தமிழ் எப்படி செம்மொழி தகுதியைப் பெற்றது தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல்கள்!

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர்
தமிழ் எப்படி செம்மொழி தகுதியைப் பெற்றது தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல்கள்!

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. 

செம்மொழி (Classical language)  
“ஒரு மொழியை, செம்மொழி என வகைப்படுத்தும் முறைமை, ஐரோப்பியாவில் தோன்றியது. கிரேக்கம் மற்றும் ரோமானிய  இலக்கிய வளத்தின் காரணமாக உலகளவில் கிரேக்கமும் , இலத்தீனும் அறிஞர்களால் செம்மொழிகளாகக் கருதப்பட்டன. இலக்கிய வளமே ஒரு மொழிக்கு 'செம்மொழி' எனும் தகுதியை பெற்றுத் தருகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 

கி.பி 794 முதல் கி .பி 1185 வரையிலான காலத்திய ஜப்பானிய இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன .17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு இலக்கியங்களும் செவ்வியல் இலக்கியங்களாக  கருதப்படுகின்றன. கி.பி 1660 முதல் கி.பி 1714 காலத்திய ஆங்கில இலக்கியங்கள் செவ்வியல் தன்மை கொண்டதாய் கருதப்படுகின்றன. கம்பராமாயணமும் , பெரியபுராணமும் செவ்வியல் இலக்கியங்கள் எனச் சிலர் கூறுகின்றனர்

செம்மொழிக்கான பதினோரு தகுதிகள் (Criteria for Declaring Classical Language)

1. தொன்மை 

2. தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 

3. பொதுமைப் பண்புகள் 

4. நடுவுநிலைமை 

5. தாய்மைத் தன்மை 

6. கலை பண்பாட்டுத் தன்மை 

7. தனித்து இயங்கும் தன்மை 

8. இலக்கிய இலக்கண வளம் 

9. கலை இலக்கியத் தன்மை 

10. உயர் சிந்தனை 

11. மொழிக் கோட்பாடு 

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். 

அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப் பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பண்பாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.

இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.


தமிழ்ச் செம்மொழி  வரலாறு  (History of Tamil Classical language)
இந்தியாவின் முதல் செம்மொழி தமிழே. தமிழுக்குப் பின்னரே சம்ஸ்க்ருதம், பாலி போன்ற மொழிகள் செம்மொழிகளாக இந்திய அரசால் அறிவிக்கப் பெற்றன. 1977ம் ஆண்டு சம்ஸ்க்ருதத்தை இந்திய அரசு செம்மொழியாக அறிவித்திருக்க வில்லை. 

தமிழ் செம்மொழி அறிவிப்பிற்கான போராட்டம் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. 18 ஆம் நூற்றாண்டு : பரிதிமாற் கலைஞர் முதன்முறையாக தமிழ் மொழியை “உயர்தனிச் செம்மொழி” எனும் சொல்லாட்சியோடு உரைத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த மகா சமாஜம் என பல அமைப்புகள் தமிழை செம்மொழியாக அறிவிக்கவும், இந்திய பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு முறையான இடம் தரவும் அறிவுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின.
1916 இல் தனித்தியங்கும் தமிழுக்கு பிறமொழிக் கலப்பால் விளைந்த தீங்குகளைக் களைய ‘தனித்தமிழ் இயக்கத்தை’ மறைமலையடிகள் தோற்றுவித்தார். 

1918 இல் குலசேகரப்பட்டணத்தில் நடைபெற்ற சைவசமயமாநாட்டில், தமிழ் மொழியை ஒரு செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் மறைமலையடிகள் கையொப்பமிட்டார். இது அன்றைய ஆளுநருக்கு அனுப்பப் பட்டது. 

1951 இல்சாகித்திய அகெடெமி உருவாக்க மாநாட்டில், அபுல் கலாம் ஆசாத், “தமிழ் செழுமையும், தொன்மையும் மிக்க இலக்கியங்களைக் கொண்டது. அம்மொழியின் கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி பெற்றவை. தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

1955 இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு மாநாட்டில், அபுல் கலாம் ஆசாத்தின் உரையைச் சுட்டி, தமிழை செம்மொழியாய் அறிவிக்க வேண்டும் என்று தன் தலைமையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

1966 இல் தேவநேயப் பாவாணர், “உலகின் முதன்மையான செம்மொழி” எனும் தன் ஆய்வை வெளியிட்டார். இதில் பல உறுதியான சான்றுகளுடன், தமிழே உலகின் முதன்மொழி என்பதை நிறுவினார். 

