சுடச்சுட

  

  ஒரே நாடு! ஒரே தளபதி! இராணுவ ஆட்சிக்கு வழிகோலுமா?

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 09th September 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Indian_Army

  ``முப்படைகளுக்கும் ஒரே தளபதி!” 
  `முப்படைகளுக்கும் ஒரே தளபதி (Chief of Defence Staff - CDS)’ என பிரதமர் மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். கார்கில் யுத்தத்தின்போது ராணுவத் தளபதியாக இருந்த வி.பி. மாலிக், பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

  இந்தியப் படை
  பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியால், 1776ம் ஆண்டு, கொல்கத்தாவில், ராணுவப் படை தொடங்கப்பட்டது. இது தான், தற்போதைய இந்திய ராணுவத்தின் தொடக்கப் புள்ளி. இதனைத் தொடர்ந்து, 1833ம் ஆண்டு, வங்காளம், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில், ராணுவப் படை விரிவுபடுத்தப்பட்டது.  இவையனைத்தும் 1895ம் ஆண்டு, ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு, British – இந்திய ராணுவமாக உதயமானது.

  இதன் மேல்மட்டத்தில் ஆங்கிலேயர்கள் இருந்தாலும், அடுத்தடுத்த இடங்களில், இந்தியர்களே பொறுப்பில் இருந்தனர். அப்போது, பிரிட்டிஷ்காரர்களுக்காக, உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி, வெளிநாட்டுப் போர்களிலும் இந்திய ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக, இந்தியா மாறியுள்ளது என `குளோபல் பயர்பவர்’ எனும் ‘G.F.P.’ குறியீட்டில், தெரியவந்துள்ளது. ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு, இங்கிலாந்து, பிரான்ஸ்-க்கு மேலாக, இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பின் இந்தியாவிற்கு உள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான, 133 நாடுகளின் ராணுவ வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

  ஒரே தளபதி பின்னணி 
  தற்போது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளுக்கு தனித்தனி தலைமை அதிகாரிகள் உள்ளனர். இவை மூன்றையும் உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு செயலாளராக மூத்த சிவில் சர்வீஸ் அதிகாரியும் இருந்து வருகின்றார்.

  பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், முப்படை அதிகாரிகளுக்கு போர் குறித்து உத்தரவிடுவதா என்ற கேள்வி நெடுநாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு தற்போது விடை காணப்பட்டுள்ளது.

  கடந்த 1962ஆம் ஆண்டு சீனாவுடன் இடம்பெற்ற போரின்போது, இந்தியாவின் முப் படைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் விமானப்படை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

  கடந்த 1965இல் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது இந்திய கடற்படையிடம் பல்வேறு முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

  இதனையடுத்து 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற பாகிஸ்தான் போரின்போது அன்றைய இந்திய இராணுவ தளபதி சாம் மானெக் ஷா திறம்பட செயல் பட்டார்.

  விமானப்படை, கடற்படை தளபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுத்தார். இதுவே இந்தியா அந்த போரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

  இதன்பின் கடந்த 1999ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் இடம்பெற்ற கார்கில் போரின்போது இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை அவசியம் என்பதை அரசியல் தலைமையும் பாதுகாப்புப் படைகளும் அழுத்தமாக உணர்ந்தன.

  இதுதொடர்பாக அப்போதைய துணை பிரதமர் எல்.கே.அத்வானி தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு விரிவான ஆய்வுகளை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது. அதில், இராணுவம், விமானப்படை, கடற்படைக்கு ஒரே தலைமைத் தளபதியை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

  ஆனால் பல்வேறு காரணங்களால் பரிந்துரை கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கார்கில் மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்தார்.

  ஒரே தளபதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை உருவாக்கினார். இந்த பின்னணியில் மத்திய அரசு தற்போது இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  தலைமை பாதுகாப்பு ஊழியர் (Chief Of Defence Staff) என்றால் என்ன?

