அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி உடைகிறதா?

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சி அமைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் நிலையில், தேர்தல் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி உடைகிறதா?

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சி அமைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் நிலையில், தற்போது ஒரு படி மேலே சென்று, தேர்தல் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. திமுகவுக்கு மட்டுமே எதிராக கருத்து தெரிவித்து வந்த பாஜக, கடந்த சில தினங்களாக ஆளும் அதிமுக அரசின் குறைபாடுகளையும் எடுத்துக்கூறி வருகிறது. 

2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்தது. தற்போது இந்தியாவில் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், இதர மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகளும் ஆட்சியில் உள்ளன. 

அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை கைப்பற்றும் பொருட்டு பாஜக வியூகம் வகுத்து வருகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சமீபத்தில் மேற்குவங்கத்தில் முற்றுகையிட்டு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். விரைவில் மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். 

தற்போது தேர்தல் ஆணையத்தால் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்கள் ஏற்கனவே பாஜக வசம் உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக காலூன்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து 5 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அதிமுகவே இந்தத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்தது. ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற்று விடலாம் என்ற கணிப்பில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாஜக, அதிமுகவிடம் கேட்டதாகவும், அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த ஒரு சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க, ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ். நரேந்திரன் ஆகியோர் தமிழக பாஜக ஐடி விங்-கிற்கு சில உத்தரவுகளை  பிறப்பித்துள்ளனர். 

அதன்படி, 'தமிழ்நாடு பாஜக' ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக  தமிழக அரசுக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள், அதிமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தன. எதிர்க்கட்சிகளோடு, அதிமுகவின் தேர்தல் கூட்டணி கட்சியான பாஜகவும் விதிவிலக்கன்றி பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது. 

இது தவிர தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிகழும் மக்களின் பிரச்னைகள் குறித்து கருத்து பதிவிட்டு வருகிறது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நாவினிப்பட்டி சேகரம் நா. பெருமாள்பட்டியில் சாலைப் பணிகளை துளிகூட மேற்கொள்ளாமல், 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக போர்டு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் என்று தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி, 'அகப்பட்டதை சுருட்டிக்கொள்கிறதா மாநில அரசு? சாலை பணியே செய்யாமல் ஒப்பந்தக்காரர் விளம்பரம் செய்வார் எனில் இதன் பின்புலத்தில் உள்ளவர் யார் என்பதை மக்கள் அறியவேண்டும் இது உண்மையெனில் இதுபோன்ற ஊழல்களை #LokAyukta லோக்ஆயுக்தா மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தமிழக பாஜக ஐடி குழு பதிவிட்டுள்ளது. 

'இதேபோன்று, சாலையில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியில் நகராட்சி சாலை ஒன்று மோசமடைந்துள்ளது. பள்ளிக்கு அருகில் உள்ள இந்த சாலையில் ஒரு கார் கூட செல்ல முடியவில்லை' ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி, 'தமிழகத்தில் லோக் ஆயுக்தா நடைமுறையில் இருக்கும் பொழுது இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டி பொதுநல வழக்கு பதிவு செய்து தவறு செய்பவர்கள் யாராயினும் தண்டிக்க வழிவகை உள்ளதே !! ஊழலற்ற ஆட்சியை அடைய வழிவகை உருவாக்குவோம்' என்று பாஜக ட்வீட் செய்துள்ளது. 

அடுத்ததாக, சட்டவிரோத மணல் ஏற்றுமதிக்கு நீதிமன்றம் தடை விதித்தும் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்காமல் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பன போன்ற பதிவுகள் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் உள்ளன. 

ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் தமிழகத்திலும் இதுபோன்ற தவறுகளை பாஜக சுட்டிக்காட்டுகிறது. எனவே இது அதிமுகவுக்கு எதிராகவோ அல்லது தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வகுக்கும் திட்டம் என்றெல்லாம் கூறுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஊழலுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக்கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.

எனினும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் நிலையில், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவுக்கு எதிரான இந்த ஒரு நிலைப்பாடும், பாஜகவின் முயற்சிகளுள் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடகத் தேர்தலிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பாஜக தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டது. இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்திய திட்டங்களின் மூலமாகவே கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்ற உதவியது என்று அமித் ஷாவே கூறியிருந்தார். 

எனவே, தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாமல் தனித்தோ அல்லது மற்ற கட்சிகளின் உதவியோடு தான் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருவதால், அவரை வைத்து பாஜக தமிழகத்தில் அரசியல் களம் காணலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. 

எனினும், 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் மக்களின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் அரசுக்கு எதிராக கருத்து பதிவிடும் பாஜகவின் தேர்தலுக்கான வியூகத்தில் இதுவும் ஒன்று தான். 

பொறுத்திருந்து பார்ப்போம் தமிழகத்தில் தாமரை மலருமா என்று...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com