நேற்று சர்வதேச கை கழுவும் தினம்! இன்று உலக உணவு தினம்! எப்பூடி?

எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு வேளை வந்துவிட்டால், நாம் அருகில் இருப்பவர்களிடம் கேட்கும் கேள்வி “சாப்டாச்சா ?"
இன்று உலக உணவு தினம்!
இன்று உலக உணவு தினம்!

எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. உணவு வேளை வந்துவிட்டால், நாம் அருகில் இருப்பவர்களிடம் கேட்கும் கேள்வி “சாப்டாச்சா ?"

மனிதர்களில் இதைக் கேட்கக் கூட நாதியற்றவர்களும், வக்கற்ற அடித்தள மக்களும் உண்டு. இதில் மற்ற உயிரினங்களின் கதி சொல்லவே வேண்டாம். சரி ஒரு மறு வாசிப்பாவது செய்வோம்

அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுவது ஆச்சரியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

உலக உணவு தினம் - அக்டோபர் 16
அக்டோபர் 16 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு கடந்த நவம்பர் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநாவின்  20வது பொது மாநாட்டில்  உலக உணவு தினமாக (World Food Day) பிரகடனப்படுத்தப்பட்டது.

ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு தற்போது 192ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு கொடுப்பது ஒவ்வொரு அரசின் அவசியம் என ஐ.நா சபை தெரிவிக்கிறது.

2030-இல் பசி இல்லை
”2030 இல் பசி இல்லை” என்பது நிலைத்த வளர்ச்சி இலக்கு (SDG) 2-இன் முழக்கம். உலக உணவு தினம் இதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கெனவே செய்யப்பட்டுவரும் முயற்சிகளை வென்றெடுக்க முயல்கிறது.  அனைவருக்கும், எங்கும், தேவையான,  பாதுகாப்பான, ஆரோக்கியமான, சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே  “பசி இல்லை” என்பதன் பொருள்.

உலக உணவு தினம் 2019-இன் கருத்து வாசகம்: நமது செயல் நமது எதிர்காலம். “2030 இல் பசி இல்லை என்பது சாத்தியம்”

உலகப் பசி
37 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவை அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு சார்ந்த பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது.

ஆனால் இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாகவும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது.

கொஞ்ச காலம் அமைந்து கிடந்த உலகப் பசி இப்போது அதிகரிக்கிறது. உலகம் 2018 அறிக்கையின் படி 82.1 கோடி மக்கள் நீடித்த குறை உணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பசியால் வாட 67.2 கோடி மக்கள் உடல் பருமனால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 13 இலட்சம் பேர் மிகை எடையால் வாடுகின்றனர். இவற்றை நம்மால் மாற்ற முடியும்.

விலங்குகளுக்கும் உணவு
மனிதனின் சுய தேவைக்காக காடுகளை நாடிய காலம் போய் இன்று பேராசை கொண்டு அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகையினால் மனிதன் தன் சுய நலத்திற்காக காடுகளை அழித்து சாலைகளை போடுகிறான். இதனால் காடுகளில் வாழும் விலங்குகள் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கின்றது.

தன் உணவு மண்டலம் அழிக்கப்படுவதால் யானை, சிங்கம், புலி, கரடி போன்ற பெரும் உயிரினங்கள் உணவிற்காக மனிதனின் வாழ்விடங்களை நோக்கி படையெடுக்கின்றன. யானைகள் தங்களின் பாதைகளை ஒருபோதும் மறக்காது. ஒருமுறை ஒரு பாதையை தேர்தெடுத்தால் தன் மரணம் வரை அதே பாதையில்தான் உணவிற்காக சென்றுவரும். அதனை தவறாக புரிந்து கொண்டு நாம் உணவு தேடி வரும் யானைகளை அடித்து விரட்டுகிறோம்.

உணவு பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள்
பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைவருக்கும் தேவையான உணவு கிடைக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு சரியாக செய்வதில்லை. 

அதோடு வசதி படைத்த பெரும் பணக்காரர்களினால் உயர்த்தப்படும் விலைவாசி உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நடுத்தர, ஏழை மக்கள் மட்டுமே கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் வறுமையில் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக பலர் உணவு சாப்பிட, வியர்வை சிந்திய விவசாயி தனக்கு சாப்பிட உணவில்லை என எலி கறியை சாப்பிட்ட கொடுமையெல்லாம் நம் நாட்டில் நடந்ததை நாம் அறிந்திருக்கிறோம்.  உணவு பொருட்களை பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு பதுக்குதல். இப்பொழுது கூட வெங்காயம் , பூண்டு பதுக்கி வைத்து விலையேற்றம் செய்ததை அறிவோம். என்ஐஏ தீவிரவாதிகளைப் பிடிக்கும் அரசால் பதுக்கல்காரர்களை பிடிக்கமுடியவில்லை.

தென்னாப்பிரிக்காவில் மண்ணால் சுடப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டு குழந்தைகள் உள்பட பலர் உயிர் இழக்கின்றனர். இப்படி பல நாடுகளில் பல உணவுப் போராட்டங்கள் தினமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. விளைச்சல் குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பொருட்களுக்கு போதிய விலை இல்லாதது என உணவு உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே எண்ணற்ற பிரச்னைகள். 

இதன் ஒருகட்டமாக விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் போட்டப்பட்டு கட்டடங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது போன்ற வேதனையான நிகழ்வுகள் நம்மை சர்வ சாதாரணாமாகவே கடந்து செல்கின்றன. 

