சுடச்சுட

  

  இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? தம்பதியரின் உண்மைக் கதை

  Published on : 11th September 2019 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Farmers

  ஆறுமுகம் லட்சுமி தம்பதியினர், திருவள்ளூரைச் சேர்ந்த விவசாய நில உரிமையாளரிடம் 20,000 ரூபாயை முன் பணமாக பெற்றுள்ளனர். அக்கடனை திரும்ப செலுத்துவதற்காக அந்த உரிமையாளரின் பணியிடத்திற்கு தன் மூன்று குழந்தைகளுடன் (சுவாதி, சந்தோஷ், சதீஷ்) கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். பல ஏக்கர் அளவுள்ள அந்நிலத்தில் மா மற்றும் கரும்பு சாகுபடியை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூபாய் 45,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  காலை புலரும் முன்னே ஆறுமுகம் வேலைக்கு சென்று விடுகிறார், லக்ஷ்மி தனது மற்ற பணிகளை முடித்துவிட்டு அவருடன் சேர்ந்து கொள்கிறார். இவர்களது அன்றாட வேலையே கன்றுகளை நடுவது, நிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் முன்பு முந்தைய அறுவடையில் எஞ்சியவற்றை எரிப்பது, களையெடுத்தல், நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மணலை வெட்டுதல், மேலும் எப்போதெல்லாம் செடிகளுக்கு பூச்சுக்கொல்லிகள் தேவையோ, எப்போதெல்லாம் அவைகளை உபயோகிக்கச் சொல்லி அறிவிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் எந்த ஒரு முன்னெச்சரிக்கைப் பாதுகாப்புமின்றி தங்களது வெறும் கைகளாலே செய்கின்றனர்.

  பிள்ளைகளை சரியான  நேரத்திற்கு பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை, அப்படியே சரியான நேரத்திற்கு கூட்டிச்சென்றாலும் வேலைக்கு தாமதமாக வர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது, இதனால் அவர்களின் உரிமையாளர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இந்த காரணத்தினால் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே நிறுத்தும்படி ஆகிவிட்டது. இவர்களின் அன்றாட வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை, வாரத்திற்கு இருநூறுலிருந்து முன்னூறு ரூபாய் வரை மட்டுமே அளிக்கப்படுகிறது. பல நேரங்களில் அந்த குழந்தைகளையும் வேலை செய்யுமாறு உரிமையாளர் கட்டளையிடுகிறார், அக்குழந்தைகளுக்கு தலா பத்து ரூபாய் வழங்கப்படுகிறது. தோப்பிலிருந்து வெளியேறவோ அல்லது வேறொரு இடத்தில் வேலை தேடுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கவோ அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

  எந்த ஒரு காரியத்திற்காகவும் அவர்களை வெளியே அனுப்புவதில்லையாம். ஆறுமுகத்தின் மருமகன் சாவிற்கு கூட அந்த இடத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கபட்டிருக்கிறது. நீண்ட நேர வேலை, சுகாதாரமற்ற வாழ்க்கைச் சூழல் மற்றும் சரியான உணவு கிடைக்காததால், ஆறுமுகம் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆறுமுகம் அம்மை நோயால் வாடிய போதும் வேலை செய்ய வேண்டுமென நிர்பந்திக்கப்பட்டுள்ளார். கழுத்தில் கட்டி, கடுமையான வயிற்று வலி இப்படி ஒவ்வொன்றாக அவரை வாட்டியெடுத்த போதிலும், படுக்கையிலே பல மணி நேரத்தை கழித்த போதிலும், அவருக்கு வேலை பார்க்கும் கட்டாயத்தை உருவாக்கியுள்ளார் உரிமையாளர். லக்ஷ்மி தனது வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும், கணவனையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆறுமுகத்திற்கு  மருத்துவரிடம் சிகிச்சை பெற அனுமதிக்குமாறு உரிமையாளரிடம் கெஞ்சிக் கேட்டபோது,​​​​ அவர் உடல்ரீதியாகவும் வாய்மொழியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

