கிறது என்று சொல்லலாம்.

  என்னால் நம்ப முடியாததாக இருந்தது... நாயகன் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியை அழைத்துக் கொண்டு காலற நடந்து சென்று அமரும் ஆற்றங்கரையைத் தான். சென்னையில் இப்படியொரு ஆற்றங்கரை 80 களில் இருந்ததா? அதை சுஜாதா பார்த்து ரசித்து தனது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறாரா? என்பது தான். ஏனென்றால் இப்படியான ஆறுகளெல்லாம் தெற்கத்திப் பக்கம் மட்டுமே காணக் கிடைத்த நற்கொடைகள் என்று நினைத்திருந்த காலம் அது.

   

   

  ஒருவேளை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், அடையாறு ஏரியாக்களில் இப்படியொரு பரிசுத்தமான ஆறு இருந்ததோ என்னவோ?

  சரி மேலே செல்வோம்... கதையில் தம்பதிகள் 80 களைச் சேர்ந்தவர்கள் என்றறிய மேலுமொரு ஆவணமாக முதலிரவன்று பால் சொம்புடன் அறைக்குள் நுழையும் மணப்பெண், கணவன் உத்தரவின் பேரின் அவனருகில் கட்டிலில் அமர்ந்த போதும், அவன் திரும்பி இவளை நோக்கி கை நீட்டுகையில் உடனே வெட்கத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்து விடுகிறாள். இதைக் கண்டு அந்தக் கணவனுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறது. அவன் அவளை ஒன்றும் செய்யவில்லை. அப்படியே இருவரும் தூங்கி எழுந்து ஓரிரு நாட்களுக்குப் பின் மணமகனின் அம்மா, அப்பா ஊருக்குச் சென்ற பின் காலாற நடந்து ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.

  இருவரும் பேசிப் புரிந்து கொள்ளத் துவங்குவது அந்த நொடியில் இருந்து தான்.

  அவளுக்கு அவனைப்பற்றி... அவனது செயல்களைப் பற்றி அறிந்து கொள்வதைக் காட்டிலும் அவனது அம்மா சொல்லி விட்டுச் சென்ற ‘பூணூல் விஷயம்’ மட்டுமே மனதில் நிற்கிறது.

  எனவே தன்னிடம் மற்றவர்கள் அவனைப் பற்றிச் சொல்லிச் சென்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அவனைப் புரிந்து கொள்ள யத்தனிக்கிறாள்.

  யத்தனிக்கிறாள் என்பதை விட அவன் இனி தன்னுடைய உரிமை, தன்னுடைய பொறுப்பு என்பதாகக் கற்பனை செய்து நம்பத் தொடங்கி... நீங்க ரொம்ப கோபக்காரராமே... உங்கம்மா சொன்னாங்க, பூணூல் கூடப் போட்டுக்க மாட்டீங்களாம். என்கிட்ட சொல்லி கட்டாயம் பூணூல் போட்டுக்கச் சொல்லி ஒத்துக்க வை’ ந்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதனால நீங்க கண்டிப்பா பூணூல் போட்டுண்டே ஆகனும். அப்போ தான் என்னையும், உங்களையும் சாமி நல்லா பார்த்துக்கும். என்கிறாள் கொஞ்சம் கோபமாக.

  கோபப்படும் மனைவியை சாந்தப்படுத்த கணவனாகப்பட்டவன் என்ன செய்ய வேண்டுமென்றால்? 

  சுஜாதா சொல்படி முத்தமிட்டு விடுவேன்.. என்று மிரட்டினால் போதும் போல.

  உடனே அவள் சிரித்து சமாதானமாகி விடுகிறாள்.

  அப்புறமென்ன இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இனிய இல்லறத்தில் சந்தோஷமாக இறங்கிச் சிறகடித்துப் பறந்திருப்பார்கள் என்று தானே எதிர்பார்க்கிறீர்கள்.

  அது தான் இல்லை. பிறகு தான் ட்விஸ்ட்டே!

  மிக மிகத்துக்கமான முடிவு தான். ஆயினும் மிக அருமையானதொரு சோகக் கவிதையை வாசித்தாற் போன்ற நிறைவு. 

  சுஜாதா ஏன் அவர்களை வாழ விட்டிருக்கக் கூடாது? என்ற கோபம் மிஞ்சியது உண்மை. அது தான் இந்தச் சிறுகதையின் வெற்றி.

  குறும்படத்தின் வெற்றியும் கூட.

  விருப்பமிருப்பவர்கள் பார்க்கலாம்.

  சுஜாதாவின் ‘ஒரே ஒரு மாலை’ சிறுகதைக்கு நியாயம் செய்திருக்கிறது இக்குறும்படம்!

  * ஒரு சிறுகதையை அதன் ஜீவன் சிதையாமல் குறும்படமாக்கியிருப்பதில் இயக்குனர் அன்பிளமதியைப் பாராட்டலாம். வெகு முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இக்குறும்படத்தில் ஒளிப்பதிவாளர் திலீபன் பிரபாகர். கதையின் ஜீவனைச் சிதைக்காது நம் கண்களறியாது ஒசிந்து நகர்கிறது கேமிரா. புதுக் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இருவரும் பாத்திரமறிந்து  நடித்து 80 களில் புதுக்குடித்தனம் துவக்கவிருக்கும் தம்பதிகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அந்தப் பெண்ணின் நீளக்கூந்தல் பொறாமை கொள்ள வைக்கிறது.


  Video Courtesy: Behindwoods TV

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai