ஆப்பு வைக்கும் ஆப்கள்: தகவல்களை திருடும் ஆப்கள் அவற்றை என்னதான் செய்யும்?

சமீபகாலமாக, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தனி நபர் விவரங்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல், தனி நபர் விவரங்கள் பொது வெளியில் ஹாயாக உலாவி வருகின்றன.
ஆப்பு வைக்கும் ஆப்கள்
ஆப்பு வைக்கும் ஆப்கள்

சமீபகாலமாக, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தனி நபர் விவரங்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல், தனி நபர் விவரங்கள் பொது வெளியில் ஹாயாக உலாவி வருகின்றன.

அதிலும் குறிப்பாக செல்போனில் பதிவேற்றும் ஆப்கள்தான் நமது தகவல்களை திருடும் கொள்ளைக் கூட்டமாக மாறியுள்ளது.

செல்போனில் இருக்கும் 70 சதவீத ஆப்கள், பயன்பாட்டாளரின் தகவல்களைத் திருடி மூன்றாம் நபருக்கு விற்பனை செய்யும் கொள்ளையர்களாகவே செயல்படுகின்றன.

அவ்வளவு ஏன்? செல்போனில் இருக்கும் லோகேஷனை நாம் ஆன் செய்து வைத்திருப்பது கூட நாம் எங்கிருக்கிறோம் என்பதை கூகுள் உளவு பார்க்கப் பயன்படுத்திக் கொள்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அந்த தகவலும் மூன்றாம் நபருக்கு விற்பனையாகலாம். யார் கண்டது.

ஒரு சின்ன உதாரணம், ஒருவர் செல்போனில் ஓலா அல்லது உபர் ஆப் வைத்திருந்து, லோகேஷனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்கிறார். இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு வீடு திரும்பும் போது ஓலா அல்லது உபர் ஆப்பைப் பயன்படுத்தி கார்  சேவையைப் பயன்படுத்துகிறார் என்றால், அடுத்த 3வது நாள், சரியாக 6 மணிக்கு, "பயனாளரே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்ல வேண்டுமா? உங்கள் லோகேஷனுக்குப் பக்கத்தில் இரண்டு கார்கள் இருக்கின்றன" என்று ஓலா அல்லது உபரில் இருந்து உங்களுக்கு தகவல் வரும். வந்திருக்கிறது. இது உண்மை. அவ்வாறு எனில், நீங்கள் அடையாளம் தெரியாத ஒரு மூன்றாம் நபரால் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தமாகாதா?

சரி ஆப்கள் வைக்கும் ஆப்புகள் பற்றி அவ்வளவு எளிதில் சொல்லி முடித்துவிட முடியாது. 

அதில் எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. இன்று ஒரு சில சாதாரண விஷயங்களை மட்டும் பார்க்கலாம்.

பெரும்பாலான ஆப்கள், செல்போனில் இருக்கும் பயனாளரின் தகவல்களை அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ திருடும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. சரி அதையெல்லாம் திருடி அவை என்னதான் செய்யும் என்று சாதாரணமாக நினைத்தால் நீங்கள் ஒரு அப்பாவி.

ஒவ்வொரு தகவலையும், அது தேவைப்படும் நிறுவனங்களுக்கு பணத்துக்கு விற்கப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியைக் கூட்டும் தகவலாக இருக்கிறது.

அதில் ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம்..
ரியல் எஸ்டேட் ஆப்கள் சில, ஒருவர் எந்தெந்த பகுதிகளில், எந்த விலை அளவில் வீடு அல்லது மனைகளைப் பார்க்கிறார், அவருக்கு உகந்த பகுதி என்று எதைத் தேர்வு செய்கிறார் என்பதை சமூக தளங்களுக்கு விற்பனை செய்கிறது. அதை அடிப்படையாக எடுத்துக் கொண்டு சமூக தளங்கள், அவரது பக்கத்தை தங்களது விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. உதாரணத்துக்கு ஒருவர் சென்னை மைலாப்பூரில் வீடு பார்க்க விரும்பினார் என்றால், அங்கிருக்கும் வீடுகளின் விளம்பரங்கள், அவர் சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்ரமிக்கும்.

அவ்வளவு ஏன்? சில உடல் நலன், ஹார்ட் பீட், மாதவிலக்கு நாட்களை கண்காணிப்பது தொடர்பான ஆப்கள், நமது உடல் நலன் தொடர்பான பதிவுகளை உடனடியாக பேஸ்புக் போன்ற சமூக தளங்களுக்கு அனுப்பும். இன்று ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு என்று அந்த ஆப்பில் அவர் பதிவு செய்திருப்பாரேயானால், அது தொடர்பாக கட்டுரைகள், பொருட்களின் விற்பனை போன்றவை, அன்றைய தினம் அவரது பேஸ்புக் பக்கத்தை நிரப்பும். எனவே, அதன் மூலம் அப்பெண் அந்த கட்டுரையை வாசிக்க அல்லது அந்த பொருட்களை வாங்க அதிக வாய்ப்புகளை பேஸ்புக் ஏற்படுத்துகிறது. இதுவும் ஒரு நயவஞ்சக சதிதான்.

அது மட்டுமல்ல, நமது லோகேஷனை மட்டும் பயன்படுத்தி, அதாவது, நாம் பேஸ்புக்கில் இருக்கிறோம். நமக்கு யாரென்றே தெரியாத ஒரு நபரும் பேஸ்புக்கில் இருக்கிறார். அவரும் நாமும் ஒரு அரை மணி நேரம் ஒரு கடையில் ஏதேதோ பொருட்களை வாங்குகிறோம். பிறகு அவரவர் வீடுகளுக்கு வருகிறோம். இப்போது இருவரது லோகேஷன்களையும் மோப்பம் பிடித்து சமூக வலைதளங்களுக்கு அனுப்பும். அதனை பணம்கொடுத்து வாங்கும் சமூக வலைத்தளங்கள், அவருக்கோ அல்லது உங்களுக்கு, இவரது பேஸ்புக் பக்கத்தை உங்களுக்கு பரிந்துரை செய்யும். இதன் மூலம், நாம் தவறான நபர்களின் பக்கங்களிலும் பேஸ்புக் பரிந்துரை மூலம் நமது முகவரி, புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களுடன் விளம்பரப்படுத்தப்படுவோம். இது சரியா?

சில செல்போன்களில் இருக்கும் போட்டோ எடிட் ஆப்கள் செய்யும் வேலையைப் பற்றி தெரிந்தால் நீங்கள் அவ்வளவுதான். அதாவது நாம் கேமராவை ஆன் செய்து புகைப்படம் எடுக்கும்போதுதான் அது புகைப்படத்தை பதிவு செய்யும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சில செல்போன்களில் இருக்கும் ஆப்கள், கேமராக்கள் தானியங்கி போல இயங்கி, அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்வதும் நடக்கிறது. இதில் எந்த விதமான புகைப்படங்கள் இருக்கும் என்பதை சில பயனாளர்களால் ஊகிக்கவே முடியாமல் போகலாம். ஏன் என்றால், செல்போனை கங்காரு குட்டியைப் போலவே நாம் கூடவே வைத்துக் கொண்டு அல்லவா சுற்றுகிறோம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், பயனாளர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை திருடுவதாகக் குற்றம்சாட்டி, கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்த 29 ஆப்களை நீக்கியது. ஆனால் அதற்குள் அந்த ஆப்களை லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.

இன்னொரு விஷயத்தையும் நீங்களே கவனித்திருப்பீர்கள், சில மாதங்களுக்கு முன்பு வரை அதாவது, நாம் கேமராவில் எடுத்த சிலப் புகைப்படங்களை, சமூக வலைத்தளப் பக்கங்களை நாம் திறந்ததும், அங்கே அந்தப் புகைப்படங்கள் தோன்றி, இவற்றை இங்கே ஷேர் செய்யப் போகிறீர்களா என்று கேட்கும்? நமது கேமராவில் எடுத்த புகைப்படங்களை, சமூக தளம் எப்படி கையாண்டது என்று நாம் யோசித்திருக்கிறோமா? இப்படி பல பயனாளர்களின் தகவல்களைத் திருடி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு சமூக வலைத்தளம் பல லட்சக்கணக்கான தொகையை இதற்காக அபராதமாக செலுத்தியது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

ஆனாலும் என்ன செய்வது, அதே சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தித்தான் இன்று நல்ல விஷயங்களையும் கொண்டு சேர்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இதெல்லாம் சும்மா சாதாரணமாக நமது தகவல்களை திருடுவதால் ஏற்படும் அபாயங்கள். இதில் தோண்டத் தோண்ட பல அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.. 

இதில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம். அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com