மகாத்மா காந்தியை சந்தித்த 90 வயது மூதாட்டியின் பரிதாப நிலை!

காற்றில் தூசி பறக்கிறது, மராடு எனும் பகுதியில் உள்ள பிளாட்களை இடிக்க வேண்டிய நேரம்
மகாத்மா காந்தியை சந்தித்த 90 வயது மூதாட்டியின் பரிதாப நிலை!

காற்றில் தூசி பறக்கிறது, மராடு எனும் பகுதியில் உள்ள ஃபிளாட்டுகளை இடிக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால், சாந்தம்மா பிள்ளையின் கண்களில் கண்ணீர் திரண்டு வருகிறது. 90 வயதான அவரின் வாழ்க்கை இதற்கு முன் இத்தனை துயர்மிக்கதாக இருந்ததில்லை. சுதந்திர இயக்கத்தின் போது மகாத்மா காந்தியை தனிப்பட்ட முறையில் சந்தித்தவர் அவர், ஆனால் அவரைச் சுற்றியுள்ள உலகம் இன்று (2 அக்டோபர் 2019, புதன்கிழமை) 150-வது காந்தி ஜெயந்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், கிட்டத்தட்ட வீதிக்குத் தள்ளப்படும் நிலையில் உள்ளது அவரது வாழ்க்கை.

‘நாங்கள் 2011-ல் இந்த குடியிருப்பில் நுழைந்தபோது, எங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழும் என எதிர்பார்த்தோம். என் மகள் மற்றும் நான் இருவருமே விதவைகள், நாங்கள் இறக்கும்வரை இங்கு வாழலாம் என்று நினைத்தோம். எங்களுடைய பரம்பரை சொத்துக்களை விற்று, அதில் கிடைத்த மொத்த சேமிப்பைப் பயன்படுத்தித்தான் பிளாட்டை வாங்கி குடிபுகுந்தோம். என் வாழ்நாளில் நான் நிறைய மனிதர்களையும், இடங்களையும் பார்த்திருக்கிறேன், ஆனால் இது போன்ற ஒரு மனிதாபிமானமற்ற காலகட்டத்தை ஒருபோதும் எதிர்கொண்டதில்லை’ என்று அவர் கூறினார்.

இப்போது தனது மகள் மாயா பிரேம் மோகனுடன் வசித்து வரும் சாந்தம்மா, காந்தி எதிர்த்த ஊழல் முறையை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ‘ஒவ்வொரு நாள் கடக்கும் போதும் மக்கள் மேலும் மேலும் சுயநலக்காரரகளாகி வருகிறார்கள். அரசியல்வாதிகளுக்கு தேர்தலின் போது மட்டுமே நாம் தேவை. நீதிபதிகள் தங்கள் மனிதாபிமான உணர்வுகளை இழந்துவிட்டார்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் முறைகேடு இல்லாமல் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். நான் மன்னர் ஆட்சி செய்த முந்தைய திருவாங்கூர் மாநிலத்தில் கருணாகப்பள்ளியில் பிறந்தேன். அதிகாரிகள் நேர்மையாகவும், எப்போதும் பொதுமக்களுக்கு சேவை செய்யத் தயாராகவும் இருந்தனர். இன்றைய, ​​ஜனநாயகத் தலைவர்கள் ஆட்சிக்கு வரவே பணத்தை வாரி இறைக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால், எஸ்சி நீதிபதிகளிடம் எங்களை ஏன் இந்த சூழ்நிலைக்கு தள்ளினார்கள் என்று கேட்பேன்’ என்றார் சாந்தம்மா.

என் மகள் கடந்த பல ஆண்டுகளாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறாள். குளிர் மற்றும் தூசியால் என் நிலை மோசமடைந்துள்ளது. நான் என் முதுகெலும்பு முறிந்ததிலிருந்து, வெளியே எங்கும் போக முடியாமல் இந்த குடியிருப்பின் சுவர்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளேன். இங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு நான் இறந்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என்று அவர் கூறினார்.

முக்கிய தலைவர்களைப் பார்த்த நாட்களை சாந்தம்மா இன்னும் நினைவுகூர்கிறார். ‘எனது வீட்டிற்கு அருகில் லாலாஜி நினைவு பொது நூலகம் ஒன்று இருந்தது. அப்போது எனக்கு எட்டு வயதுதான் இருக்கும். சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்திஜி, ஜவஹர்லால் நேரு மற்றும் அருணா அசாஃப் அலி ஆகியோர் தங்கள் பயணத்தின் போது இந்த இடத்திற்கு வருகை தந்தனர். நான் மிகச் சிறியவளாக இருந்ததால், பெரியவர்கள் மலர்களை பரிசளிக்க என்னைத் அனுப்பினார்கள். அந்த நினைவுகள் இன்னும் புதியவையாக நினைவில் பதிந்துள்ளது’ என்றார் சாந்தம்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com