நான் வெறுத்த என் கைகளுக்கு நன்றி!

நான் வெறுத்த என் கைகளுக்கு நன்றி!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு உப்பு நீர் ஏரியில் அரிய வகை நீர்ப்புழுக்கள் காணப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு உப்பு நீர் ஏரியில் அரிய வகை நீர்ப்புழுக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 10 சென்டிமீட்டர் முதல் 50 சென்டிமீட்டர் வரை வளரும் சிவப்பு நிற நீர் புழுக்கள் இறால் பண்ணைகளுக்குத் தீவனமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குதான் ராஜேந்திரனும் அவரது மனைவி கல்யாணியும் கொத்தடிமைகளாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்து வந்தனர்.

ஆரம்பத்தில் ஒரு மரம் வெட்டும் குழுவில் தினக் கூலிகளாக வேலை செய்துவந்த இத்தம்பதிக்குப் பருவ மழையின் காரணமாக மரம் வெட்டும் வேலை அரிதாகிப் போனது. ஆடு வாங்கி மேய்க்கலாம் என்று மரம் வெட்டும் குழுவின் முதலாளியிடம் கொஞ்சம் கடன் பெற்றுள்ளனர். சில மாதங்கள் கழித்து எதிர்பாராதவிதமாக ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்து போகவே ராஜேந்திரனின் கடன் சுமை அதிகமானது. இச்சமயத்தில்தான் இறால் பண்ணைகளுக்கான தீவனப் புழு சேகரிக்கும் பணிக்கு ஆட்களைத் தேடி வந்தார் ஒரு முதலாளி. ராஜேந்திரனின் தாய்மாமாவும் இதே முதலாளியிடம் வேலை செய்து வருவது தெரியவந்தது. அவரிடம் ரூபாய் 10 ஆயிரத்தை முன்பணமாகப் பெற்று ஏற்கனவே வாங்கிய கடனை அடைத்துவிட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தார் ராஜேந்திரன். கூடவே தன் மனைவி கல்யாணியையும் அழைத்துச் சென்றார்.

வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் ராஜேந்திரனையும் கல்யாணியையும் வெளியே செல்ல ஒரு போதும் அனுமதித்ததில்லை அம்முதலாளி. உடல் நிலை சரியில்லாமல் போனாலும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். உடல் நிலை மோசமாகி மருத்துவமனைக்குச் சென்றாலும் முதலாளி அவருடன் வருவது வாடிக்கை. கொத்தடிமையாக சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் யாராவது தப்பித்துச் சென்றாலும் அவர்களைக் கண்டு பிடித்து மீண்டும் அதே பணியிடத்திற்கு அழைத்து வந்து விடுவார் முதலாளி.

பரந்து விரிந்த ஏரியின் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுப் புழுக்களைச் சேகரிப்பதால் அவளுக்கென்று நிரந்தர இருப்பிடம் இல்லை. மழையோ வெயிலோ தற்காலிகமாகத் தார்ப்பாயால் அமைக்கப்படும் கொட்டகையே அவர்களின் வாழ்விடம்.

ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குத் தொடங்கி மதியம் 12.30 வரை ஆழமில்லா சேற்றுப் பகுதியில் வளரும் கோரைகளைக் கண்டடைந்து அதனைச் சுற்றிக் காணப்படும் செம் புழுக்களை மண்ணிலிருந்து பிடுங்கி எடுத்து கூடையில் சேகரிப்பது அவர்களின் வேலை. ராஜேந்திரனும் கல்யாணியும் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று தங்களால் சேகரிக்க முடிந்த அளவு புழுக்களைக் கரைக்குக் கொண்டு வருவர்.

இவ்வாறு சேகரித்த புழுக்களை நல்ல நீரில் கழுவி சுத்தம் செய்துப் பெட்டிகளில் உள்ள தெளிந்த உப்பு நீரில் போட்டு அவற்றை இறால் பண்ணைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏரியின் ஒரு பகுதியில் நீர் வற்றிக் காய்ந்து விட்டால் நீர் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். மழைக்காலத்தின் போது ஏரியின் குளிர்ந்த நீரில் இறங்கி வேலை செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும். நாள் முழுக்க முழங்கால் அளவு உப்புச் சேற்று நீரில் நின்று வெறும் கைகளால் புழுக்களை சேகரிப்பதனால் பல்வேறு நோய்கள் தாக்கும் சூழல் அதிகம். அடிக்கடி கைகள் விரைத்துப் போய் வேலை செய்யக் கடினமாய் இருந்தாலும் முதலாளி அவர்களை விடுவதில்லை. தன் கைகளை எப்போது பார்த்தாலும் அசுத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும் என்கிறார் ராஜேந்திரன்.

இறுதியாக 2015-ஆம் ஆண்டில் அவர்கள் தமிழக அரசால் இருவரும் மீட்கப்பட்டனர். 'நான் அங்கு வேலை செய்யும் பொழுது முதலாளி என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்க வேண்டும். ஆனால் இன்று நான் என்ன நினைக்கிறேனோ அதைச் செய்வேன்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் கல்யாணி. மேலும் 'நாள் முழுக்க உப்பு மற்றும் சேற்று நீரில் நின்று வேலை செய்யக் கடினமானதாக இருந்தது. முன்பு எனது கைகளும் கால்களும் உப்பு நீரால் பாதிக்கப்பட்டு உணவு கூட சரி வர உண்ண முடியாத நிலையில் இருத்தேன். இப்போது எனது கைகள் எவ்வித வலியும் இன்றி சுத்தமாக இருப்பதால் எனது உணவை நானே உண்கிறேன்' என்கிறார் ராஜேந்திரன்.

மேலும் ராஜேந்திரன்  தற்போது ஒவ்வொரு நாளும் தான் எங்கு வேலைக்குச் செல்வது என்பதை அவரே முடிவு செய்கிறார். முழுமையான அதே சமயம் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவிய அந்த கைகளுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறார். தற்போது ராஜேந்திரனும் கல்யாணியும் தங்களது சொந்த கிராமத்தில் தங்கி தினக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com