  சி.டி.எஸ். என்பது அரசாங்கத்தின் ஒற்றை புள்ளி இராணுவ ஆலோசகராக இருக்கும். மூன்று ராணுவ சேவைகளிடையே ஒருங்கிணைப்பு முக்கியமானது. மூன்று ராணுவ சேவைகளின் நீண்டகால திட்டமிடல், கொள்முதல், பயிற்சி மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகள் இதனால் மேற்கொள்ளப்படும்.

  குறுகிய, எதிர்கால போர்கள் விரைவான மற்றும் நெட்வொர்க் மையமாக மாறும் போது, மூன்று சேவைகளிடையே ஒருங்கிணைப்பு முக்கியமானது.  கூட்டு திட்டமிடல் மற்றும் பயிற்சியின் மூலம் வளங்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாக அமையும். இந்தியா ஓர் அணு ஆயுத நாடாக இருப்பதால், சி.டி.எஸ். அணுசக்தி பிரச்னைகள் குறித்து பிரதமரின் இராணுவ ஆலோசகராகவும் செயல்படும்.

  சி.டி.எஸ். மூன்று சேவை தலைவர்களுக்கு மேலே இருப்பதால், கொள்முதலை மேம்படுத்துதல் மற்றும் செயல்முறையை நெறிப்படுத்துவதன் மூலமும் இந்த பணியை ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சி.டி.எஸ். முன்மொழிவு இரண்டு தசாப்தங்களாக உள்ளது. உயர் இராணுவ சீர்திருத்தங்களை பரிந்துரைக்க 1999 ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்திற்கு பின்னர் நியமிக்கப்பட்ட கே. சுப்ரமண்யம் குழுவால் இது முதலில் செய்யப்பட்டது. இருப்பினும், சேவைகளிடையே ஒருமித்த தன்மை மற்றும் அச்சங்கள் இல்லாததால் இந்த அமைப்பு  குறித்து முன்னேற்றம் எதுவும் இல்லை.

  சி.டி.எஸ். மீதான அச்சத்தை தீர்ப்பதற்கான ஒரு நடுவராக ஒரு நிரந்தர தலைமை தலைவரை (COSC) நியமிக்க நரேஷ் சந்திரா குழு 2012 இல் பரிந்துரை செய்தது.

  லெப்டினென்ட் ஜெனரல் டி.பி. ஷேகட்கர் அளித்த 99 பரிந்துரைகளில் சி.டி.எஸ். ஒன்றாகும்.  2019 டிசம்பரில் முத்தரப்பு சேவைகள் தொடர்பான 34 பரிந்துரைகளை கொண்ட தனது அறிக்கையை சமர்ப்பித்தது ஷேகட்கர் (ஓய்வு) குழு.

  சி.டி.எஸ். இல்லாத நிலையில், தற்போது மூன்று தலைவர்களில் மூத்தவர் COSC இன் தலைவராக செயல்படுகிறார்.  ஆனால் இது ஒரு கூடுதல் பங்கு மற்றும் பதவிக்காலம் மிக குறைவு. உதாரணமாக ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ். தனோவா  கடற்படை தலைவர் சுனில் லன்பாவிடமிருந்து பெற்று  மே 31 அன்று  சிஓஎஸ்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.  எவ்வாறாயினும், ஏசிஎம் தனோவா செப்டம்பர் 30ம் தேதி ஓய்வு பெறவிருப்பதால் சில மாதங்கள் மட்டுமே இந்த பதிவியில் இருப்பார்.  அவர் ஓய்வுக்கு பின்னர் இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு மாற்றப்படும்.   ஜெனரல் ராவத்தும் மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்து டிசம்பர் 31 அன்று ஓய்வு பெற உள்ளார்.

  அனைத்து முக்கிய நாடுகளிலும், குறிப்பாக அணு ஆயுத நாடுகளில், ஒரு சி.டி.எஸ். உள்ளது.  இந்திய ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட யு.கே., பாதுகாப்பு செயலாளருக்கு சமமான ஒரு நிரந்தர செயலாளரை போன்றது சி.டி.எஸ்.

  சி.டி.எஸ். என்பது பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தொழில்முறை தலைவராகவும், இராணுவ மூலோபாய தளபதியாக, செயல்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இங்கிலாந்து அரசாங்க வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.  பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் மற்றும் பிரதமரின் மிக மூத்த இராணுவ ஆலோசகராகவும் உள்ளார்.  நிரந்தர செயலாளர் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் முதன்மை சிவில் ஆலோசகராக உள்ளார்.  கொள்கை, நிதி மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிற்கான முதன்மை பொறுப்பை கொண்டுள்ளார்.  மேலும் துறைசார் கணக்கியல் அதிகாரியாகவும் உள்ளார்.

  பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்படி, இந்தியாவில்  பாதுகாப்பு அமைச்சகம் இப்போது சி.டி.எஸ்.சை உருவாக்கும் பணியை தொடங்கும்.  இதற்கு சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்படுகிறது.

  அமைச்சர்கள் குழு
  ` 1999 கார்கில் போருக்குப் பிறகு, பாதுகாப்புத்துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 'முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுப்ரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டது.

  நரேஷ் சந்திரா குழு
  `CDS உருவாக்குவது தொடர்பான விஷயத்தை, அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிய பின், பார்த்துக்கொள்ளலாம்' என அமைச்சர்கள் குழு தெரிவித்தது. அதன் பின்னர் பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நரேஷ் சந்திரா கமிட்டி மற்றும் ஷேகட்கர் கமிட்டி ’முப்படைகளுக்கும் ஒரே தளபதி’ உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது.

  இருப்பினும், CDS உருவாக்கம் தொடர்பாகப் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளிடையே இது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டமுடியவில்லை என்பதால், செயல்வடிவம் பெறாமலே இருந்துவந்தது. தற்போது பிரதமர் மோடியின் அறிவிப்பு, இதுதொடர்பான விவாதங்களை மீண்டும் உருவாக்கியுள்ளது.

  ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் பாதுகாப்புத் துறை நிபுணருமான ஹரிகரனிடம் இதுகுறித்துப் பேசினோம்... ''கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தான் படைகள் நமது எல்லைக்குள் ஊடுருவியதே இந்தியாவுக்கு இரண்டு வாரங்கள் கழித்துதான் தெரியவந்தது. உளவுத்துறைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது மிகப்பெரிய குறைபாடாகப் பார்க்கப்பட்டது. அதனால்தான் பாதுகாப்புப் படைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்காக கே.சுப்ரமணியன் கமிட்டி அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

  அதன் பரிந்துரைகளில் மிகவும் முதன்மையானது ’முப்படைகளுக்கும் ஒரே தளபதி (Chief of Defence Staff - CDS)’ உருவாக்குவது. ஆனால், அது இன்றுவரையில் செயல்வடிவம் பெறாமலே இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நேரு பிரதமராக இருந்தபோது வாரம் ஒருமுறை முப்படைத் தளபதிகளைச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்வார். அந்த நடைமுறை, பிற்காலத்தில் இல்லாமல் போனது. தற்போது ராணுவம், கடற்படை, விமானப்படைக்குத் தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர்.

  இவர்களை உள்ளடக்கி ’Chiefs of Staff Committee’ செயல்படும், மூவருள் பணியில் மூத்தவர் ஓய்வுபெறுகிற காலம்வரையில் அந்த வாரியத்தின் தலைவராக (Chief of Army Staff - COAS) இருப்பார். தேவைக்கேற்ப முப்படைகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தின் மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்படும்.

