சுமையாய் மாறிப் போன சுங்கச் சாவடிகள்..?

தற்போது தமிழகத்தில் ஆரவாரமின்றி 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சுமையாய் மாறிப் போன சுங்கச் சாவடிகள்..?

தற்போது தமிழகத்தில் ஆரவாரமின்றி 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 5,000 கி.மீ. க்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை. சாலைகளும் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. 

பல சாலைகளில், மின்விளக்கு வசதி இல்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி வழங்கி வருகிறது. இந்தாண்டு ஏப்ரலில், 23க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது, 20 சுங்கச் சாவடிகளில், கடந்த, 1 முதல், கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 

சுங்கச் சாவடிகள் எவை?
ராமநாதபுரம் - போகலுார்; விருதுநகர் - எலியார்பதி; திண்டுக்கல் - கொடை ரோடு; கரூர் - மணவாசி; விழுப்புரம் - மொரட்டாண்டி, விக்கிரவாண்டி; சேலம் - மேட்டுப்பட்டி, நாதக்கரை, ஓமலுார், வைகுண்டம்; தர்மபுரி - பாளையம், திருச்சி - சமயபுரம், செங்குறிச்சி, திருமாந்துறை, திருப்பராய்துறை, வாழவந்தான் கோட்டை; கள்ளக்குறிச்சி - வீரசோழபுரம்; கரூர் - வேலன்செட்டியூர்; ஈரோடு - விஜயமங்கலம்; நாமக்கல் - ராசம்பாளையம் ஆகிய, 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. இந்த சுங்கச் சாவடிகளில், 5 முதல், 15 ரூபாய் வரை, சுங்கக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், பயணியர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கசாவடி வரலாறு
சுங்க வரி என்பது நமக்கு புதிதல்ல. பண்டைய தமிழ் மக்கள் உலகிலுள்ள பல நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இத்தகைய ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்ததாகவும் அதற்கான சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும் , புலிச் சின்னம் பொறித்தலும், சுங்கம் பெறுதலும், பற்றி பட்டினப்பாலை என்ற நூல் குறிப்பிடுகிறது.

தரை வழிச் சுங்க வரி வாங்கப்பட்டது. கடல் வழிச் சுங்க வரி மதுரை நாயக்கர் ஆட்சியில் சிறிய அளவிலேயே இருந்தது. முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – 1120) நாட்டு மக்களின் வரிப்பளுவை உணர்ந்து சுங்க வரியை நீக்கினான். அதனால் சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்டான்.

வாசாப் என்பவர் பாரசீக நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், பாண்டிய மன்னன் ஒருவனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர் என்றும், சுங்க அமைச்சர் பொறுப்பு அப்துல் ரஹிமான் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் குறிப்பிடுகின்றார்.

7 ஆம் நூற்றாண்டு  ஆட்சியில் இருந்த அஷ்பூர்பிபாலின் ஆட்சியின் கீழ் சுசா-பாபிலோன் மக்கள் சுங்க நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி வந்தனர் பயணிகள் பணம் செலுத்த வேண்டியிருந்தது. அரிஸ்டாட்டில் மற்றும் பிளின்னி அரேபியா மற்றும் ஆசியாவின் மற்ற பகுதிகளில் சுங்க சாவடிகள் இருந்ததாக குறிப்பு எழுதியுள்ளனர். இந்தியாவில், அர்த்தசாஸ்திரம் சுங்கம் பற்றி கூறுகிறது. ஜெர்மானிய பழங்குடியினர் மலைப்பகுதி முழுவதும் பயணிக்க வரி விதித்துள்ளன.

ஆனால் இந்தச் சுங்க வரி, நாடு விட்டு நாடு செல்லவுமே ஒழிய, இங்கு காண்பது போல் ஒரே மாநிலத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே சுங்க வரி இல்லை.

சுங்கசாவடி காரணம்: 
சுங்கசாவடி வசூலிக்கும் சாலையில் அந்த சாலையை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பணம் வசூலித்தனர். ஆனால் இன்று பணம் அதிகமாக உள்ள காரணத்தால் எந்த சாலை எந்த கட்டுமான நிறுவனம் கட்டுகிறதோ அதே நிறுவனத்திடம் நமது அரசுகள் குத்தகைக்கு விடுகிறது.

