தீபாவளிக்கு இனிப்பு, காரம் செய்வோரும், வாங்குவோரும் கவனிக்க! 

தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இனிப்பு, கார வகைகளை தயாரிப்போர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டு, அறிவுறுத்தியுள்ளது உணவு பாதுகாப்புத்துறை.
தீபாவளிக்கு இனிப்பு, காரம் செய்வோரும், வாங்குவோரும் கவனிக்க! 


தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இனிப்பு, கார வகைகளை தயாரிப்போர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டு, அறிவுறுத்தியுள்ளது உணவு பாதுகாப்புத்துறை.

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள பேக்கரிகள், ஹோட்டல்கள், சிறு தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பது வழக்கம். இனிப்பு, கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்த உணவு பாதுகாப்புத்துறையின் அறிவுரைகள்:

உணவு பொருட்களை தயாரித்து, விற்பனை செய்யும் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச்சட்டம் 2006-ன் படி உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். அதை பார்வையில் படுமாறு லேமினேஷன் செய்து வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தற்காலிக தயாரிப்பில் ஈடுபடுபவர்களும் உரிய சான்றிதழ் பெற வேண்டும். புதுப்பிக்கத் தவறினால் நாளொன்றுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். இதை பின்பற்றாதவர்கள் மீது சட்டப் பிரிவு 63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஈக்கள் மொய்க்காத வண்ணம் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடாக்கி பயன்படுத்தக்கூடாது. இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தயாரிப்புக்கு பயன்படுத்தும் எண்ணெய், நெய் விவரங்களை விற்பனைக்கூடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். தயாரிப்புகளுக்கு தூய்மையான குடிநீரையே பயன்படுத்த வேண்டும். அதற்கு நீரின் தரத்தை அறியும் பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும். இனிப்பு, கார வகைகளை தயாரித்த பிறகு பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாகக் கழுவி, பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு வைக்க வேண்டும்.

இனிப்பு, கார வகைகளை பொதுமக்களுக்கு கொடுக்கும் போது, உணவு சேமிப்பதற்கான கலன்களில் நிரப்பி கொடுக்க வேண்டும். பால் பொருட்களை மற்ற பொருட்களுடன் கலந்து கொடுக்கக்கூடாது. அதை தனியாகவே பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும். உணவு பொருட்களை பேக்கிங் செய்பவர்கள், தலையுறை, கையுறை, மேலுறை அணிதல் அவசியம். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உடற்தகுதி உடையவராகவும், நோய் பாதிப்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

 பொட்டலம் செய்து விற்கும் போது, அவற்றில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை அச்சடித்து விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இனிப்பு, காரம் வாங்கும் போது பின்பற்ற வேண்டியவை 

“இனிப்பு, கார வகைகளில் அதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது போன்று காணப்பட்டால் அவற்றை வாங்கக்கூடாது. பால் பொருட்களை, மற்ற இனிப்பு வகைகளுடன் கலந்து வாங்கக்கூடாது.

ஈக்கள் மொய்த்தும், சுகாதாரமற்ற இடமாக இருப்பின் அங்கு இனிப்பு, கார வகைகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாங்கும் பொருட்களில் துர்நாற்றம் வீசுகிறதா? என்பதை நுகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு முறையாக ரசீது பெற வேண்டும். பணியாளர்கள் தூய்மையாக இருக்கின்றனரா? சுகாதாரமான வகையில் பொருட்களை கையாளுகின்றனரா? என்பதை நோட்டமிட வேண்டும்.

இனிப்பு, கார வகைகளின் காலாவதியாகும் நாள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com