‘பிறவி மேதை’ சிறுவனை ஆதரித்து இலவசக் கல்வியளிக்க ஒப்புக் கொண்ட கர்நாடகத் துறவி!

நன்கு கற்றறிந்த பெற்றோருக்குப் பிறந்த நகரத்துக் குழந்தைகள் பிறவி மேதைகளாக திகழ்வதில் ஆச்சர்யம் கொள்ள ஏதுமில்லை. முகமது யூசுப் போன்ற கிராமத்து கூலித்தொழிலாளி பெற்றோருக்குப் பிறந்து பிறவி மேதையாகத்
‘பிறவி மேதை’ சிறுவனை ஆதரித்து இலவசக் கல்வியளிக்க ஒப்புக் கொண்ட கர்நாடகத் துறவி!

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த குழந்தை மேதை முகமது யூசுபை பற்றித் தெரியுமா உங்களுக்கு? ஆசிரியை கணிதம், அறிவியல், மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் என எந்தப் பாடத்தில் இருந்து கேள்விகளை எழுப்பினாலும் சற்றும் தயங்காது ஆசிரியை கேள்வி கேட்டு முடிப்பதற்குள்ளாகவே பதிலுடன் நிற்கிறான் இந்தச் சிறுவன். அவனது பதில் அளிக்கும் திறன் கண்டு அவனுக்கு கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் ‘ இவனென்ன தெய்வப் பிறவியோ’ என வியந்து போய் நிற்கிறார்கள். காரணம் அவனது வயது வெறும் 5 மட்டுமே! அதுமட்டுமல்ல முகமது யூசுப்பின் அம்மா, அப்பா இருவருமே பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளி சென்று படிக்க இயலாத அளவுக்கு வறுமையில் உழல்பவர்கள். நகரத்துப் பெற்றோர்களைப் போல தங்களது குழந்தையை டியூசன் செண்ட்டருக்கு அனுப்பியோ அல்லது தாங்களே கற்றுத் தந்தோ மேதையாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஞானமும் இல்லை... நேரமும் இல்லை. பிறகெப்படி சிறுவன் தான் இதுவரை படித்தறியாத விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்டால் கூட உடனடியாக டக் டக்கென்று பதில் சொல்கிறான் என்பது தான் அவனது ஆசிரியப் பெருமக்களுக்கு  மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் கூட மிகப்பெரிய ஆச்சர்யம். இப்படி கற்றுத்தராமலே தங்கள் மகன் 5 வயதில் நடமாடும் என்சைக்ளோபீடியா போல திகழ்வது அவனது பெற்றோர்களுக்கு பெருமகிழ்ச்சி. 

குழந்தை மேதை முகமது யூசுப்பின் தந்தை யமனுர்சாப் நந்திபுரா டிரைவராகப் பணிபுரிகிறார். அம்மா ரோஜா பேஹம் கிராமத்தில் வயல் வேலைகளில் ஈடுபடும் ஒரு விவசாயக்கூலி. தங்களது வறுமை நிலை குழந்தையின் மேதமைத்தனத்துக்கு தடையாக அமைந்து விடக்கூடாது என்று எண்ணிய யமனுர்சாப் நந்திபுரா நந்திபுராவில் இயங்கி வரும் சிரந்தேஸ்வரா வித்யா சமஸ்தே எனும் கல்வி நிலையத்தை அணுகினார். ஹாகரிபொம்மனஹள்ளியில் இயங்கும் அப்பள்ளியில் தங்களது மகனைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி யமனுர்சாப் அக்கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வரும் மகேஸ்வர ஸ்வாமிஜியை அணுக... அவரோ பள்ளியில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் சிறுவனின் எதிர்காலக் கல்விச் செலவையும் தங்கள் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று உறுதியளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். ஸ்வாமிஜி... சிறுவன் முகமது யூசுப்பிடம் கேள்விகள் கேட்க, அதற்கு சிறுவன் கேள்விகள் முடியுமுன்னே டணார், டணாரென பதிலளிக்கும் காணொளி தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. சிறுவனைப் பற்றிப் பேசும் போது ஸ்வாமிஜி தெரிவித்தது... இந்தத் தலைமுறை குழந்தைகள் குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிராமப்புறக் குழந்தைகள் வெகு சூட்டிகையானவர்கள், அவர்களுக்கு தேவை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சரியான வழிகாட்டல் மட்டுமே... அவர்களை சரியான வகையில் நல்வழிப்படுத்த ஆட்கள் இருந்தால் போதும் உரமிக்க திறமிக்க அடுத்தடுத்த தலைமுறை உருவாக்கப்படுவதற்கான அஸ்திவாரத்தை அவர்களே இடுவார்கள். இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை என்னால் முடிந்த நன்மைகளை எல்லாம் நான் அவனுக்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார். தற்போது ஸ்வாமிஜியின் அன்புக்குரிய மாணவனாக பள்ளியில் வலம் வரும் முகமது யூசுப் விரைவில் அப்பள்ளியின் தலை சிறந்த மாணவன் எனும் நற்பெயரை அவர்களுக்குப் பெற்றுத்தருவான் எனும் நம்பிக்கை அங்கிருப்பவர்களின் பார்வையில் தெரிந்தது.

நன்கு கற்றறிந்த பெற்றோருக்குப் பிறந்த நகரத்துக் குழந்தைகள் பிறவி மேதைகளாக திகழ்வதில் ஆச்சர்யம் கொள்ள ஏதுமில்லை. முகமது யூசுப் போன்ற கிராமத்து கூலித்தொழிலாளி பெற்றோருக்குப் பிறந்து பிறவி மேதையாகத் திகழ்வது சவாலான விஷயம். இச்சிறுவனுக்கு மட்டும் சரியான, முறையான வழிகாட்டலும் உதவியும் கிடைக்குமாயின் நிச்சயம் வருங்காலத்தில் இவனொரு மிகப்பெரிய ஆளுமையாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்கிறார்கள் முகமது யூசுப்பை பற்றி அறிந்தவர்கள். அவர்களது நம்பிக்கை மெய் தான் இல்லையா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com