தினமணி. காம் ‘நோ காம்ப்ரமைஸ்’  நேர்காணல் வித் லீனா மணிமேகலை!

இங்கே பிரபலம் யார் என்பது முக்கியமில்லை. அவர் பிரபலமாக இருந்து கொண்டு ஈடுபட்ட பாலியல் அத்துமீறல் தான் சமூகத் தீமையாகக் கருதப்படுகிறது... அதை வேரறுக்கத்தான் இந்தப் போராட்டமே!
தினமணி. காம் ‘நோ காம்ப்ரமைஸ்’  நேர்காணல் வித் லீனா மணிமேகலை!

தினமணி.காமின் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் தொடர் வரிசையில் நேற்றைய விருந்தினராகப் பங்கேற்றார் கவிஞரும், ஆவணப் பட இயக்குனரும், பெண்ணுரிமைப் போராளியும், சமூக ஆர்வலருமான லீனா மணிமேகலை. நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது. நேர்காணலில் லீனா பகிர்ந்து கொண்ட சமரசமற்ற கருத்துக்கள் பலவும் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்கும், அவர்களுக்கான நீதிக்குமானது மட்டுமல்ல அவை நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பாரபட்சமின்மைக்கும் உத்திரவாதமளிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மீடூவைப் பொறுத்த வரை ‘Name them, Shame them' என்பது தான் அந்த எழுச்சியின் ஒற்றை வரி தாரக மந்திரம். பெண்கள் தங்களது வேலைத்தளத்தில் அதிகாரத்தின் பெயரால் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நிலை வந்தால் அப்படியான நேரங்களில் சம்மந்தப்பட்டவர்களின் கோர முகத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி, தயக்கமின்றி பொதுவெளியில் வெளிப்படுத்த முன் வரவேண்டும். அப்படிச் செய்வதால் தொடர்ச்சியாக குற்றவாளிகளிடையே ஒரு வித அச்சத்தைத் தூண்டி பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதிப் படுத்தலாம். இனியொரு பெண் இந்த உலகில் அதிகார அச்சுறுத்தலின் பெயரால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் அவலம் நிறுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை சமூகத்தில் விதைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இதை மேலை நாடுகள் மட்டுமல்லாது வட இந்திய மீடியாக்கள் கூட ஓரளவுக்கு மிகச் சரியாகவே கையாண்டு கொண்டிருக்கின்றன. ஆனால், நம் தமிழத்தில் மட்டும் ஏனோ இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதோடு பொதுவெளியிலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளச் செய்யும் அளவிலான காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது (அது கவிஞர் வைரமுத்துவாகட்டும், சுசி கணேசனாகட்டும், எம் ஜெ அக்பராகட்டும், முன்னாள் அமைச்சராகட்டும், பிரபல பாலிவுட் குணசித்திர நடிகராகட்டும் யாராக இருந்தாலும் சரி தான், இங்கே பிரபலம் யார் என்பது முக்கியமில்லை. அவர் பிரபலமாக இருந்து கொண்டு ஈடுபட்ட பாலியல் அத்துமீறல் தான் சமூகத் தீமையாகக் கருதப்படுகிறது... அதை வேரறுக்கத்தான் இந்தப் போராட்டமே!) செலவிட்டதாக பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா? பொய்யானதா? என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?  நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே! அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே? வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு! அப்படியான சமூகத்தில் நம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை பொது வெளியில் வைப்பது என்பது இனியொரு பெண்ணிடம் அப்படியான அத்துமீறல் நடத்தப்பட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுக்காகவும், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றுமொரு பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது எனும் அச்ச உணர்வைக் கடக்க கிடைத்த வாய்ப்பாக மட்டுமேயாக இருக்க முடியுமே தவிர இதற்கப்பால் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க நினைப்பது மேலும் மேலும் பெண்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் அதல பாதாளத்தில் வைத்து அமுக்குவதாக மட்டுமே இருக்க முடியும்.

லீனாவுடனான நேர்காணலின் பின் இப்படி ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடிகிறது.

நேர்காணலுக்கான முன்னோட்டம் நாளை காலை வெளியாகும்.

முழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com