அடடே ஆச்சர்யம்! உங்கள் மீனவன் மூக்கையூர் சொல்லும் சங்கதி கேளுங்கள்!

அடடே ஆச்சர்யம்! உங்கள் மீனவன் மூக்கையூர் சொல்லும் சங்கதி கேளுங்கள்!

யூடியூபை சாமானியர்களும் பயனுள்ள முறையில் இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

யூ டியூபில் உங்கள் ‘மீனவன் மூக்கையூர்’ என்று தேடிப் பாருங்கள். மீனவ நண்பரொருவர் கடல் சார்ந்த பல விஷயங்களைப் பற்றி சின்னச் சின்னதாக விடியோ பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். பார்க்கப் பார்க்க அதிசயமாக இருக்கிறது. அவர் தான் அறிந்த விஷயங்களைத் தனது வாழ்வாதாரமான கடல் சார்ந்து பலருக்கும் அறியத் தருகிறார். ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு பிரத்யேகமான தகவலைத் தருகிறது. 

  • சாப்பிடக்கூடாத நண்டுகள் லிஸ்ட்
  • இரவு மீன் பிடிப்பது எப்படி?
  • அறிய வகை கடல்வாழ் உயிரினங்கள்...
  • சங்கு கறி சமைப்பது எப்படி?
  • மீனை மஞ்ச ஊத்தி அவிப்பது எப்படி?
  • ஐந்து கிலோ கடல் பாம்பு
  • சங்கு சமைப்பது எப்படி?
  • கடலில் மீன் பிடித்து ஸ்பாட்டில் மீன் சுட்டு சாப்பிடும் அனுபவம்
  • நல்ல மீன் எது? கெட்டுப்போன மீன் எது?
  • நல்ல பாம்புக்கு இணையான விஷம் கொண்ட கடல் வாழ் உயிரினம்
  • நங்கூரம் பயன்படுத்துவது எப்படி?
  • கடல் பூவின் அழகு...
  • ஆமையின் வரலாறு...
  • மீன் பிடிக்கும் போட்டை சுத்தம் செய்வது எப்படி? இத்யாதி... இத்யாதி....

இப்படிப் பல விஷயங்களை லைவ் வீடியோக்களில் விளக்குகிறார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

சாம்பிளுக்கு ஒரு காணொளி லிங்க்...

மேற்குறிப்பிட்டுள்ள காணொளியில்,

சங்கைப் பற்றிய பல அபூர்வமான தகவல்களை இவர் பகிர்ந்திருக்கிறார். சங்கில் ஆண் சங்கு, பெண் சங்கு என 2 வகை உண்டு.  சங்கின் வாய்ப்பகுதியில் மெல்லிய கோடு இருந்தால் அது பெண் சங்கு என்றும் கோடு இல்லாது இருந்தால் அது ஆண் சங்கு என்றும் அடையாளம் காணப்படுகிறது. மேலுள்ள கூம்பு போன்ற வடிவமைப்பில் கீழ்ப்பகுதி வரிகளின் மேல் மஞ்சள் பூத்திருந்தால் அது தாய் சங்காகக் கருதப்படுமாம்.  அந்த வகைச் சங்குகளுக்கு மார்க்கெட்டில் வரவேற்பு அதிகமிருக்காது. இது தவிர சங்கில் இடம்புரி, வலம்புரி என்றும் இரண்டு விதம் உண்டு.

  • இடப்பக்கம் வளைந்திருந்தால் அது இடம்புரிச் சங்கு,
  • சங்கு வலப்புறம் திரும்பி இருந்தால் அது வலம்புரிச் சங்கு.

இதில் வலம்புரிச்சங்கு கிடைத்தற்கரியது. மிக விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. 

சங்கு ஒரு கடல்வாழ் உயிரினம். சங்கின் உள்ளே வாழும் சதை நிறைந்த உயிரினத்திற்கு எலும்புகள் கிடையாது. அவை மிக மிக மெதுவாக ஊர்ந்து வாழக்கூடியவை. ஆழ்கடல் பகுதியில் வாழக்கூடிய சங்கு கவிழ்ந்து விட்டால் மெல்லச் சாகும் தன்மை கொண்டது. நத்தை போல ஓட்டை முதுகில் சுமந்து திரிந்தாலும் மீன் பிடிக்கும் வலைகளில் சிற்சில சமயங்களில் சிக்கும் வழக்கம் உண்டு. 

பெங்காளிகளுக்கு சங்கு ஆபரணங்கள் தயாரிக்க உதவுகிறது.

தமிழ்நாட்டிலிருந்தும் இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் இருந்தும் கொல்கத்தாவுக்குச் செல்லும் சங்குகள் அங்கு அழகழகான ஆபரணங்களாக மாற்றப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன என்கிறார் இந்த மூக்கையூர் மீனவர்.

யூடியூபை சாமானியர்களும் பயனுள்ள முறையில் இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com