ஏ ஆர் ரகுமானை மட்டுமல்ல நம்மையும் தான் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறார் இந்த நித்திலா!

ஏனென்றால் பிறக்கும் போதே எங்கள் குழந்தைக்கு நிறைய பிரச்னைகள் இருந்தன. அவளுக்கு சுவாசம் இல்லை. அதனால் உடனடியாக நியோனேட்டல் ஐசியூ வில் அட்மிட் செய்தார்கள்.
ஏ ஆர் ரகுமானை மட்டுமல்ல நம்மையும் தான் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறார் இந்த நித்திலா!

நித்திலா... 

இவள் பிறந்தது 2000 ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம்.  

பிறக்கும் போதே அவளுக்கு ‘மிட் ஃபேஸியல் டிஃபார்மிட்டி’ எனும் நோய்க்குறைபாடு இருந்தது. அவள் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மகப்பேறு மருத்துவர் எங்களிடம் சொன்னார்... கருவிலிருக்கும் குழந்தையின் அசைவில் ஏதோ தவறுதலாகத் தெரிகிறது என்று... குழந்தையைக் கருவில் தாங்கி நிற்கும் எந்த அம்மாவுக்கும் மிகுந்த மன உளைச்சலைத் தரத்தக்க சொற்கள் இதுவாகத்தான் இருக்க முடியும். பிறக்கவிருக்கும் குழைந்தையை சந்தோசமான மனநிலையில் எதிர்கொள்ள இயலாமல் குறைபாட்டுடன் எதிர்கொள்ளவிருக்கும் நிலையை எண்ணி மிகுந்த மன வருத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் நாங்கள் உள்ளானோம். அப்போது மருத்துவர் சொன்னார்... நீங்கள் நிதானமாக யோசிக்க ஒருநாள் எடுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். என்றார். அந்த வார்த்தைகள் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது கொடுங்கனவாக இருந்தது.

ஏனென்றால் பிறக்கும் போதே எங்கள் குழந்தைக்கு நிறைய பிரச்னைகள் இருந்தன. அவளுக்கு சுவாசம் இல்லை. அதனால் உடனடியாக நியோனேட்டல் ஐசியூ வில் அட்மிட் செய்தார்கள். பிறந்த பச்சிளம் குழந்தையின் உடலில் ஏராளமான ரப்பர் குழாய்கள் சொருகப்பட்டன. இப்போது யோசிக்கையில் என்னால் அவை என்னென்னவென்று கூட நினைவுறுத்திச் சொல்ல முடியவில்லை. 24 மணி நேரமும் குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. எங்களது குழந்தையிடம் அப்போது நாங்கள் கண்ட ஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால்... அது அவளது வாழ்க்கைப் போராட்டம் தான். குழந்தையால் சுவாசிக்க முடியவில்லை என்ற நிலையில் அது சோர்ந்து போய் ஜடமாகக் கிடக்கவில்லை. தன்னுடைய நிலையை எதிர்த்துப் போராடியது. அந்தப் போராட்டத்துக்கான அசைவுகள் குழந்தையின் உடலில் இருந்தன. அது மட்டுமே எங்கள் குழந்தை உயிருடன் இருக்கிறது என்பதற்கான ஆறுதலாக எங்களுக்கு இருந்தது. எனக்கு இப்போதும் என் குழந்தையின் அன்றைய ஜனனப் போராட்டத்தை நினைத்தால் ஆச்சர்யம் தான். 

அப்போது தான் ஒரு நண்பர் ‘குழந்தையின் கேட்கும் திறன்’ குறித்தும் பரிசோதனை செய்து பார்த்து விடுங்களேன் என்றார். நாங்கள் அந்த சோதனையையும் செய்தோம். ரிசல்ட் வந்தது எங்கள் குழந்தைக்கு கேட்கும் திறன் இல்லையென்று.  குழந்தை விஷயத்தில் மேலும் மேலும் எதிர்மறையான விஷயங்களையே கேட்டுக்கொள்ள நேர்ந்த போதும் நானும், என் மனைவியும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தோம். இந்தக் குழந்தைக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இவள் வளர்ந்த பிறகு தனது சிறு சிறு தேவைகளுக்காகக் கூட என்னையோ, என் கணவரையோ அல்லது வேறு யாரையுமோ நம்பியோ, எதிர்பார்த்தோ இருக்கக் கூடாது என்று. எங்கள் குழந்தை இப்படி ஒரு குறைபாட்டுடன் பிறந்து விட்டதே என்ற வருத்தம், அதைக் குறித்த சமூகத்தின் விமர்சனப் பார்வை எல்லாவற்றையும் தாண்டி எங்களுக்கு எங்கள் நித்திலாவை... நித்திலாவாகவே இந்தச் சமூகத்தின் முன் நிறுத்தும் ஆவல் மிகுந்திருந்தது. எனவே நாங்கள் அதற்குத் தயாரானோம்.

