ஆளுநர்கள் ஆட்டி வைக்கும் பொம்மை அல்ல!

மாநிலத்தின் தலைவராகக் கருதப்படும் ஆளுநர், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது மட்டுமே அவரது பணி என்று கருதப்படுகிறது.
ஆளுநர்கள் ஆட்டி வைக்கும் பொம்மை அல்ல!

மாநிலத்தின் தலைவராகக் கருதப்படும் ஆளுநர், பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவளிக்கும் ஒருவரை முதல்வராக  நியமிப்பது மட்டுமே அவரது பணி என்று கருதப்படுகிறது. ஆனால், மிகவும் இக்கட்டான சட்ட சூழ்நிலைகளில் ஆளுநர்கள் எடுக்கும் முடிவுகள் அந்த மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன என்பதற்கு சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு சிறந்த  எடுத்துக்காட்டு. 

முதல்வரை நியமிப்பது, முதல்வரின் பரிந்துரைப்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது, மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்களை நியமிப்பது, மக்களுக்குத் தேவையான சட்டங்களை அரசு இயற்றும்போது அதற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை ஆளுநரின் பணிகளாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-இன் படி, மாநிலத்தின் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், அவசர காலத்தில்  குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு முழு அதிகாரத்தை அளிக்கிறது. ஆனால்,, இந்தப் பிரிவை பயன்படுத்தி பல்வேறு மாநில அரசுகளை கலைப்படுவது வழக்கமாக இருந்தது. முக்கியமாக மத்தியில் இருக்கும் அரசு, தங்களது வசதிக்கேற்ப மாநிலங்களில் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவளித்து, எதிர்க்கட்சியின் ஆட்சியை கலைக்கும் செயல்கள் தொடர்ந்து வந்தன. 

சர்க்காரியா கமிஷன்: விளையாட்டில் தவறு நிகழ்ந்து விட்டால் ஆட்டத்தை கலைப்பது போல, நடந்து வந்த மாநில ஆட்சிக் கலைப்புகளுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தது சர்க்காரியா கமிஷன்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சர்க்காரியா கமிஷன் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத சூழ்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதோ அந்த கட்சியை அழைக்கலாம். இதன் பின்னரே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக் கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

மேலும், முதல்வரை தேர்வு செய்யும் போது அவரால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பதை ஆளுநர் தன்னிச்சையாக தீர்மானிக்கும் உரிமையைப் பெறுகிறார். 

அதேபோன்று நடப்பில் உள்ள ஒரு ஆட்சியை கலைக்க வேண்டுமானால் முதலில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தற்போதைய ஆட்சியில் பெரும்பான்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே, அடுத்த பெரும்பான்மை கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

எஸ்.ஆர். பொம்மை வழக்கு: 1958-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் லோக் தள கட்சியும் அத்துடன் இணைந்து ஜனதா தளமாக உருவெடுத்தது. அப்போது ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த மெலக்கெரி என்பவர், தனக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், தற்போதுள்ள ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்படி, ஆளுநர் வெங்கட சுப்பையா, பொம்மையின் ஆட்சியை கலைத்தார். பின்னர், மெலக்கெரி கூறியது பொய் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து, முதலில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன்படி, ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் எடுக்கும் முடிவுகளை ஆய்வு செய்ய நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தது. 

மேலும், மாநில அரசை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உள்பட்ட செயல் என்றும் தவறான காரணங்களுக்காக மாநில அரசு கலைக்கப்பட்டிருந்தால் அதை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது. 

சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் மற்றும் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரங்களை தெளிவுபடுத்தின. அதற்கு முன்னதாக, சிறுசிறு காரணங்களுக்காக மாநில அரசுகள் கலைக்கப்பட்டது இந்த தீர்ப்பின் மூலமாக ஓரளவு முற்றுக்கு வந்தது. 

கர்நாடகா: கர்நாடகாவில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆட்சி மாற்றம் நிகழ்வது வழக்கமான ஒன்று தான். அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக  பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால் பதவியேற்ற இரண்டு நாளிலேயே எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி பெற்றது. 

இதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்னதாக, ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 17 பேர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின்னர், பெரும்பான்மை அடிப்படையில் ஆளுநர், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். 

