Enable Javscript for better performance
'மணப்பெண் இன்றி' 800 பேருடன் நடந்த பிரம்மாண்டத் திருமணம்! மகனின் குறையை மகிழ்ச்சியுடன் போக்கிய தந்தை- Dinamani

சுடச்சுட

  

  'மணப்பெண் இன்றி' 800 பேருடன் நடந்த பிரம்மாண்டத் திருமணம்! மகனின் குறையை மகிழ்ச்சியுடன் போக்கிய தந்தை

  By ANI  |   Published on : 13th May 2019 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gujju


  27 வயதான குஜராத்தி இளைஞர் அஜய் பரோட்டுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான். அது தனக்கு ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. இது என்ன ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கக் கூடிய ஆசைதானே என்று தோன்றுகிறதா? அவர் ஆசையை மிக விமரிசையாக நிறைவேற்றி வைத்தார் அவரது தந்தை மற்றும் குடும்பத்தார். நண்பர்களும். உறவினர்களும் சேர்ந்து பிரம்மாண்டமாக மேள தாளத்துடன் நடை பெற்ற அஜய்யின் திருமணத்தில் ஒரே ஒரு குறை மட்டுமே! அது மணப்பெண் இல்லாமல் அத்திருமணம் நடந்தேறியதுதான்!

  'வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்’ என்று ஒரு பழமொழி உண்டு. காரணம் அது அத்தனை சுலபமானதல்ல. ஆனால் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற இப்படியொரு ஏற்பாட்டை செய்துள்ளார் அஜய்யின் தந்தை விஷ்ணு பரோட். தன்னுடைய திருமண ஆசையை அஜய் பல காலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கவே, பெண் தேடிப் பார்த்தார் அவர். ஆனால் அஜயை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வராததால், மணப்பெண் இல்லாமலேயே தன் மகனுக்கு குஜராத்தி சாஸ்திர சம்பிரதாய முறைப்படி திருமணத்தை செய்து வைக்க முடிவெடுத்துவிட்டார்.

  திருமணத்துக்கு முந்தைய நாள், மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சுற்றமும் நட்பும் புடைசூழ அமர்க்களமாக நடைபெற்றது. மறுநாள் அஜய், பிங்க் நிற தலைப்பாகை அணிந்து, தங்க நிறத்தில் ஷெர்வாணியும், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மாலை அணிந்தும் மாப்பிள்ளை கோலத்தில்  குதிரையின் மீது ஏறி திருமண ஊர்வலம் சென்றார்.  கிட்டத்தட்ட 200 விருந்தினர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு குஜராத்தி இசைக்கேற்ப நடனம் ஆடி வந்தனர்.

  விஷ்ணு பரோட் குடும்பத்தாரின் வீட்டருகே இருந்த சமுதாயக் கூடத்தில் 800 பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அஜய்யின் தந்தை விஷ்ணு பரோட் இத்திருமணம் குறித்து பேட்டியளிக்கும் போது கூறியது, ‘ என் மகனுக்கு கற்றல் குறைபாடு இருந்தது மிக இளம் வயதில் தெரிய வந்தது. அவனுடைய தாயையும் அவன் அச்சிறிய வயதிலேயே இழந்துவிட்டான். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருமணங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அஜய் எனக்கு எப்போது கல்யாணம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் தவிப்பேன். என் தயக்கத்தையும் மீறி அவனுக்கு பெண் தேடியிருக்கிறேன். ஆனால் அவனது பிரச்னையால் யாரும் பெண் தர முன்வரவில்லை. அதனால் என்ன அவனுடைய ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடைய உறவினர்களிடம் இது குறித்துப் பேசினேன். அவர்கள் ஒப்புக் கொண்டதும் என் மகனுடைய கனவை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினேன். சமூகம் என்ன சொல்லும் என்றெல்லாம் யோசிக்காமல் வெற்றிகரமாக இந்தத் திருமணத்தை நடத்தி முடித்தேன். இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்றார்.

  அஜய்யின் மாமா கம்லேஷ் பரோட் கூறுகையில், ‘என்னுடைய மருமகனுக்கு இசை, நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். பாட்டுக் கேட்டால் போதும் அவனுடைய முகத்தில் சிரிப்பு வந்துவிடும். எங்கள் உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளை ஒன்றுகூட அவன் தவற விட்டதில்லை. என்னுடைய மகனுடைய திருமணம் அண்மையில் நடந்தது. அப்போதிலிருந்து அவன் தன்னுடைய திருமணம் குறித்து கேட்கத் தொடங்கிவிட்டான். அது அவனுக்கு ஒரு கனவாக இருந்தது எங்களுக்குத் தெரியும். எனவே தான் இந்த எண்ணத்தை விஷ்ணு தெரிவித்த போது உடனடியாக செய்து முடித்துவிடலாம் என்று முடிவு செய்தோம். எல்லாமே ஒரு வழக்கமான திருமணம் எப்படி இருக்குமோ அதன்படியே தான் செய்தோம், என்ன ஒரே ஒரு விஷயம் மணமகள் மட்டும் இதில் இல்லை!’என்றார். 

  மேலும் அவர் கூறுகையில், ‘நாங்கள் திருமண அழைப்பிதழ்களை எங்கள் உறவினர்களுக்கு அனுப்பினோம். குஜராத்தியர் முறைப்படி என்னெல்லாம் சம்பிரதாயங்கள் உள்ளதோ அவற்றை ஐயரின் ஒத்துழைப்புடன் ஒன்றுவிடாமல் செய்தோம். எங்களுடைய ஒரே குறிக்கோள் அஜய் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான்’ என்று கூறினார்.

  அஜய்யின் இளைய சகோதரி கூறுகையில், 'என்னுடைய அண்ணனுக்கு அதிர்ஷ்டம் இருந்ததால்தான் ஒட்டுமொத்த குடும்பத்தாரின் உறுதுணையுடன் இத்தகைய வாழ்த்துக்களும். சந்தோஷமும் அவனுக்குக் கிடைத்தது. நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த இப்படிச் செய்யவில்லை. எங்களுக்கு முக்கியமாக இருந்தது அஜய்யின் மகிழ்ச்சி மட்டும்தான். அவன் எங்களுக்கு மிகவும் பிரியமானவன்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai