தொடரும் ஆழ்துளை அவலங்கள்; தூங்கும் ஆழ்துளை, ஆழ்குழாய்க் கிணறுகளை முறைப்படுத்தும் சட்டம்?

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் குடித்திருக்கின்றன ஆழ்துளைக் கிணறுகள்.  
தொடரும் ஆழ்துளை அவலங்கள்; தூங்கும் ஆழ்துளை, ஆழ்குழாய்க் கிணறுகளை முறைப்படுத்தும் சட்டம்?

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் குடித்திருக்கின்றன ஆழ்துளைக் கிணறுகள்.  

இந்தக் கொடூரத்துக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு ‘ஆழ்துளை, ஆழ்குழாய்க் கிணறுகளை முறைப்படுத்தும் சட்டம்’ ஒன்றை இயற்றியிருக்கிறது.

இந்தியாவெங்கும் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள். 2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஆழ்குழாய், ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துக் கொடுத்தது. பெரும்பாலான மாநில அரசுகள் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆழ்துளை கிணறுகளை செரிவூட்டும் விதமாக ஏற்படுத்தப்படும் கட்டமைப்புகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளின் கான்கிரீட் பாதுகாப்பை அகற்றாமல் தோண்டப்படும் கிணறுகளால், அவை பாரம் தாங்காமல் உடைந்து விழும் நிலை உள்ளது.

தண்ணீர் இல்லாததால் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை செரிவூட்டும் விதமாக, அதை சுற்றிலும், மழைநீர் சேகரிக்க ஏதுவாக, வடிகட்டி கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கிணறுகளில், மணல், ஜல்லி, கூழாங்கல் உள்ளிட்டவை நிரப்பப்படுகின்றன.

மேலும், ஆழ்துளை கிணற்றின் பிளாஸ்டிக் குழாயில், தண்ணீர் உட்புகும் விதமாக, குறிப்பிட்ட ஆழத்திற்கு அதில் மெல்லிய துவாரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும், இத்தகைய நுட்பமான கட்டமைப்பு அமைவது இல்லை. பெயரளவிற்கு மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டு, அதில் ஜல்லி பரப்பப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு தண்டனைச் சட்டம்
ஆழ்துளை, ஆழ்குழாய்க் கிணறுகளைத் தோண்ட, 5000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்பு கிணறுதோண்ட அனுமதி அளிக்கும். அனுமதி பெறாமலோ, பதிவு செய்யாமலோ கிணறு தோண்டினால் 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை; 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.

நான்கு புறமும் அண்டை மாநிலங்கள் நதிகளை அணை கட்டித் தடுத்து விட்ட நிலையில், தமிழக விவசாயிகள் கிணறுகளை நம்பியே விவசாயம் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் பராமரிப்பதில் காட்டும் அலட்சியம், அப்பாவிக் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கி விடுகிறது.

மேட்டுப்பாங்கான பகுதிகளில் இருக்கும் நிலங்கள் பெரும்பாலும் கிணற்றுப் பாசனத்தையே நம்பியிருக்கின்றன. ஆறுகளில் தண்ணீர் வரும்போது கிணறுகளில் 50 அடி, 100 அடிக்கே தண்ணீர் ததும்பும். கோடையில் வறண்டு விடும். சற்று வசதியுள்ள விவசாயிகள், கிணறு களை ஆழப்படுத்துவார்கள்.

வசதியற்ற விவசாயிகள் அப்படியே கைவிட்டு விடுவார்கள். கிராம நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளிடமோ, விவசாயத் துறையிடமோ கிணறுகள் குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தால், இதுவரை வெட்டியுள்ள கிணறுகள், புதிதாகத் தோண்டப்படும் கிணறுகள் கணக்கில் இடம் பெறுவதோடு கண்காணிப்பிலும் வரும். அந்த வகையில் இந்த சட்டம் முக்கியமானது என்கிறார்கள் சிலர்.

ஆனால், ‘‘இந்த சட்டம் வருவாய்த் துறைக்கு வருமானம் அளிக்கும் மற்றுமொரு சட்டமாக மட்டுமே இருக்கும். இதனால் தமிழகத்தில் உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படும்...’’ என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.

‘‘தமிழகம் 80% விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம். ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு நிதானமாக அனைத்து அம்சங்களையும் விவாதிக்க வேண்டும். தன் பட்டா நிலத்தில் முள்வேலி போடவோ, காம்பவுண்ட் சுவர் கட்டவோ, கிணறு தோண்டவோ ஒரு நபருக்கு முழு உரிமையும் இருக்கிறது. 

‘‘ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. கிணறு அமைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும்; கிணறு அமைக்கும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கிணற்றைச் சுற்றிலும் முள்வேலி இட வேண்டும்; கைவிடப்படும் கிணறுகளை மண், மணல், ஜல்லி கொண்டு மூடவேண்டும். கிணற்றுக்கு அருகில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என பல அம்சங்கள் அதில் உண்டு. ஆனால் தமிழக அரசின் சட்டம் பாதுகாப்பு, முறைப்படுத்தல் தொடர்பான அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை.

பணப் பரிவர்த்தனையைப் புகுத்தி, லஞ்சத்துக்கான வாய்ப்பையே உருவாக்குகிறது’’ என்கிறார் அவர்.

குழந்தைகளின் உயிருக்கு நிகர் ஏதுமில்லை. அவர்களைப் பாதுகாக்க ஒரு சட்டம் தேவை; ஆனால் அது விவசாயிகளை பாதிப்பதாக இருக்கக்கூடாது.  

மாவட்டம் தோறும் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த வாரமே திறந்த நிலையில் இருந்த பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டதாக வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதே போல் தேனி மாவட்டத்தில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிரச்னை வரும்போது மட்டுமே அந்தந்த சட்டங்கள் விழிக்கும் பின் தூங்கும்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com