குற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன!: லீனா மணிமேகலை!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 02nd November 2018 06:22 PM | Last Updated : 02nd November 2018 11:44 PM | அ+அ அ- |

நம் சமூகத்தில் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன் வந்து பேசும் போதெல்லாம் ‘பேசினால் உங்களுக்குத்தான் அசிங்கம்’ எனும் ஆயுதம் தொடர்ந்து அப்பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்ப் பத்திரிகைகளைப் பொருத்தவரை மீடூ வை சர்ச்சைக்குரிய அல்லது பரபரப்பான செய்தியைத் தாங்கிய ஒரு விஷயமாகத்தான் அணுகுகின்றன. ஆனால் அது அப்படி அணுகப்படத் தக்க விஷயமல்ல. ‘நேம் தெம்... ஷேம் தெம்’ (Name them... Shame them) என்பதற்கேற்ப பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் தான் அவ்விஷயம் குறித்து அவமானப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதில் எந்த விதமான அவமானமும் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த மீடூ இயக்கம். நம் சமூகத்தில் பாலியல் தொடர்பான விஷயங்கள் அனைத்துமே மூடு மந்திரமாகவோ அல்லது பேசத்தக்க விஷயமல்ல என்பது போன்றோ தான் கையாளப்படுகிறது. இந்தியா மாதிரியான வேறுபாடுகள் நிறைந்த நாட்டில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல் பற்றி வெளியில் சொன்னால் உடனடியாக அவளை நோக்கி வீசப்படும் கேள்வி...
நீ என்ன செய்தாய்? என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தலை வெளியில் சொல்லத் தயங்குவார்கள். அதைத்தான் தங்களது மிகப்பெரிய ஆயுதமாக இந்த ஆணாதிக்க சமூகம் இதுவரை பயன்படுத்தி வந்தது.
அப்படியான நிலையில், இது பேசக்கூடிய விஷயம் தான். இந்தத் தவறைச் செய்தவர்கள் தான் இதற்காக அசிங்கப்பட வேண்டும். பெண்ணின் உடலுக்கு மட்டுமே கற்பு இருந்தாக வேண்டும் என்று கற்பித்து விட்டு ஆணுக்கு அதில் சுதந்திரமாக விலக்கு அளித்து தப்பித்துக் கொள்ளும் மனோபாவம் இனியும் வேண்டாம். ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி உடல் ரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமல்ல கருத்து ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ கூட பாலியல் அச்சுறுத்தல் செய்வது தவறு. அப்படியான தவறுகள் நேரும் பட்சத்தில் அதை தைரியமாக
பொதுவெளியில் பகிர்ந்து அதனால் நேரக்கூடிய அதிகார பலம் பொருந்திய எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் சக்தியை பாதிக்கப்பட்ட பெண்கள் பெற வேண்டும் என்பது தான் மீடூவின் ஒரே நோக்கம்.
அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாகவே இருக்கிறது லீனா மணிமேகலையுடனான நேர்காணல்.
நேர்காணலை முழுமையாகக் கண்டு விட்டு வாசகர்கள் மீடூ குறித்த தங்களது ஆதங்கத்தையும், வருத்தத்தையும், சந்தேகங்களையும் இங்கு பகிரலாம்.