நமது சுதந்திர நாட்டில் நமது சாலையில் பயணிக்க ஏன் வரி வசூலிக்க வேண்டும்? நாம் இருப்பது என்ன அடிமை இந்தியாவா? நண்பர்களே இது சுதந்திர இந்தியா. இதில் ஏன் பயணிக்க தனியாக வரி கட்ட வேண்டும்.  சரி வரி கட்டலாம் என்றே வைப்போம். அந்த வரி அரசுக்கு சென்றால் அதுவும் ஒரு வகை வருமானம். அதை விட்டுவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு என்ன  லாபம்       இது? இதற்கு மோடி அரசை மட்டும் குறை சொல்ல முடியாது. இதற்கு முன்னால் இருந்த மன்மோகன் சிங் அரசும் இதே வேலையைத் தான் செய்தது. இது ஒரு அரசியல் கலாசாரம் போல் உள்ளது. 

சாலை வரிகள்
ஆயுட்கால சாலை வரி மற்றும் பெட்ரோல், டீசல், செஸ் வரி, சுங்கச் சாவடி வரி என ஒவ்வொரு நகர்வுக்கும் மக்கள் வரி செலுத்துகின்றனர். இலகு ரக வாகனம், மத்திய ரக வாகனம், கனரக வாகனம் என வாகனங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகனம். 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை உள்ளவை மத்திய ரக வாகனங்கள், 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்டவை கனரக வாகனங்கள்.

சுங்கச்சாவடி வருமானம் 
தேசிய நெடுஞ்சாலை சுமார் 1,00,087 கி.மீ. நீளம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2017 நிலவரப்படி, 48,589 கி.மீ. க்கு புதிய  நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறது, அவற்றில் 25,641 கி.மீ. ஏற்கனவே நான்கு மற்றும் ஆறு பாதைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது; 9,575 கி.மீ. ஒப்பந்த அமலாக்கத்தின் கீழ் 233 கி.மீ. செயல்படுத்தப்படுகிறது மற்றும் 13,373 கி.மீ. முனைப்பில் உள்ளது.

சுங்கச் சாவடிகளின் ஆண்டு வருமான விபரத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தில் வெளியிடுவது, தாமதமாகி வருகிறது..நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், 459 இடங்களில், சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 46 இடங்களில், சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. சுங்கச் சாவடிகளின் கட்டணம், ஆண்டுதோறும், 10 சதவீத அளவிற்கு உயர்த்தப்படுகிறது. சாலை அமைக்கப்பட்டதற்கான செலவை வசூல் செய்த பின், சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி. ஆனால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், கட்டண உயர்வு மட்டுமே அமலாகி வருகிறது. நாடு முழுவதும், 2017ல், சுங்கச் சாவடிகளுக்கு, 16 ஆயிரத்து, 365 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு, 5,500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆனாலும், இதுகுறித்த விபரங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை. தமிழக சுங்கச் சாவடிகளுக்கு, 2016ல், கிடைத்த வருவாய் விபரங்கள் மட்டுமே, இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. திட்டமிட்டே, 2017க்கான விபரங்களை வெளியிடாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், பல தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு, முறையாக இல்லை. வசூல் செய்வதில் மட்டுமே, சுங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சில இடங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், நேரடியாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.பராமரிக்கப்படாத சாலைகளில், சுங்க கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, ஆண்டு சுங்க கட்டண வருவாய் விபரங்களை வெளியிட்டால், அதனடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதற்காகவே, வருவாய் விபரங்கள் மறைக்கப்படுகின்றன.

சுங்கச்சாவடியில் ஒரு சுரங்கம்!
அதிகளவில் சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதனை பயன்படுத்துவோர் அத்தனைபேருமே இதனை உணர்வார்கள். அப்படிபட்ட சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும்போது மக்கள் வருத்தப்பட்டார்களா என தெரியவில்லை.

பூத் ஒவ்வொன்றின் கீழும் சுரங்கம் வழியாக இணைக்கப்பட்டிருக்கும். அந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட பணம் அவ்வப்போது கீழே சுரங்கம் வழியாக இறக்கப்படுகிறதாம். சுங்கச் சாவடிகளில் வசூலாகும் பணம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் நாள்தோறும் செலுத்த வேண்டுமாம். இதில் கொடுமை என்னவென்றால் வசூலிக்கப்படும் தொகையில் பாதிக்கும் மேல் கணக்கிலேயே வராது என்கிறார்கள், நம்பர் 2 அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படுகிறதாம். அரசாங்கத்திற்கு மிகப்பெரியளவில் பொய் கணக்கே சமர்ப்பிக்கபடும். உண்மையில் இவர்கள் கணக்கில் காட்டாத தொகையே நாடு முழுவதும் கணக்கு எடுத்தாலே சில லட்சம் கோடிகள் தாண்டும். இவை எதுவுமே வெளியுலகத்துக்கு வராது, ஏனென்றால் இந்த நிறுவனங்களில் மறைமுகமாக பெரும் அரசியல்வாதிகளே மறைமுக முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள்.

சமீபத்தில்கூட நொய்டாவில் சுங்கச்சாவடி பொதுமக்களின் தொடர் நீதிமன்ற போராட்டத்தினால் இழுத்து மூடப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் முதலீடு செய்த பணத்தைவிட பலமடங்கு சம்பாதித்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டதால். அதுபோலவே நாட்டில் உள்ள பல சுங்கச்சாவடிகளின் உண்மையான கணக்கை எடுத்தால் அவர்கள் முதலீடு செய்த பணத்தைவிட ஏற்கனவே பலமடங்கு பார்த்திருப்பார்கள். இது எப்போது தெரியவரும்? உண்மையான கணக்கு இருந்தால் மட்டுமே சாத்தியம். பொய் கணக்கு சொல்பவர்கள் கொள்ளையை தொடரவே விரும்புவார்கள். சுங்கச்சாவடியில் கட்டண நிர்ணயத்தை நியாயமான தொகை வைத்து நடத்த வேண்டுமா என மக்கள் யோசிக்க வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரில் உள்ள ஒரு முக்கிய சுங்கச்சாவடியில் அந்த மாநிலத்தின் உள்ள ஒரு அமைப்பு அடித்து நெறுக்கியது.  சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு அமைப்பு ஒரு சுங்கச்சாவடி-ஐ அடித்து நொறுக்கியது. கடந்த 2017-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் பெருங்குளம் அருகில் ஒரு சாவடி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அங்கு சில நிபந்தனைகள் விதித்தது. உள்ளூர் வாகனங்கள் கட்டணம் கட்ட வேண்டும். ஆனால், அதே பழைய ஒரு வழி சாலை ம‌ட்டுமே! அங்கு உள்ளது. புது சாலை அமைக்கவில்லை ஆனால் பணம் மட்டும் வேண்டும் என்ன ஒரு நியாயம். அங்கு உள்ள மக்கள் சினம் கொண்டு எங்கள் ராமேஸ்வரம்  வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிக்க நீங்கள் யார்? என்று கூறி அந்த சாவடிக்கு தடை உத்தரவு வாங்கி உள்ளனர்.

காற்றில் பறந்த பாஜக வாக்குறுதி
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, சுங்கச் சாவடிகளை அகற்றப் போவதாக, பா.ஜ., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின், அது, கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, சுங்கச் சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால் சில சுங்கச் சாவடிகளை, சாலை விரிவாக்கம் மற்றும் கட்டண வசூலிப்பு அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிப்பதற்கு, இந்நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது.

சுங்கக் கட்டண பாதிப்புகள்
சுங்கக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மக்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து சரக்குக் கட்டணம் உயர்த்தப்படுவதாக சரக்குந்து உரிமையாளர்கள் தெரித்துள்ளனர். இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரும். பொருளாதார மந்தநிலை காரணமாக மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில், செலவுகள் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது.

பேருந்தில் பயணம் செய்தாலும், பொருட்களை வாங்கினாலும் அதற்கான சுங்க வரியை நாமே தான் கட்ட வேண்டியுள்ளது. எனவே மக்களே நாம் விழித்துக் கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மக்களை போல் எதிர்த்து கேள்வி கேட்டு நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

மீண்டும் முதலாம் குலோத்துங்கனை எதிர்பார்த்து தமிழக மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com