மாதங்களில் நான் மார்கழி

தமிழ் மாதங்களான 12 மாதங்களும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டது. அதில், மார்கழி மாதம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மாதங்களில் நான் "மார்கழி மாதமாக இருக்கிறேன் " என்று பகவத்கீதையில் அருளியுள்ளார்.
மாதங்களில் நான் மார்கழி
மாதங்களில் நான் மார்கழி

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தமிழ் மொழியே என்பதில் சிறு துளிகூட சந்தேகமில்லை. அதற்கு உதாரணங்கள் பல இருக்கிறது. அதில் ஒன்று திருக்குறள். தமிழ் மாதங்களான 12 மாதங்களும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டது. அதில், மார்கழி மாதம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மாதங்களில் நான் "மார்கழி மாதமாக இருக்கிறேன் " என்று பகவத்கீதையில் அருளியுள்ளார்.

காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் ஒரு கடவுள். இவரவர்களுக்கு இதெது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள்தான். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தவனும் கடவுள்தான். எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீ கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய்மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது. இதன் தனிச்சிறப்பு. அந்த மார்கழி மாதத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்.

மகளிர் நோன்பு இருப்பதற்குத் தகுந்த மாதம் மார்கழி மாதமாகும். பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கெளரி நோன்பு இருப்பார்கள். காத்யாயினியையும், பார்வதியையும் வழிபட்டார். ஸ்ரீ கிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினார். கெளரி நோன்பும் தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்று தான்.

"மார்க் சீர்ஷம்" என்ற தொடர் "மார்கழி" என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால், தலையான மார்க்கம் என்று அர்த்தம். இதன் வேறு பெயர் தனுர் மாதம் என்றும் அழைக்கலாம். மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்றும் சொல்லுவார்கள். வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை என்று வழங்குகின்றது. மார்கழியின் பனிக் குளிச்சி சிலருக்கு நோய் துன்பங்களைத் தரும். அதனால்தான் இது பீடை மாதம் ஆனது. அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழிதான். பீடு என்றால், பெருமை என்று பொருள். பன்னிரெண்டு மாதங்களில் மிக்க பெருமையுடைய மாதம் "பீடை மாதம்" என்று மற்றொரு பொருளும் கூறுகிறது. பல காரணங்களால் மார்கழி மாதம் பெருமையுடைய மாதமாகும்.

வைகறை என்றால், மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். இந்த ஒரு நாளின் வைகறைப் பொழுதாக மார்கழி மாதம் அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே, வைகறைப் பொழுதுதான் மார்கழி மாதம், தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு. ஓஸோன் வாயு மார்கழி வைகறைக் காலத்தின் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி படிப்படியாக அதிகம் ஆகின்ற போது, அதை அனுபவிக்கத் தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லியக் காற்று தருகின்ற குளிர்ச்சி அதன் சுகமே தனி சுகம் தான். இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகமும் மார்கழியில் மட்டும் அதிகமாகக் கிடைக்கின்றது.

வளி மண்டலத்தில், ஓஸோன் என்ற வாயுப்படலம் நில உலகத்திலிருந்து பத்தொன்பதாவது கிலோ மீட்டர் உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடமிருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கின்றது. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள காலம் "பிரம்ம முகூர்த்தம்" எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்றக் காலமும் இதுதான். இந்த நேரத்தில் ஓஸோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும். புதுக் கிளர்ச்சியைத் தரும். 

மார்கழி மாதம் விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜைகள் செய்தனர். விரதம் இருந்தனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கும் ஒரு தனிப் பெருமை கிடைத்தது. அந்தக் காலத்தில் பிரம்ம முகூர்த்தத்தில்தான், திருமணம் நடத்துவார்கள். சூரியனின் இயக்கம் அயனம். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயணம். இவை இரண்டில், உத்தராயணம் உயர்ந்தது என்பார்கள். 

தட்சிணாயனத்தில் கடைசி மாதம் மார்கழி மேலும், உத்தராயண தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21ஆம் தேதி. இத்திருநாள் மார்கழியின் ஒரு நாள். இந்த நாளில் சில கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. உத்தராயண தொடக்க நாளை பலர் தை மாதத்தில் கொண்டாடுகின்றனர். மார்கழி வந்தாலே எல்லாப் பெண்களுக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது. காரணம், விடியற்காலையிலேயே எழுந்து, கடுங்குளிரிலும் மன உறுதியுடன் குளிக்கின்றனர். பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கித் தூய்மைப் படுத்துகின்றனர். சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர். தெரு முழுவதும் வித விதமான, அழகழகான, கலர் கலராக கோலங்கள் போடுகின்றனர். செம்மண்ணைப் பூசி, கோலத்தின் நடுவே ஒரு பிடி சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து, அதில், பூசணிப்பூவையோ. (பூசணிப்பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் சின்னம்) அல்லது அருகம் புல்லையோ அல்லது செம்பருத்தியையோ வைத்து அழகு பார்க்கின்றார்கள். வீட்டுக்குள் விளக்கும் ஏற்றுகிறார்கள்.

சாணத்தில் பூசணிப்பூ வைக்கக் காரணம் என்ன தெரியுமா? பூவுக்கு ஆதாரம் சாணமா, இல்லை. ஒரு பிடி சாணத்தில் பிள்ளையாரைப் பிடிக்கின்றனர். பூக்கின்ற போதே, காய்க்கின்ற பூசணிப்பூவை. வழிபடுகின்ற போதே அருளுகின்ற பிள்ளையாரின் திருமுடி மேல் சூட்டுகின்றனர். பிள்ளையார் அனைவருக்கும் அருளுவதற்கு அவதரித்தவர். கோலத்தின் வெண்மை பிரம்மன், சாணத்தின் பசுமை விஷ்ணு, செம்மண்ணின் செம்மை சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவு படுத்துகின்றது. மும்மூர்த்திகளின் தரிசனம். எங்கும் பக்தி, எதிலும் தெய்வீகம். இவை அனைத்தும் மார்கழியின் சிறப்புகளாகும். மார்கழியில் அமைந்த மிக முக்கியமான வழிபாடுகள். மார்கழி மாத விரதம், பாவை விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம், திருவாதிரை, போகிப் பண்டிகை என 4 முக்கியமான வழிபாடுகள் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com