Enable Javscript for better performance
If you this secrets of sta|இனி நீங்க ஹோட்டல், ஹோட்டலா போய் அசைவம் சாப்பிட நிச்சயம் யோசிப்பீங்க பாஸ்!- Dinamani

சுடச்சுட

  

  இதெல்லாம் தெரிஞ்சா... இனி நீங்க ஹோட்டல், ஹோட்டலா போய் அசைவம் சாப்பிட நிச்சயம் யோசிப்பீங்க பாஸ்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 25th October 2018 01:04 PM  |   அ+அ அ-   |  

  barbique

   

  ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்ற சகோதரர் ஒருவர்... தற்போது அத்துறையில் பணியில் இல்லை. மேற்கொண்டு எம் பி ஏ பட்டம் பெற்றுத் தற்போது வங்கித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மதுரையில் பிரபல கல்லூரியொன்றில் இளநிலை ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று கொண்டிருக்கையில் இரண்டாம் ஆண்டின் இறுதியில் களப் பயிற்சி அனுபவத்திற்காக அலகாபாத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பயிற்சிக்காக அனுப்பப் பட்டார். தனியாக அல்ல குழுவாகத்தான். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சிக்காலங்கள் அத்தனை உவப்பானதாக இருக்காது என்பது பெரும்பாலான ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்களின் கருத்து. ஏனெனில் அங்கு பயிற்சிக் காலங்கள் என்பவை ஹாஸ்பிடாலிட்டி, உணவுத்தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பயிற்சிகளுக்காக மட்டும் அல்ல, அந்தக் காலங்கள் உண்மையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களின் கோர முகங்களைப் பற்றி அறிந்து கொள்ள அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தவிர்க்க முடியாத வாய்ப்பு என்று கூட சொல்லலாம். 

  குறிப்பிட்ட நண்பர் அலகாபாத் நட்சத்திர ஹோட்டலில் பயிற்சிக்காகச் சென்ற போது அங்கே பின்பற்றப் பட்டதாகச் சொன்ன ஒரு வழிமுறையைக் கேட்ட போது பீதி வயிற்றைக் கலக்கியது. அங்கே பார்ட்டிகளுக்காக தயாராகும் அசைவ உணவு வகைகள் அவற்றுக்காக ஆர்டர் செய்தவர்கள் வருகைக்காக ஃப்ரோஸன் அறையில் மசால் தடவி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். பார்ட்டி ஹால் புக் செய்து ஆர்டர் அளித்தவர்கள் வந்து நிகழ்ச்சி சரியாகத் தொடங்கி விட்டால் பிரச்னையில்லை. அன்றைய அசைவ உணவுகள் அன்றே காலியாகி விடும். ஆனால், சில சமயங்களில் பெரிய மனிதர்கள், அரசியல் பிரபலங்கள் திட்டமிடும் பார்ட்டிகள், விழாக்கள், திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டால் அவர்களது விழாக்களுக்கென்று தயாரான ஸ்பெஷல் அசைவ உணவுகளை குப்பையிலா கொட்ட முடியும். மசால் தடவி தயாராக இருக்கும் கோழி, ஆடு, மீன், இறால், நண்டு, நத்தை, சிப்பி, எல்லாமும் மசாலாக்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டு மீண்டும் ஃப்ரோஸன் அறைக்குள் அதி உயர் குளிர்நிலையில் சேமிக்கப்பட்டு விடுமாம். மீண்டும் தேவைப்படும் போது எடுத்து மசால் தடவி பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்வார்கள் என்று அந்த நண்பர் சொன்னார்.

  இதைக் கேட்ட போது நம்மூர் பார்பிக்யூ உணவகங்களும், தந்தூரி, கபாப், கிரில் அசைவ உணவகங்களும் கண்களில் நிழலாடின.

  அங்கெல்லாம் விதம் விதமான அசைவ பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்தப்படும் மாமிசங்கள் எங்கே, எப்போது, எப்படி வாங்கப்பட்டனவோ? அதைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்காமலே நாம்... நம் தட்டில் வந்து விழும் வகை... வகையான ரோஸ்டுகளையும், ஃப்ரைகளையும், கபாப்களையும், முர்க் மசாலாக்களையும் ஒரு கை அல்ல... பலகை பார்த்து விடுகிறோம். பிறகு வீட்டுக்கு வந்து செரிமானமாகாமலோ அல்லது வயிற்றுப் போக்கினாலோ அவஸ்தைப்படுவதும் நிகழ்ந்தாலும் கூட... நம்மால் அத்தகைய உணவகங்களின் மீதான மோகத்தைக் குறைத்துக் கொள்ள முடிவதே இல்லை. காரணம் சுவை. 

  இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாரம் ஒருமுறையாவது குறைந்தபட்சம் மாதம் இருமுறைகளாவது ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்தும் பழக்கம் மிகப் பிடித்த ஹாபியாகி விட்டது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், பிரபல ஹோட்டல்களில் நாம் ஆர்டர் செய்யும் அசைவ உணவு வகைகள் அனைத்தும் அன்றன்றே வாங்கப்பட்டு அப்படியப்படியே ஃப்ரெஷ் ஆக நமக்கு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன என்று. தயவு செய்து இப்படி ஒரு நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். நாம் ஹோட்டல்களில் உண்ணும் எந்த ஒரு உணவு வகையும் ஃப்ரெஷ் ஆக நமக்குத் தயாராவதில்லை. அவை எப்படியும் இரண்டு நாட்களாவது குறைந்த பட்சம் ஒரு நாளாவது பழசான மாமிசமாகத் தான் இருக்க முடியும். அதிலும் இம்மாதிரியான நட்சத்திர ஹோட்டல்கள் எனில் அங்கு அசைவ உணவுகளைக் குறைந்த பட்சம் 6 மாதங்கள் வரை கூட ஃப்ரீஸ் செய்து வைத்துக் கொள்ளும் வசதி உண்டு என்கிறார்கள். சில செஃப்கள் கூறுகிறார்கள் அதி உயர் குளிரில் சேமிக்கப்பட்ட அசைவ உணவுகள் ஃப்ரெஷ் ஆக கிடைக்கும் அசைவ உணவு வகைகளைக் காட்டிலும் ஹைஜீனிக்காகவே இருக்கும் என்று, ஆனால், அதை எப்படி நம்புவது?!

  ஃப்ரோஸன் அறையில் உறைய வைத்து விட்டால் அதில் கிருமிகளின் பெருக்கம் ஏற்படாது தவிர்த்து விடலாம் என்று சிலர் கருதலாம். நிச்சயமாக இல்லை. இப்படியான உணவு வகைகளை சுவை கருதி அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமெனில் கடைசியில் இந்தப் பழக்கம் கேன்சரில் கொண்டு விடத்தக்கது என உணவியல் வல்லுனர்கள் பலர் பல்வேறு சந்தர்பங்களில் நமக்கு அறிவுறுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், ஹோட்டல் உணவுப் ப்ரியர்களான நாம் தான் அதைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. 

  ஃப்ரோஸன் உணவுகளின் பாதக அம்சங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்;

  ஃப்ரோஸன் உணவு வகைகளில் ஹெல்த் அனுகூலங்கள் மிக மிகக்குறைவு. ஏனெனில் ஃப்ரெஷ் ஆன அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய சத்துக்கள் அப்படியேவோ அல்லது சற்றுக் குறைவாகவோ ஃப்ரோஸன் உணவு வகைகளில் கிடைக்கும் என்று நம்ப முடியாது. சில வகை உணவுகளில் நாள்பட, நாள்பட சத்துக்கள் வெகுவாகக் குறைந்து கடைசியில் வெறும் சக்கை மட்டுமே கூட மிஞ்சலாம். அவற்றுடன் கார சாரமான மசாலாக்களை கலப்பதால் அவை சுவையாக இருக்குமேயன்றி சத்தானவையாக இருக்குமென்று கருத முடியாது.
  அதோடு ஃப்ரோஸன் உணவு வகைகளில் கலக்கப்படும் சோடியத்தின் அளவு மனித ஆரோக்யத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. பலவகையான ஃப்ரோஸன் உணவு வகைகளில் 700 மில்லி கிராம் முதம் 1800 மில்லி கிராம் வரை சோடியம் சேர்க்கப்படுகிறது. ஒரு மனிதன் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய சோடியத்தின் அளவு 2300 மில்லிகிராம் மட்டுமே. இந்த அளவு நாள் முழுக்க நாம் உண்ணும் மூன்று வேளை உணவுக்கும் சேர்ந்து அளவிடப்படுகிறது. ஆனால் ஃப்ரோஸன் உணவு வகைகளை ஒரே ஒரு முறை உண்டாலும் போதும் அதிக அளவில் சோடியம் சேருமென்றால் அவற்றை நாள் முழுவதும் நாம் உண்ணக்கூடிய ஃப்ரோஸன் உணவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய சோடியத்தின் அளவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

  எனவே இனிவரும் நாட்களில் மேற்கண்ட உணவகங்களில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ்வாகவும் ஸ்பெஷலாகவும் கிடைக்கக் கூடிய அசைவ உணவு வகைகளையும் கூட வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று கஷ்டப்பட்டாவது கற்றுக் கொண்டு செய்து ருசிப்பது மட்டுமே நல்லதென்று தோன்றுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai