மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்த அவல நிலை எப்போது மாறும்?

தொழில்நுட்பங்கள் எவ்வளவு தான் இன்று வளர்ந்து விட்டாலும், மனிதக் கழிவுகளை அகற்றுவது என்னவோ மனிதர்கள் தான். இது மனித மாண்புக்கு எதிரான செயலாகவே கருதப்படுகிறது.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்த அவல நிலை எப்போது மாறும்?

தொழில்நுட்பங்கள் எவ்வளவுதான் இன்று வளர்ந்துவிட்டாலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பது என்னவோ மனிதர்கள்தான். இது மனித மாண்புக்கு எதிரான செயல் என்றும் கைகளால் மலம் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் காலம் காலமாக குரல் கொடுத்துவந்தாலும் இன்றுவரை அதற்கு முழுமையான தீர்வு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. 

விஷவாயு தாக்கி மனித உயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான பணி என்று தெரிந்துகொண்டே பணியில் இறங்கும் துப்புரவுத் தொழிலாளர்களை என்னவென்று சொல்வது? சகிப்புத்தன்மை மட்டுமின்றி, உயிரைப் பணயம் வைத்து அவர்கள் இந்தப் பணியில் ஈடுபட என்ன காரணம்? விளைவுகள் தெரிந்தும் பணியாளர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துகிறதா அரசு? அல்லது இதனை தடுத்து நிறுத்தும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா எட்டவில்லையா?

கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்யும் ஒரு துப்புரவுத் தொழிலாளியை பார்த்து நமக்குள் இவ்வாறு பல கேள்விகள் எழத்தானே செய்கிறது?   

கழிவுநீர் துப்புரவுப் பணியில் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள்

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கழிவுநீர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கைகளால் மலம் அள்ளுவதற்கு தடை விதித்தும், உலர் கழிவறைகளின் கட்டுமானத்திற்கு தடை விதித்தும் 1993ம் ஆண்டு மத்திய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, 2013ம் ஆண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் 1971ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை பெருநகரம் உள்பட 15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என சேர்த்து தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணிக்குத் தடை

25 ஆண்டுகளுக்கு முன்னதாகச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துவருகிறது மற்றும் அவர்களது ஆயுட்காலம் சீராக குறைந்துவருகிறது என்றும் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. 

கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது; இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்; துப்புரவுத் தொழிலாளர்கள் நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

துப்புரவுத் தொழிலாளர்களின் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்

கடந்த ஜனவரி மாதம், நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, ‘2013 முதல் டிசம்பர் 2018 வரை நாடு முழுவதிலும் 323 துப்புரவு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர்’ என்று தகவல் வெளியிட்டார். 

தடையை மீறியும் இப்பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது சில மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. சென்னை மாநகரத்திலே நாம் ஒரு சில இடங்களில் இதனை கண்கூடாகப் பார்க்க முடியும். 

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாம். 

சில தினங்களுக்கு முன்பாக சென்னை முகப்பேர் சாலையில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் விடியோ வெளியாகியுள்ளது. அரசு கொண்டுவந்த சட்டத்தை அரசே மீறுவதுபோலத்தான் இந்த சம்பவம் உள்ளது. 

விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி துப்புரவுத் தொழிலாளி உயிரிழப்பு செய்திகள் நாடு முழுவதிலும் இருந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு அரசும் இழப்பீடு தொகை வழங்குவதோடு நிறுத்திக்கொள்கிறது. 

கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்கள்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலைமையை முடிவுக்கு கொண்டுவர, முதல்முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாக்கடைகளை சுத்தம் செய்ய, மனிதர்களுக்கு மாற்றாக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில அரசு உதவியுடன் 'ஜென் ரோபோட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவில் சாக்கடைகளை நன்றாக சுத்தப்படுத்துவதற்காக கை போன்ற பகுதியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. ஆழமான கழிவுநீர்த் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் வசதி கொண்டது. இந்த ரோபோக்கள் தமிழகத்தில் கும்பகோணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கல்லூரி மாணவர்கள் அறிமுகப்படுத்திய ரோபோவின் விலை ரூ.22 லட்சம் ரூபாய் மட்டுமே. நாட்டில் பல்வேறு திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வதற்கும், மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கும் மெஷின்களை பயன்படுத்தலாமே? 

தொழில்நுட்பம் மூலமாகத் தீர்வு

நம் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்றுள்ளது. அதிலும், தொழில்நுட்பத் துறையில் இந்தியா அதீத வளர்ச்சி கண்டு வருகிறது. ஒரு வேலையை எளிமையாக்க தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் நாம், மனிதக் கழிவுகள் உள்ள கழிவு நீர் தொட்டியை மனிதர்களே சுத்தம் செய்யும் இந்த அவல நிலையைப் போக்க பயன்படுத்தலாமே?

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் மத்திய அரசு, இதற்கும் தீர்வு காண வேண்டியது இன்றியமையாதது. கேடு விளைவிக்கக்கூடிய, விஷத்தன்மை வாய்ந்த திரவக் கழிவுகள் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிரை பழிவாங்குவதை தடுக்க அரசு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும். 

தொழிலாளர்கள் பாதுகாப்பின் முக்கியத்துவம்

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு அவசியமாகிறது.  மத்திய, மாநில அரசுகள் தங்களிடம் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களை மட்டும் கணக்கெடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்காலிக, ஒப்பந்த மற்றும் தனியார் தொழிலாளர்களை கணக்கில் எடுப்பதில்லை. 

மேலும், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் பெருமளவில் மாறுபடுகிறது. அதிகப்படியான மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் உள்ள துறை இந்திய இரயில்வே துறை என்று ஒரு தகவலும் உள்ளது. அதனால் வரும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு இந்திய ரயில்வே ரயில்களில் உயிரிக் கழிவறைகளை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்ற புகார்களும் வந்த வண்ணம் இருக்கின்றனர். அதேபோன்று பெரும்பாலான தொழிலாளர்கள் கையுறைகளை அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் போதிய கல்வி அறிவு இல்லாமல் இருப்பதும் இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிப்பது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு தீர்வு காணுமா?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல மாவட்டங்களில் பணிகள் முடங்கிக்கிடப்பதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதுமே வருங்காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்; அவ்வாறு இருக்க ஒப்பந்தப் பணியாளர்களை படிப்படியாக நிரந்தரப் பணியாளர்களாக மாற்றவும், அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் முன்வர வேண்டும். கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய மெஷின்கள் அல்லது ரோபோக்களை பயன்படுத்த வேண்டும். 

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது நாகரிகமற்றது; மனிதத்தன்மையற்றது என்று வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் அரசு விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com