  ஆறுமுகத்தின் உடல்நிலை மிகவும் பலவீனமானதும் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுக்க அனுமதிக்குமாறு உரிமையாளரிடம் கேட்டிருக்கிறார் லக்ஷ்மி. ஐந்து நாட்களில் அவர்கள் திரும்பி வந்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து நாள் முடியும் முன்பே இந்த உரிமையாளர் அவர்களின் ஊருக்கு சென்று மற்ற கிராமத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார். அவர்கள் அங்கு தங்கியிருந்த பதினைந்து நாட்களில் குறைந்தது பத்து முறையாவது இப்படி மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதோடல்லாமல வேலைக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்.

  வேலை செய்யும் இடத்திற்கு வந்ததும் ஆறுமுகத்தின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, லக்ஷ்மியின் உறவினர் ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவியிருக்கிறார். அந்த மோசமான நிலையிலும் கூட லக்ஷ்மியையும், குழந்தைகளையும் ஆறுமுகத்தை மருத்துவமனையில் சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். லக்ஷ்மியும் தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தோடு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு அந்த அன்றாட வேலையையும் செய்துள்ளார்.

  ஆறுமுகம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோதும் கூட அவரை ஓய்வெடுக்க விடாமல் தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக அதிக வேலையை கொடுத்துள்ளார் அந்த நில உரிமையாளர். நிலைமை முற்றிலும் கை மீறிப்போன நிலையில் அவர்களை எப்படியாவது இதிலிருந்து தப்ப வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அதற்கான சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிட்டியுள்ளது, அதை சரியாக உபயோகித்துள்ளார்கள். அங்கிருக்கும் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று அங்கிருக்கும் அதிகாரியிடம் தங்களின் நிலையை விளக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கொத்தடிமை முறையிலிருந்து மீட்டெடுத்து  அவர்களுக்கு விடுதலை சான்றிதழ் மற்றும் ஆரம்ப மறுவாழ்வு தொகையாக, ஆளுக்கு 1000 ரூபாயும் வழங்கப்பட்டது. அவர்கள் அதே கிராமத்தில் வாழத் தொடங்கினர். முதலில் வீட்டை விட்டு வெளியேருவதற்கே பயந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அக்கம்பக்கத்தினரின் உதவியால் அவர்களாலும் சுதந்தர காற்றை சுவாசிக்க முடிந்தது.

  இன்று ஆறுமுகம் அரக்கோணத்தில் தன்னுடைய சகோதரியின் இடத்தில் தங்கி நிம்மதியாக வேலை செய்து வருகிறார். லஷ்மியும் குழந்தைகளை தைரியமாக கவனித்து வருகிறார். வாழ்க்கை எவ்வாறெல்லாம் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது என்று ஆனந்தத்துடன் பகிர்ந்து கொள்கிறார். இக்குடும்பத்தினர் உள்ளூர் அதிகாரிகளை அணுகி சாதிச் சான்றிதழை வழங்கக் கோரியுள்ளனர். தங்களின் அன்றாட பிழைப்பிற்கு நிலம் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலருடன் (வி.ஏ.ஓ) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டுவிட்டது. மின்சார இணைப்பும் தேவையென்று கோரியுள்ளனர். அக்குடும்பம் இப்போது தங்கள் கால்களில் சுயமாக  நிற்க ஆரம்பித்திருக்கிறது.

  மூன்று குழந்தைகளும் உள்ளூர் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் கனவுகளை அடைய வேண்டுமென இப்போதிலிருந்தே நன்கு படிக்க தொடங்கிவிட்டார்கள். மூவரும் தாங்கள் பிற்காலத்தில் என்னவாக சாதிக்க வேண்டுமென்று சிந்திக்க தொடங்கிவிட்டார்கள், ராணுவத்தில் இணைந்து சேவை செய்யவேண்டும், ஆசிரியராகி தொண்டு புரியவேண்டும் என்று பற்பல கனவுகளை சுமந்து வருகிறார்கள். கொத்தடிமைகளே இல்லாத தலைமுறையை படைக்க விரும்புகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai