டிக் டாக் செயலி விளையாட்டா? விபரீதமா? 

டிக் டாக் செயலியை உபயோகிக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
டிக் டாக் செயலி விளையாட்டா? விபரீதமா? 

சிவகங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு, நகைகளுடன் 'டிக் டாக்' தோழியுடன் தலைமறைவான செய்தி சமீபத்தில் தீயாய் பரவியது. பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட டிக் டாக், தற்போது ஆபாச மற்றும் குற்றச் செயல்களுக்கு வழிகாட்டுவதாக இருப்பதாக டிக் டாக் வெறுப்பாளர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டிக் டாக் செயலியை உபயோகிக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு  எடுத்துக்காட்டாக பல சம்பவங்களை நாம் தினமும் சந்தித்து வருகிறோம். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்தியாவில் அறிமுகமான டிக் டாக் செயலிக்கு இன்று பலரும் அடிமை. ஒரு கட்டத்தில் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை மாறி இப்போது டிக் டாக் இல்லாமல் எதுவும் இல்லை என்ற அளவுக்கு மாறிவிட்டது.

டிக் டாக் செயலியில் ஆபாசமான விடியோக்கள் அதிகரித்து வருவதாகவும், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. டிக் டாக் செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

டிக் டாக் செயலியால் மோசமான பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் டிக் டாக் மோகத்தில் மூழ்கிய சிவகங்கையைச் சேர்ந்த வினிதாவுக்கு, அந்த செயலி மூலமாக தோழி சரண்யா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து டிக் டாக் விடியோக்கள் வெளியிட்டனர். இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்படவே, திடீரென ஒருநாள் தனது வீட்டில் இருந்த நகைகளுடன், தோழி சரண்யாவுடன் தலைமறைவானார் வினிதா. பின்னர், இதுகுறித்து வினிதாவின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்க, அடுத்த இரு தினங்களில் வினிதா திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தோழி சரண்யாவுடன் வினிதா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, வெளிநாட்டிலிருந்து இருந்த வந்த கணவருக்கும், வினிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதால், தோழி சரண்யாவின் வீட்டிற்கு சென்றதாக கூறினார் வினிதா.  

இதற்கு முன்னதாக எந்த ஒரு அறிமுகமும் இல்லாத ஒரு நபரை மொபைல் செயலி மூலமாக அறிந்துகொண்டு அவருடன் தலைமறைவாகும்  அளவுக்கு டிக் டாக் மக்களை ஆட்டிப்படைக்கிறது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இல்லை. 

தெலங்கானாவில் நடு ஆற்றில் இறங்கி வீடியோ எடுத்த இளைஞர்களில் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். டிக் டாக் வீடியோவில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் அபாயகரமான இடங்களில் வீடியோ எடுக்க முற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுவது தொடர் கதையாகி வருகிறது. 

டிக் டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதை, கணவர் கண்டித்ததால் பெரம்பலூரைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். பரபரப்புக்காக ஹரியானாவில் தண்டவாளத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மூவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். குஜராத்தில் தொழில் அதிபர் ஒருவர் தான் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக தனது காரை எரித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் ஏராளம். 

இதைவிட அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் என்னவென்றால் சேலத்தில் பல பெண்களின் டிக் டாக் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக 28 குடும்பப் பெண்கள் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சாதாரண ஒரு புகைப்படத்தை வைத்தே மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் வெளியிடும் இவர்களிடம் பெண்களின் வீடியோக்கள் கிடைத்தால் சொல்லவா வேண்டும்..

டிக் டாக் செயலி உபயோகிப்பவர்களிடம் இது குறித்து கேட்கும் போது, 'சில காரணங்களால் எங்களது தனிப்பட்ட திறமைகளை நாங்கள் வெளியே கொண்டு வரமுடியவில்லை. டிக் டாக் மூலமாக நாங்கள் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்; முக்கியமாக எங்களுக்குத் தெரிந்த நடனத்தை வெளிப்படுத்துகிறோம். மேலும், இதன் மூலம் புதிய உறவுகள் கிடைக்கிறது. நாங்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறோம். தனிமையை தவிர்க்க முடிகிறது' என்றெல்லாம் காரணம் தெரிவிக்கின்றனர். டிக் டாக் வீடியோ வெளியிட்டதால் அதைப்பார்த்து தனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது என்றும் அதன் மூலம் தங்களது வாழ்க்கை மாறியுள்ளது என்றும் பலர் கூறுகின்றனர். 

அதே நேரத்தில், டிக் டாக் எதிர்ப்பாளர்கள் இதனை கலாச்சார சீரழிவு என்றும் இதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். 

டிக் டாக் செயலி இல்லை என்றாலும் நாம் மணிக்கணக்கில் மொபைல் போனில் செலவிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. டிக் டாக் செயலில் சமூக, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது என்று கூறி அதனை இந்தியாவில் முழுவதுமாக தடை செய்தாலும், இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில், இதுபோன்று அடுத்தடுத்த செயலிகள் பயன்பாட்டிற்கு வரத்தான் செய்யும். குடிப்பழக்கம் போன்று மொபைல் பயன்படுத்துவது, டிக் டாக் விடியோக்கள் செய்வது என்பதும் போதைப்பழக்கம் தான்.

உங்களால் 24 மணி நேரத்திற்கு மொபைல் போனை உபயோகிக்காமல் இருக்க முடியுமா? என்று கேட்டால் 10 சதவீதத்தினர் வேண்டுமானால் முடியும் என்று கூறுவார்கள். சிலர், ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்று கூறுவார்கள். அப்படி இருக்க டிக் டாக் செயலியை தடை செய்தால் குற்றச் செயல்கள் சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதேபோன்று மற்றொரு செயலி அறிமுகம் ஆகாது என்பது என்ன நிச்சயம்? 

டிக் டாக்கை தடை செய்வது இதற்குத் தீர்வாக இருக்காது. மாறாக, டிக் டாக் செயலில் ஆபாச விடியோக்கள் வெளியிடத் தடை விதிக்கலாம். வரம்பு மீறி விடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். முக்கியமாக பெற்றோர்களின் மொபைல் போன்கள் மூலமாக குழந்தைகள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.

பள்ளி செல்லும் குழந்தைகள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இதனை உபயோகிக்க தடை விதிக்கலாம். அதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வரலாம்.

அப்படி ஒருவேளை இந்த செயலியை முழுவதுமாக தடை செய்யும் பட்சத்தில் இனிமேல் இதுபோன்ற செயலிகள் நம் நாட்டில் பயன்பாட்டிற்கு வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். 

மேலும், இதை உபயோகிக்கும் நாம் நமக்கான வரம்பை நிர்ணயித்துக்கொண்டு அதற்கேற்ப செய்லபடுவது நல்லது. தங்களது குடும்பத்தில் உள்ள யாரையும் பாதிக்காத அளவுக்கு உபயோகிக்கலாம். டிக் டாக் செயலியை விளையாட்டாகவும், விபரீதமாகவும் எடுத்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com