1977ம் ஆண்டு பாரிசில் நடந்த கூரியர் ஆசிரியர் மாநாட்டில், ஜீன்பிலியோஸா எனும் அயல்நாட்டு தமிழறிஞரோடு உரையாடும் போது தான் மணவை.முஸ்தபா சில உண்மைகளை உணர்ந்தார். செம்மொழி எனும் காரணத்தால், சம்ஸ்க்ருதம் உலகமெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் முதன்மை பெறுகின்றது. ஆனால், தமிழுக்கு அத்தகைய உயர்நிலை இல்லை என்பது.

1981 இல்மதுரையில் நடந்த ஐந்தாம் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழியாக அறிவிக்கும் கோரிக்கை குறித்து மணவை.முஸ்தபா உரையாற்றினார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனார், தமிழ் செம்மொழி கோரிக்கையை அரசின் கோரிக்கையாக ஏற்று அதற்குரிய ஆவணங்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னர், இது குறித்து பல முறை நினைவூட்டல் கடிதங்கள் தந்தும் பதிலில்லை.

2000 ஆம் ஆண்டில், டில்லி செம்மொழி மாநாட்டில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், “முதல்வர், மணவை.முஸ்தபா விடுத்த கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் துறை செயலரைப் பணித்தார். ஆனால் அச்செயலரோ, தமிழை செம்மொழி ஆக்கினால், அதை செத்த மொழிகளுடன் சேர்த்ததாகிவிடும் என்று கூறி அக்கோப்பை முடித்து விட்டார்” என்று பதில் தந்தார்.

2000 இல் அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்(Dr. George L. Hart), தமிழின் செவ்வியல் தன்மை பற்றி வெளியிட்ட கட்டுரையில், “தமிழின் செவ்வியல் தன்மையை மறுப்பது, இந்தியப் பண்பாட்டின் உயிர்மூச்சாய் விளங்குவனவற்றுள் ஒன்றை மறுப்பதற்கு ஒப்பாகும்” என எழுதுகிறார். 

2002-2003 இல் தில்லி தமிழ்ச் சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், தலைநகர் தமிழ்ச்சங்கம் மேலும் பல அமைப்புகள் தொடர்ந்து தமிழை செம்மொழியாக்க அரும்பாடுபட்டன. 

2004 இல்கரந்தை தமிழ்ச் சங்கம், கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி, ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று நடுவண் அரசிற்கு அனுப்பியது.

தமிழக அரசின் சார்பில் தமிழ் ஒரு செம்மொழி என மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையும், பல்கலைக் கழக மானியக் குழுவும் அறிவிக்க வலியுறுத்தி, தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் போன்ற, இந்திய முதன்மை அமைச்சர்களுக்கு கடிதங்கள் எழுதப் பட்டன. 

2004 இல் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நாடாளுமன்ற இரு அவைக் கூட்டுக் கூட்டத்தில் “தமிழ் செம்மொழி” என அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO), செம்மொழிக்கான வரையறைகள் அதனிடம் இல்லை என்பதையும், தன்னிடம் இவை இவையே செம்மொழி என்று எந்த பட்டியலும் இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும் கோரிக்கை குறித்து கருத்து கேட்க 'சாகித்திய அகடெமி' நிறுவனத்தை அணுகியது நடுவண் அரசு. அந்நிறுவனத் தலைவர், தன்னை தலைமையாகக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை  அமைத்தார். செப்டம்பர் 2, 2004-ல் கூடிய அக்குழு 'செம்மொழி' என்பதற்கான வரையறை எங்கும் காணப்படாததை கண்டறிந்தது. மேலும்,உலகளாவிய அளவில்  செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்ஸ்க்ருதம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகள், எதன் அடிப்படையில் செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதை ஆராய்ந்தது. ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க தகுதிகளை வகுத்தது.  
பலருடைய தொடர் முயற்சிகளுக்குப் பின், 12.10.2004 தமிழ் மொழி செம்மொழி என நடுவண் அரசால் அறிவிக்கப் பட்டது. அதற்குப்பின் இந்திய செம்மொழிகளின் பட்டியலில் 4 முதல்) சமஸ்கிருதம் , தெலுங்கு (2008 முதல்) கன்னடம் (2008 முதல்) மலையாளம் (2013 முதல்) ஒடியா (2014 முதல்) சேர்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com