இதுபோன்ற சமயங்களில் ஆளுநர்களின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. இதுவும் கர்நாடக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

அதேபோன்று கர்நாடகாவில் 6 முறை அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலபடுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா: 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றதன் அடிப்படையிலும், தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக- சிவசேனா கூட்டணியில் உள்ளதன் அடிப்படையிலும் ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். 

ஆனால் சிவசேனா, ஏற்கனவே பாஜகவுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதன்பின்னர் இரண்டாவது பெரும்பான்மை கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து. ஆனால் ஆளுநர் அளித்த நேரத்திற்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. கால அவகாசம் முடிவடைந்ததால் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 1980 மற்றும் 2014 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இரண்டு முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு: இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி, நெருக்கடி நிலைக்கு எதிராக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இந்திரா காந்தி கோபமுற்றதால், 1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதன் பின்னரே, குடியரசுத் தலைவர் ஆட்சியில் திமுகவினர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

இதன்பின்னரும், மூன்று முறை தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளுக்கு திமுக ஆதரவளிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. முதல் முறையாக, குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்காமலே, ஆளுநர் திமுக ஆட்சியை கலைத்தார். 

தமிழகத்தைப் பொருத்தவரை முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த சமயத்தில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சுமார் ஓராண்டு காலம் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தார். இந்த ஓராண்டு காலம் அவருக்கு போதாத காலம் என்றுதான் இருந்தது.

ஏனென்றால் அவர் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற அந்த ஓராண்டில் 3 பேருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

2016 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். அந்த வருடமே செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தமிழகமே பரபரப்பாகக் காணப்பட்டது. 

அப்போது, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராகவ், தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.

பின்னர்,  ஜெயலலிதா உயிரிழந்த டிசம்பர் 5 ஆம் தேதி அன்றே, நள்ளிரவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு திடீர் மாற்றங்கள் ஏற்பட்டது. பின்னர் அதிமுகவில் சசிகலா தலைமை உருவாகி, அவரும் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் பிரிந்தன. பின்னர் இரு அணிகளும் இணைந்த நிலையில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும் பொறுப்பேற்றனர். 

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மசோதாவையும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொண்டு வந்தார். இது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே, காஷ்மீரில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் ஆளுநரும் பல்வேறு நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டுள்ளார். ஏற்கனவே அந்த சமயத்தில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி தான் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

யூனியன் பிரதேசங்கள்: மாநிலங்களில் ஆளுநர் நியமிக்கப்படுவது போல யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். மாநிலங்களவை விட யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கான அதிகாரங்கள் மாறுபடுகின்றன.

யாருக்கு உச்சபட்ச அதிகாரம்? புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே மோதல்கள் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. தில்லியிலும் இதேநிலை தான். முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும், அனில் பைஜாலுக்கும் இடையேயான மோதல், யாருக்கு உச்சபட்ச அதிகாரம்? என உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. 

அதேபோன்று 2014 ஆம் ஆண்டு முதல் நான்கு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையாகும். 

அதே நேரத்தில், ஒரு சில மாநிலங்களில் பெரிதாக பிரச்னைகளை எதிர்கொள்ளாத ஆளுநர்களும் இருக்கின்றனர். ஆனால், மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநருக்கென்று தனிப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு, மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது. அவர்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாகவும் உள்ளனர். 

சில மாநிலங்களில், ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதாகக் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். நமது அரசியலமைப்புச் சட்டவிதிப்படி சில இடங்களில் மத்திய அரசின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதனை ஒருபோதும் மறுக்க முடியாது. ஆனால், மத்திய அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதையும் இங்கு நினைவில்கொள்ளவேண்டும்.

மத்தியில் வரும் கட்சிகளே, ஒரு மாநிலத்தின் ஆளுநர் யார் என்பதை முடிவு செய்கிறார்கள். ஆளுநரை நியமிப்பதிலும் அரசியல் பின்னணி இல்லாமல் இல்லை என்றாலும், ஆளுநரின் அதிகாரங்களை எடுத்துரைக்கும் விதி 356 உண்மையில் மத்திய அரசுக்கு ஒரு கடிவாளமாக இருந்து வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com