எங்கள் குடும்பத்தில் யாரும் அதுவரை இசைத்துறையில் இல்லை. சென்னையில் வசிக்கும் எங்களது உறவினர் ஒருவர்... ஒருமுறை... தனது பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவன் மிக அருமையாகப் பியானோ வாசிப்பான் என்றார். நாங்கள் உடனே அந்தச் சிறுவன் வாசிப்பதைக் காணச் சென்றோம். அவனிடம் நான், உன்னால் பியானோ வாசிக்க முடியுமா? என்று கேட்டேன். அவன் சரி என்று வாசித்துக் காட்டினான். வாசித்துக் காட்டினான் என்றா சொன்னேன். இல்லையில்லை இசைப் பிரவாகமாக ஒரு விளையாட்டை நிகழ்த்திக் காட்டினான் அவன்... ஆம் பியானோவில் வெகு லாவகமாக விளையாடின அவனது விரல்கள்.... அவனது பியானோ வாசிப்பு மிகப்பெரிய மாயாஜாலம் போல இருந்தது. அப்போது நானும் என் மனைவியும் நினைத்துப் பார்த்தோம்... இந்தப் பையனைப் போலவே நம் நித்திலாவும் பியானோ வாசித்தால் ஐ மீன் பியானோவில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று?!

அந்த எண்ணத்தின் தொடர்ச்சியாகத்தான் நித்திலாவை கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரியில் சேர்த்தோம்.

அங்கு கேட்கும் திறனற்ற எங்கள் மகளை பியானோ கற்றுக் கொள்ளச் சேர்த்தோம்.

இனி நித்திலாவைப் பற்றியும் அவளது திறமையைப் பற்றியும் அவளுக்கு பியானோ கற்றுக் கொடுத்த டாக்டர் சுரஜித் சாட்டர்ஜி (ஹெட் ஆஃப் ரஷ்யன் பியானோ ஸ்டுடியோ) என்ன சொல்கிறார் என்று  தெரிந்து கொள்ளுங்கள்...

நித்திலா இங்கே சேர்ந்த பிறகு... நான் அவளுக்காக புதியதொரு கற்பித்தல் முறையை தேர்ந்தெடுத்தேன். என் இளமையில் அதைக் கண்டுபிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ஆனால், அப்போது நான் அந்தக் கற்பித்தல் முறையில் இருந்து ஒருவேளை தப்பித்திருக்கக் கூடும். நித்திலா வந்த பிறகு தான் அதைக் கண்டறிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. எனது கற்பித்தல் முறை ஸ்ட்ரிக்டானது. அதனால் பொதுவாக எனது பியானோ வகுப்புகளில் பல மாணவ, மாணவிகள் கடினமாக இருக்கிறது என்று அழுவதுண்டு. ஆனால், நித்திலா ஒருபோதும் அழுததில்லை. எனக்குள் சில நேரங்களில்... இந்தக் குழந்தை உண்மையிலேயே திறமைசாலி தானா? அல்லது இவள் விரும்புவதால் இவள் திறமைசாலியானாளா? என்றெல்லாம் குழப்பம் எழுந்ததுண்டு. ஆனால், அவள் சாதித்தாள்.

அவள் முடிவு செய்து விட்டாள்... என்ன ஆனாலும் சரி சந்தோசமாக இருப்பது என்று அவள் முடிவு செய்து விட்டாள். எந்தச் சூழ்நிலையிலும் எதிர்மறையான சிந்தனைகளில் மூழ்கிக் காணாமல் போய்விடக்கூடாது என்பதில் நித்திலா உறுதியாக இருக்கிறாள். அவள் எப்போதும் நேர்மறையான சிந்தனைகளையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள். வலிமையுடனும் மன உறுதியுடனும் இருப்பது எப்படி என்று இப்போது அவளிடமிருந்து தான் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது என்று புன்னகைக்கிறார்கள் நித்திலாவின் பெற்றோர் ராஜி, ராஜசேகர் மற்றும் அவளது பியானோ மாஸ்டரான சுரஜித் சாட்டர்ஜியும்.

நித்திலாவின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது என்ன தெரியுமா? தனக்கு பிரச்னை இருப்பதாக நித்திலா என்றுமே நம்பியதில்லை என்பது தான்!

நித்திலாவைப் பற்றிய குறும்படம் ஏ ஆர் ரகுமானின் யூ டியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. விருப்பமிருப்பவர்கள் இந்த லிங்கில் நுழைந்து நித்திலாவைப் பற்றி காணொளி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=_zp7cJVb4_I

நித்திலாக்கள் என்றென்றும் ஆச்சர்யமூட்டக்கூடியவர்கள் மட்டுமல்ல, பின்பற்றத் தகுந்தவர்களும் கூட!

ஹாட்ஸ் ஆஃப் டு யூ நித்திலா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com