மொபைலை தூக்கி போட்டுவிட்டு உங்கள் குழந்தைகள் கதை கேட்க வேண்டுமா?

"வாசிப்பை கொண்டாடலாம் வாங்க...... குழந்தைகள் வாசித்த நூல்கள் குறித்து மேடையில் விமர்சிப்பதைக் கேட்கலாம் வாங்க'
vanithamani
vanithamani
Updated on
1 min read

"வாசிப்பை கொண்டாடலாம் வாங்க...... குழந்தைகள் வாசித்த நூல்கள் குறித்து மேடையில் விமர்சிப்பதைக் கேட்கலாம் வாங்க' என்று அழைப்பு விடுத்தார் ஈரோட்டைச் சேர்ந்த வனிதாமணி. இவர் மூன்று வயது முதல் பதினைந்து வயது சிறார்களுக்கு "கதை சொல்லும் கதைக்களம்' என்ற அமைப்பினை நடத்திவருபவர். கதைக்களத்துடன் "பட்டாம்பூச்சி' என்ற பெயரில் குழந்தைகளுக்கான நூலகத்தையும் நடத்தி வருபவர்.

சென்ற வாரம் ஈரோட்டில் "மாணவர்களை வாசிக்க வைக்கும் திட்டத்தின் கீழ் 4 முதல் 13 வயதுக்குள் இருக்கும் நாற்பது குழந்தைகள் தங்கள் வாசித்த நூல்கள் குறித்து மேடையில் தங்களது பெற்றோர், பார்வையாளர்கள் முன்னிலையில் பேசியிருக்கிறார்கள். வனிதாமணி இந்த விழாவை சிறார்களுக்கிடையே போட்டியாக நடத்தாமல், அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கியுள்ளார்.

குழந்தைகள் நூல் வாசிப்பு - விமர்சன விழா குறித்து வனிதாமணி விளக்குகிறார்:

"இந்த விழாவின் அடிப்படைக் குறிக்கோளே சிறார்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், வாசித்த பிறகு நூல், நூல் எழுதிய ஆசிரியர், நூலில் பிடித்த அம்சம் குறித்து சிறார்கள் தங்கள் கண்ணோட்டத்தில் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் தயக்கம் இல்லாமல் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் பேச வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த விழா.

நூல்களை வாசித்தால் மட்டும் போதாது. வாசித்த நூல் குறித்து உள்ளத்தில் உணர்ந்ததை பிறருக்குத் தெரிவிக்க சரளமாகப் பேசவும் தெரிய வேண்டும். மேடையில் பேசுவதில் இருக்கும் தயக்கம், சங்கோஜம், திக்கு திணறல், உதறல் இவற்றைப் போக்கி சகஜமாகப் பேசும் திறமையையும் வளர்க்க வேண்டும். நாளை பெரியவர்களாகி பல நேர்முகத் தேர்வில் பயமில்லாமல் கலந்து கொண்டு, எதிரே இருப்பவர்கள் புரிந்து கொள்ளும்படியாகக் கோர்வையாக பேசவும், கலந்துரையாடல்களில், விவாதங்களில் தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்ளவும் சிறார்களை சின்ன வயதிலேயே செதுக்கும் முயற்சிதான் இது.

இந்த நிகழ்வில் 35 சிறார்கள் கலந்து கொண்டார்கள். ஒரு சிறுமி மட்டும் தான் வாசித்த ஆங்கிலப் புத்தகம் குறித்து தமிழில் சகஜமாகப் பேசினார். இதர சிறார்கள் தாங்கள் வாசித்த தமிழ் நூல்களை பார்வையாளர்களுக்கும், சிறார்களுக்கு அறிமுகம் செய்து பேசினார்கள். சிலர் அவர்கள் வாசித்த நூல் எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கூட குறிப்பிட்டார்கள்'' என்கிறார் வனிதாமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com