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்களில் சராசரியாக 10 - 100 நபர்கள் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுப் பொருள் தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கிறோம். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணமாக இருக்கின்றது. இப்படி வீண் செய்யும் உணவுப் பொருட்களால் பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும். ஆனால் நம்மிடம் உபரியாக இருக்கும் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் எண்ணம் நம்மில் எத்தனைப் பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. 

பூக்களை உற்பத்தி செய்வதில் இருக்கும் முன்னெடுப்புகள், உணவு காய்கறி, பழங்கள் உற்பத்தியில் இல்லை. மலர்களாக மாலைகளாக அவை மீண்டும் வெற்று குப்பைகளாக வந்து சேர்கின்றன இப்பூக்கள்.

இன்றைய நிலை
மக்களின் வாழ்க்கை முறை காரணமாக எதிர்காலத்தில் பணம் இருந்தாலும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் எல்லா மக்களுக்கும் உணவு கிடைக்கும் என புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் தானிய வகைகளின் உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறதே என புலம்புகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். மறு புறமோ ஏசி அறையில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை உட்கொள்கிறார்கள் இன்னொரு வர்க்கத்தினர். 

இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் போய்விட்டதுடன் உணவிலும் நாகரிகத்தை பார்க்க ஆரம்பித்து கூடவே உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கால்சியம், புரோட்டின், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்துவித சத்துகளும் நிறைய சரிவிகித உணவை அன்றாடம் மிகக் குறைவானவர்களே உட்கொள்கிறார்கள். தொழில், படிப்பு என வெளியூர்களுக்குச் செல்பவர்கள் பலரும் நல்ல உணவின்றி தவிக்கிறார்கள். 

மையக்கருத்து - 2019 : 'நமது செயல்பாடு நமது எதிர்காலம் : 2030க்குள் பட்டினி இல்லாத உலகம் சாத்தியம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

குடும்பங்கள், விவசாயிகள்,  அரசுப் பிரதிநிதிகள், நன்மை விரும்பிகள், சமூக ஊடகவாதிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செய்கை மூலம் பேசி தங்கள் வாழ்க்கையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு “இல்லை பசி” என்பதை உருவாக்க வேண்டும் என்பதே  அறை கூவல்.

வீணாவதை குறைப்பதும், சிறந்ததை உண்ணுவதும், நிலைத்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதுவுமே உலகைப் பசியின் பிடியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள். இன்று நாம் எடுக்கும் முடிவு உணவை எதிர்காலத்திற்காகச் சேமிப்பதற்கு இன்றியமையாதது ஆகும்.

இல்லை பசி என்பதை வாழ்க்கை வழி ஆக்க உங்களுக்கு உதவும் சில நடவடிக்கைகள்:

ஆரோக்கியமான நிலைத்த உணவுமுறையை தழுவுங்கள்
வீணாகும் உணவைப் பிறருக்கு வழங்குங்கள்
தேவைக்கு மட்டும் வாங்குங்கள்
உணவை சேமியுங்கள்
வீணாகும் உணவை பயன்படுத்துங்கள்
வீட்டில் அல்லது சமுதாயத் தோட்டத்தில் உங்கள் உணவை உற்பத்தி செய்யுங்கள்
மண்ணையும் தண்ணீரையும் சுத்தமாக வைத்திருங்கள்
குறைந்த அளவு நீரை பயன்படுத்துங்கள்
அந்தந்தப் பகுதி உணவு உற்பத்தியாளர்களை ஆதரியுங்கள்
குறைவைக் கொண்டு அதிகம் உறபத்தி செய்யுங்கள்
உள்நாட்டுப் பொருளையே வாங்குங்கள்
ஊட்டச்சத்து குறைவால் ஆண்டு தோறும் 30 லட்சம் குழந்தைகள், ஐந்து வயதுக்குள் உயிர் இழக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. எனவே உணவை வீணாக்காதீர்கள்.


உணவுப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க நம் வீட்டில் இருந்தே நம்மால் செய்ய முடிந்த செயல்கள்

* என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ற உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
* ஃபர்ஸ்ட் இன், ஃபர்ஸ்ட் அவுட் என்பது போல முதலில் வாங்கிய உணவுப் பொருட்களை பயன்படுத்திய பிறகு அடுத்த பொருட்களைப் பயன்படுத்துவதால் உணவுப்பொருட்கள் கெடுதல், வீணாகுதல் தடுக்கப்படும்.
* ஃப்ரிட்ஜ் இருக்கிறது என பல நாளுக்கான பொருளை ஒரே நாளில் வாங்கி குவித்து வைப்பது. பின்னர் அதில் பலவற்றை தூக்கி எறிவது போன்ற செயல்களை பலர் செய்வதுண்டு. இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க, சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி வைக்கலாம்.
* சாப்பிடும்போது உணவுகளைப் பரிமாறும் அளவு குறைவாக இருந்தால், மீதமான உணவை எச்சில் படாமல் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
மக்களிடம் மீதமாகும் உணவுப் பொருட்களை சேமித்து பசியால் வாடும் மக்களுக்கும் நம்மை அண்டிப் பிழைக்கும் விலங்குகளுக்கும் பகிர்ந்தளிக்கும் பொது நலன் சேவகர்கள் இன்று பெருகிவருவது வரவேற்கத்தக்க செய்தி. இன்னும் அதிகமான சேவகர்கள் உருவாகி பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும். அதேசமயம் நாம் வீணாக்கும் உணவுப் பொருட்களின் அளவினையும் கட்டுப்படுத்தி பசியால் வாடுவோர் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com