காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் கைதுக்கு வைகோ தான் காரணமா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால் தான் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் கைதுக்கு வைகோ தான் காரணமா?

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மாநிலங்களவையில் அறிவித்தார்.

வீட்டுச்சிறையில் காஷ்மீர் தலைவர்கள்:

இந்த சமயத்தில், பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை, போக்குவரத்து சேவை என அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டன. அதே நேரத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவும் ஒருவர். இவர் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லாவின் மகன் ஆவார்.

 ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கும்படியும் அவரது மகன் ஒமர் அப்துல்லா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆகஸ்ட் 6ம் தேதி நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மசோதா தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

அமித் ஷா - ஃபரூக் அப்துல்லா மோதல்:

அப்போது பேசிய அமித் ஷா, ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை; வீட்டுச் சிறையிலும் வைக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், அன்றைய தினமே காவல்துறையின் புடைசூழ, செய்தியாளர்களிடம் பேசிய  ஃபரூக் அப்துல்லா, 'மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவது பொய். என்னை வீட்டுச் சிறையில் தான் வைத்துள்ளார்கள்' என்று கூறியது கடும் விவாதத்திற்கு உள்ளது.  

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்று மத்திய அரசு கூறி வருகிறது.  அவ்வாறு இருக்க ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை இன்னும் வெளியில் விடாதது ஏன்? ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது ஜனநாயக விரோதம் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளன. 

ஃபரூக் அப்துல்லாவுக்காக குரல் கொடுக்கும் வைகோ:

இந்த சூழ்நிலையில் தான் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஃபரூக் அப்துல்லாவின் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்த வைகோ, இறுதியாக ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'ஃபரூக் அப்துல்லாவுக்கு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வைகோ அவரது உறவினர் அல்ல. ஏற்கனவே அவரது உறவினர்கள் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்' என்று பேசிய நீதிபதிகள், பல்வேறு கட்ட வாதங்களுக்கு பிறகு இறுதியில், 'ஆட்கொணர்வு மனு மீது மத்திய உள்துறை அமைச்சம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகம் வரும் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஃபரூக் அப்துல்லா கைது

இந்த நிலையில் தான் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டிலேயே அவர் சிறை வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கும் காங்கிரஸ் கட்சியினர், வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

தந்தை கொண்டுவந்த சட்டத்தில் மகன் கைது!

இந்த பொது பாதுகாப்புச் சட்டமானது 40 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1978ஆம் ஆண்டில் மரக்கடத்தல் சம்பவத்தை தடுக்க அப்போதைய முதல்வரும், ஃபரூக் அப்துல்லாவின் தந்தையுமான ஷேக் அப்துல்லா கொண்டு வந்தார். இதன்படி, 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். முன்னதாக, ஹுரியத் பிரிவினைவாதத் தலைவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது கூட, தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பொது பாதுகாப்புச் சட்டம் வாபஸ் பெறப்படும் என பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா கூறியிருந்தார். 

ஃபரூக் அப்துல்லாவின் கைதுக்கு வைகோ தான் காரணமா?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தினால் தான் ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு வைகோ தான் காரணமா என்று காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளது. எனினும், எந்த காரணத்தினால்  ஃபரூக் அப்துல்லாவை அரசு கைது செய்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் பதில் அளித்தால் மட்டுமே தெரியவரும். 

முன்னதாக, வைகோ மீது பல்வேறு எதிர்மறையான கருத்துகள் இருந்துவரும் நிலையில்,  ஃபரூக் அப்துல்லா விவகாரத்திலும் வைகோ அவசரப்பட்டு விட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் 40 ஆண்டுகால நண்பர் வைகோ என்பதையும் நாம் இங்கு மறக்கக்கூடாது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com