  ஆனால், போர் என்பது தற்போது களயுத்தத்தைத் தாண்டி, அணு யுத்தம், சைபர் யுத்தம் என விரிவடைந்து வருகிற சூழலில், அதற்கேற்ப துரிதமாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்துப் படைகளையும் ஒருங்கிணைத்த தலைமை என்பது அவசியமாகிறது. முப்படைக்கும் தனித்தளபதிகளின் நிலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. இவர் மற்ற மூன்று தளபதிகளுக்கும் மேலான நிலையில் இருப்பார். முப்படைகளுக்கும் தொடர்புப் புள்ளியாக அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கும் பிரதமருக்கும் பாதுகாப்பு, போர் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முதன்மையானவராக இருப்பார் என்கின்றனர்.

  தற்போது பாதுகாப்புத்துறை செயலர்தான் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார். ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள அனைவருமே குடிமைப்பணிகளில் இருந்து வருபவர்கள். பாதுகாப்புத்துறை சார்ந்த பின்புலம் கொண்டவர்கள் இதில் இடம்பெற வேண்டும். பல மேற்குலக நாடுகளிலும் அப்படித்தான் உள்ளது. அதனால், பாதுகாப்புத்துறை செயலகத்தில் இருப்பவர்களிடம் இதற்கு எதிர்ப்புகள் வருவதுண்டு. இந்தியா அனைத்துச் சீர்திருத்தங்களிலுமே பின்தங்கிதான் உள்ளது. இந்த மாற்றம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று தான்”.

  இதைப்போலவே சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் ராணுவமும் ஜனநாயகமும் எவ்வாறு மோதிக்கொள்ளாமல் இணக்கமாக இருந்தன என்பது பற்றி, அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு "Army and Nation - The Military and Indian Democracy Since Independence" என்கிற புத்தகத்தை ஸ்டீவன் ஐ.வில்கின்சன் என்கிற யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் எழுதியிருந்தார்.

  அதில் அவர் குறிப்பிடுபவை, ``ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்றபோதிலும், ஜனநாயகத்தில் ராணுவத்தின் அதிகாரத்தை, ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா செய்ய முனைந்த சீர்திருத்தங்களைப் பாகிஸ்தான் செய்யத்தவறியது. அதனால்தான் அங்கு அரசியலில் ராணுவம் தலையிட நேர்ந்து பல பத்தாண்டுகளுக்கும் தொடர்ந்து சர்வாதிகார ராணுவ ஆட்சி நடைபெற்றது. இந்தியா செய்த சீர்திருத்தங்களுள் முதன்மையானது ராணுவத்துக்கு அனைத்துப் பிரதேசங்களில் இருந்து வீரர்களைத் தேர்வுசெய்து, ராணுவத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது. இரண்டாவது ராணுவத் தளபதிகளை அரசியல் விவகாரங்களிலிருந்து விலக்கி, அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மிகத் தொலைவான இடங்களில் தூதர் பதவிகளை வழங்கியது. ராணுவத்துக்கென தனி உளவுத்துறை என இல்லாமல் ஒருங்கிணைந்த உளவுத்துறையை உருவாக்கி ராணுவ அதிகாரிகள், தளபதிகளை ஓய்வுக்குப் பிறகும் கண்காணிப்பிலேயே வைத்தது.

  இத்தகைய முன்னெச்சரிக்கை, சீர்திருத்த நடவடிக்கைகளை ‘Coup proofing', அதாவது ராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுவதிலிருந்து காப்பது எனக் குறிப்பிடுகிறார். இதில் மிகவும் முதன்மையானதாக ஆசிரியர் மேற்கோள் காட்டுவது சுதந்திரத்துக்குப் பிறகு முப்படைத் தளபதியை அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து நீக்கி, அவருக்கான அதிகாரத்தைக் குறைத்து பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்தது. பின்னர் முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை அல்லாமல், மூன்று படைகளுக்கும் தனித்தனி தலைமையை உருவாக்கி, அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிற நடைமுறையை உருவாக்கியது. பாதுகாப்புப் படைகளுக்கு இடையே அதிகாரத்தைப் பிரித்தளித்தது. அரசுக்கு எதிராக அவை ஒன்றிணையாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக்கீழ் செயல்படுவதில் மிக முக்கியமான பங்காற்றியது. தளபதிகளுக்கான பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகள் என நிர்ணயித்து, அவர்களை அரசியல் முடிவுகளில் இருந்து விலக்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் ராணுவத் தளபதிகள் பதவியில் இருப்பதால் அரசியல் அபிலாஷைகள் உருவாக நேரிடும் என்பதை நிர்ணயித்த பதவிக்காலத்துக்குக் காரணமாகக் குறிப்பிடுகிறார்.

  1962 சீன யுத்தத்தில் இத்தகைய சீர்திருத்தங்களால், படைகள் ஒருங்கிணைப்பில் தொய்வு ஏற்பட்டது என்கிறபோதிலும், இந்தியாவின் அண்டை நாடுகளில் (குறிப்பாக பாகிஸ்தானில்) ஏற்பட்டது போன்றதான ராணுவத் தலையீடு, ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற சர்வாதிகார இடையூறுகள் என்பது ஏற்படாமல் தவிர்ப்பதில் மிக முக்கியமான பங்காற்றியது. சீன யுத்தத்துக்குப் பிறகே CDS உருவாக்க வேண்டும் என்கிற பரவலாக எழுந்தபோதிலும், இதுநாள் வரையில் எந்த அரசும் அதைச் செயல்படுத்த எண்ணவில்லை” என்கிறார்.

  முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்ற பிரதமரின் அறிவிப்பு, ராணுவச் சீர்திருத்தத்துக்கு உதவுமா, சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

  இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி முப்படைகளின் தலைமை தளபதியாக குடியரசு தலைவர் இருக்கிறார். பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துபவராகவே குடியரசு தலைவர் பதவி இருந்தாலும் கூட , அவருக்கான அதிகாரத்தை புறந்தள்ளிவிட முடியாது. முப்படைகளுக்குமான தலைமை தளபதியாக குடியரசு தலைவர் இருக்கும் நிலையில், அவர் மூலமாகவே முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட கட்டளைகள் பிறப்பிக்க முடியும். இந்த சூழலில், 

  முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்கிற பதவி உருவாக்கம் தேவையற்றது. அதனை உருவாக்குவதன் மூலம் குடியரசு தலைவரின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது என்கிறார்கள் 

  முப்படைகளுக்கும் ஒரே தளபதி ஒருங்கிணைப்பா? ஒற்றையாட்சியா?

  முப்படைகளுக்கும் ஒரே தளபதிதான் என்கிற நிலையை உருவாக்கப்போகிறார்களா ? அல்லது மூன்று தலைமை தளபதிகளின் பதவிகள் நீக்கப்படாமல் அந்த 3 தளபதிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு கட்டளையிட ஒரு தலைமை தளபதியாக தலைமை பாதுகாப்பு ஊழியர் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பு பணி என்றால் தவறில்லை.

  அரசியமைப்புச் சட்டப் பிரிவு 53(2) இன் படி குடியரசுத் தலைவரே முப்படைகளுக்கு உச்சத் தலைவராக (Supreme Command of the Armed forces)தொடர வேண்டும். அதைவிடுத்து சட்டப் பிரிவு 53(2) இன் திருத்துகிறேன் என்று வழக்கம் போல அவசர கதியில் செய்தால்,

  ”ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் ஒரே தலைவரைக் கொண்டு வந்தால் நாட்டில் ராணுவ ஆட்சியை நிலை நிறுத்தி ஒரே இரவில் பிரதமரையே வீட்டுக் காவலில் வைத்துவிடலாம் . இது ரொம்ப ஆபத்து” என்று காமராஜர் எச்சரித்தது நடந்துவிடும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai