இது சட்டவிரோதமானது என்றாலும் தண்டனைகள் குறைவாகத்தான் உள்ளது!

பொதுவாகக் கொத்தடிமை முறை என்பது ஒரு வகையான கட்டாய உழைப்புச் சுரண்டல் முறை என வரையறுக்கப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொதுவாகக் கொத்தடிமை முறை என்பது ஒரு வகையான கட்டாய உழைப்புச் சுரண்டல் முறை என வரையறுக்கப்படுகிறது. மேலும் இது கடன் அடிமைத்தனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபர் தான் வாங்கிய கடனை அடைக்கத் தன் உடல் உழைப்பின் மூலம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது இது நிகழ்கிறது. கொத்தடிமை முறை என்பது கட்டாய உழைப்பின் ஒரு குறிப்பிட்ட வடிவமாகும். இதில் ஒருவர் கடன்-பணம் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டு அடிமைபடுத்தப்படுகிறார்கள். இம்முறையால் தொழிலாளர்கள் கடினமாக உழைக்க நிர்பந்தப்படுகிறார்கள், சில நேரங்களில் அவர்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகளோ அல்லது முதியவர்களையோ  ஈடுபடுத்துகிறார்கள்.  கிராமப்புறங்களில் உள்ள வேளாண் தொழில் சார்ந்த இடங்களில் கொத்தடிமை முறை அதிகம் காணப்படுகிறது.

கொத்தடிமை முறை மற்றும்  குழந்தைத் தொழிலாளர் முறை உட்பட பல்வேறு வகையான அடிமைத்தனம் இந்தியாவில் இன்றும் நிலவுகிறது. சமூக பழக்க வழக்கங்களும் பொருளாதார நிர்ப்பந்தமும் கொத்தடிமை முறையை நம் சமூகத்தில் இன்னும் உயிரோடு வைத்திருக்கின்றன. இந்தியாவில் நவீன அடிமைத்தனத்தில் கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்று உலகளாவிய அடிமைகள் அட்டவணை (2016) மதிப்பிடுகிறது. இந்தியாவில் நவீன அடிமைத்தனத்தின் பரவலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆயிரம் மக்களுக்கும் 6.1 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய சூழலில் உலகமயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுடன் கொத்தடிமை முறை மாறி வருகிறது. கொத்தடிமை முறை இன்று வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அதன் வழக்கமான முறைகளுக்கு அப்பால் இன்றும் நம் சமூகத்தில் அது நடைமுறையில் உள்ளது. 2015-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 11 தொழில்களில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் பணிபுரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களில் 60.8% பேர் அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக வழங்கப்பட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், மீன் பண்ணை, விவசாயப் பண்ணைகள், மலர்த் தோட்டங்கள், கல் குவாரிகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் போன்ற தொழில்களில் கொத்தடிமை முறை அதிகமாக உள்ளது. தற்போது அடிமைத்தனத்தின் பழைய வடிவங்கள் ஒரு அதிநவீன வழியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்ளைக் கடத்துதல், பாதுகாப்பற்ற இடப்பெயர்வு, கட்டாய உழைப்பு மற்றும் குற்றவியல் தொடர்புகள் என இந்த தீய கடன் சங்கிலியில் ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்தியாவில் மட்டும் சுமார் 32 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 98 சதவிகிதம் பேர் கடனாலும், 2 சதவிகிதம் பேர் வழக்கமான சமூகக் கடமைகள் காரணமாகவும் கொத்தடிமைகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கொத்தடிமைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளன (GSI).

உடல் மற்றும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள், வசைபாடுதல் போன்ற பல கொடுமைச் சம்பவங்கள் அவர்களுக்கு நிகழ்கின்றன. தொழிலாளர்கள் வெளியே நடமாடச் சுதந்திரம் மறுக்கப்படுவது, அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்துவது மற்றும் கடுமையான வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது என கொடுமைகளின் பட்டியல் நீள்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, 2014-ஆம் ஆண்டில் 1.17 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். தேசியக் குற்ற ஆவணப் பதிவேட்டில் (NCRB) இருந்து தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் படி, 2016-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 8,132 மனிதக் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் கொத்தடிமை தொழிலாளர்களில் பெண்களை விட (24.8%)  ஆண்களே (36.5%) அதிகமாக இருப்பதும் அதிகமாக கிராமப்புறங்களை விட நகரமயமான பகுதிகளில் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது.

இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள்

  1. இந்திய தண்டனைச் சட்டம்- சட்டவிரோதமான கட்டாய உழைப்புச் சுரண்டல் குற்றத்தைக் கண்டுபிடித்து தண்டனை அல்லது அபராதம் விதிக்கிறது.
  2. குறைந்தபட்ச ஊதிய சட்டம் - 1948
  3. கொத்தடிமைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் -1976

அரசியலமைப்பு பாதுகாப்புகள்

பிரிவு 21 – சுதந்திரம் மற்றும் வாழ்தலுக்கான உரிமை

பிரிவு 23 - சுரண்டலுக்கு எதிரான உரிமை

பிரிவு 42 - அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்

கொத்தடிமை முறை சட்டவிரோதமானது என்ற போதிலும், சட்டங்கள் அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன. மேலும் இதற்கான தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களே உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுகின்றனர். சமூகத்தின் அடிமட்ட தளங்களில் உழைப்புச் சுரண்டல் இன்றும் உள்ளது. ஏழைகள் பல்வேறு காரணங்களுக்காகச் சுரண்டப்படுகிறார்கள். இச்சுரண்டல் முறை பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இக் குற்றத்தை தடுக்க உதவுவதிலும் நாமும் நமது பங்கைச் செய்ய வேண்டும். கொத்தடிமை முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.

அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் துறைகள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என நாம் ஒரு சமூகமாகக் கொத்தடிமை முறையை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மனிதக் கடத்தல் எதிர்ப்பு குழுக்கள் (AHTC’s) அமைக்கப்பட வேண்டும். கொத்தடிமையை ஒழிப்பதற்கும், நம் சமூகத்தில் நடக்கும் இந்த அநீதியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அனைவரும் கைகோர்ப்போம். ஏழைகளுக்கு எதிரான இச்சுரண்டலில் இருந்து அவர்களை பாதுகாப்போம். கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழி மற்றும் தடுப்பு அணுகுமுறைகளை முன்னெடுப்பதன் மூலமும், முறையான வேலைகளை ஊக்குவிப்பதன் மூலமும்,  தொழிலாளி-முதலாளி உறவில் அடிமைத்தனம் மற்றும் சுரண்டல் முறையை ஒழித்து விடலாம். இக்கொடூரமான குற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு சமூகமாக நாம் ஒத்துழைத்து ஒன்றிணைவதற்கு கடமைப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் பொறுப்புடன் நமது பங்கைச் செலுத்தி இந்தியாவில் கொத்தடிமை முறையை இல்லாமல் ஆக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com