விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம்: கேள்விக்குறியாகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம்!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் பல மருத்துவக் கல்லூரிகளில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் 'அதி தீவிர' சோதனை நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் மருத்துவக்  கல்லூரிகளில் ஆள் மாறாட்டம் மூலமாக மாணவர்கள் சேர்ந்துள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையிலும், தனது மருத்துவக் கனவுக்கு நீட் தேர்வு கை கொடுக்காததால், அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. அனிதாவுக்கு நீதி வேண்டும் என்ற கோணத்திலாவது நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று பல சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

அனிதா மட்டுமல்ல பல கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்திருக்கும் அதே வேளையில், ஆள் மாறாட்டம் செய்து தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் சில மாணவர்கள். இதற்கு படித்த பெற்றோர்களே வழிகாட்டியாகவும் இருந்துள்ளது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்:

தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவர், ஊடகங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். தன்னுடன் படிக்கும் உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வை எழுதவில்லை; அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நீட் தேர்வை எழுதியுள்ளார் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையிலே தேனி மாவட்ட காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்குகின்றனர். தேர்வில் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்படுகிறது. பின்னர் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படுகிறது. 

உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும், மருத்துவருமான வெங்கடேசன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை செய்கின்றனர். உதித் சூர்யா தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வு எழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. இவரைப்போன்று மேலும் பலர் ஆள் மாறாட்டம் செய்து பல்வேறு கல்லூரிகளில் படிப்பதாக மருத்துவர் வெங்கடேசன் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கிறார். 

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் தொடரும் புகார்கள்:

பின்னர், இதே வழக்கில் தொடா்புடைய சென்னை மாணவா்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் மற்றும் விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரித்தனர். இதில், மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை மாதவன் ஆகியோா் விடுவிக்கப்பட்டு, மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான வாணியம்பாடியைச் சோ்ந்த இர்பான் என்ற மாணவர் மீது புகார் எழுந்ததையொட்டி அவர் தலைமறைவானார். அவர் ஏற்கனவே மொரிஷீயசில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்டுவிட்டு தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளார். இவர்  மொரிஷீயசில் தலைமறைவான கூறப்படும் நிலையில், அவரது தந்தை, மருத்துவர் முகமது சபியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இர்பானின் சகோதரர் இம்ரான் என்பவரும் ஆள் மாறாட்டம் செய்து கடந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு படிப்பை  நிறைவு செய்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீட் தேர்வு முறைகேட்டில் இடைத்தரகர்கள்:

கேரளாவைச் சேர்ந்த தனியார் பயிற்சி மையத்தின் தலைவரான ரஷீத் என்பவர் தான் இவர்களுக்கெல்லாம் மூளையாகச் செயல்பட்டுள்ளார். இவருக்குத் துணையாக தாமஸ் ஜோசப் என்பவரும் உதவியுள்ளார். ஆள் மாறாட்டம் செய்வதற்கு ரூ.20 லட்சம் பணம் பெறப்படுகிறது.

மேலும், மருத்துவர் முகமது சபி மூலமாகவே உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன், பிரவீனின் தந்தை சரவணன் மற்றும் ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோருக்கு இடைத்தரகர் ரஷீத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, வட மாநிலங்களில் பல்வேறு பயிற்சி மையங்கள் ஆள் மாறாட்டம் செய்யும் வேலைகளில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுகளிலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றிருக்கலாம் என்பதால் அதுகுறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது. 

தமிழகத்தில் நீட் தேர்வு அறையில் 'கிடுக்கிப்பிடி' சோதனை

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த இரு ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. தேர்வறைக்குச் செல்வதற்கு முன்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையிலேயே மாணவிகள் பலர் மனமுடைந்ததாகத் தெரிவித்தனர். வழக்கமாக, கைக்கடிகாரம், செல்போன் உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்தால் கூட பரவாயில்லை, கம்மல், ஹேர் க்ளிப், மூக்குத்தி, ஹை ஹீல்ஸ் காலணிகள், ஏன் மாணவிகள் துப்பட்டா  கூட போடக்கூடாது என்று கூறினர். 

சோதனை என்ற பெயரில் மாணவிகளை அலங்கோலப்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். தலைவிரி கோலமாக மாணவிகள் சிலர் தேர்வு எழுதியதையும் ஊடங்கங்கள் படம் பிடித்துக் காட்டின. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். 

ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை!

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில், தமிழக அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வு பயிற்சியில் படித்த 19,000 மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல். 

தமிழகத்தில் இவ்வளவு கிடுக்கிப்பிடியான சோதனை செய்து மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் தமிழக அரசு, ஆள் மாறாட்டம் நடந்திருப்பது குறித்து  'இது மத்திய அரசு நடத்தும் தேர்வு; தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் அரசு விழிப்புடன் இருந்து செயல்படும். நீட் தேர்வுகளில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கிறதோ அதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்' என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதில் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நடத்தும் தேர்வாக இருந்தாலும் தமிழக அரசு இவ்வாறு அலட்சியகமாக பதில் அளிப்பதா? என்று கண்டனங்களும் எழுந்துள்ளன.

தமிழக மாணவர்களின் எதிர்காலம்?

தமிழகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு தேர்வு நடத்தப்படும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து இதுபோன்ற ஆள் மாறாட்டம் மூலமாக மாணவர்கள் தமிழகத்தில் இடங்களை ஆக்ரமித்துக்கொள்கின்றனர். இது மருத்துவக் கனவில் இருக்கும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக் குறியாகத் தானே இருக்கும்.  

பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்று ஆள் மாறாட்டம் நடந்திருக்காது என்பது என்ன நிச்சயம்? 

'என் பையன எப்படியாவது டாக்டர் ஆக்கிடணும்' என்ற குற்றச் செயலில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீட் தேர்வு மட்டுமின்றி பல்வேறு அரசுத் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மையாக உழைக்கும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். இல்லையெனில், மாணவர்கள் மத்தியில் கல்வியின் மீதுள்ள ஆர்வம் குறைவதோடு, விரக்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.