காயப்படுத்திய தருணங்களே மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது: கரும்புத் தோட்டத்தில் தேசம்மாவுக்கு நேர்ந்த அவலம்

சிறிய கிராமத்தில் வசித்து வந்த தேசம்மாவிற்கு நிரந்தரமான வேலை என்று எதுவும் இல்லை
காயப்படுத்திய தருணங்களே மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது: கரும்புத் தோட்டத்தில் தேசம்மாவுக்கு நேர்ந்த அவலம்

சிறிய கிராமத்தில் வசித்து வந்த தேசம்மாவிற்கு நிரந்தரமான வேலை என்று எதுவும் இல்லை. இந்நிலையில் அவரது நிலத்தில் அரசு அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றை ஒதுக்கியது. அரசு வழங்கியப் பண உதவி போதாமல் பல்வேறு தரப்பினரிடம் கடன் வாங்கி ஒரு வழியாக வீட்டை கட்டி முடித்தார் தேசம்மா. இதனால் அவருக்குக் கடன் தொகை அதிகமானது. இச்சமயத்தில் கரும்பு வெட்டும் குழுவின் முதலாளி ஒருவர் வேலையாட்களைத் தேடி தேசம்மாவின் கிராமத்திற்கு வந்துள்ளார். அவர் அந்த கிராமத்தின் முக்கிய நபர் ஒருவரைப் பார்த்து ஏழ்மையில் உள்ள குடும்பங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவர்களை அணுகியுள்ளார்.

தேசம்மாவும் அவரது குடும்பத்தினரும் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆசையிலும் கரும்பு வெட்டும் குழுவின் முதலாளி கூறிய பொய்யான வாக்குறுதிகளை நம்பியும் வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் பற்றி முதலாளி சிறிதும் கவலைப்படவில்லை. அவர்களுக்கான கூலியையும் சரி வரக் கொடுக்காமல் உழைப்பை மட்டும் சுரண்டிக் கொண்டிருந்துள்ளார் முதலாளி. வேலைப்பளு அதிகமாக இருந்ததால் பள்ளி சென்று கொண்டிருந்த தேசம்மாவின் மகனையும் வேலைக்கு அழைத்துக் கொண்டார். அதன் பின்னரும் வேலைப் பளு குறைந்தபாடில்லை. ஆகையால் அவரது திருமணமான மகள், அவரது கணவர் மற்றும் உறவினர்களும் வேலைக்குச் சேர்ந்தனர். இருப்பினும் மற்றவர்கள் தினசரி கூலிக்கு வேலை செய்து வந்த நிலையில் மெதுவாக அவர்களும் முதலாளியிடம் முன்பணம் வாங்கி கடனில் சிக்கிக் கொண்டனர்.

மிகக் குறைந்த கூலியை வாங்கிய அவர்கள் ஒரு கட்டத்தில் தாங்கள் கொத்தடிமை வலையில் சிக்கிக் கொண்டோம் என உணரத் தொடங்கினர். ஆகையால் கூலியை உயர்த்திக் கேட்டுள்ளனர். ஆனால் முதலாளியோ தொழில் நஷ்டத்தில் சென்று கொண்டிருப்பதாகவும் அவருக்கே அதிகப் பணம் தேவைப்படுவதாகவும் கஷ்டப்பட்டுத்தான் தொழிலாளர்களுக்குக் கூலி வழங்கி வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் சில நகைகளை அடகு வைக்க இருப்பதாகவும் மேலும் கொஞ்சம் நகை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். அவரின் பரிதாபகரமான பேச்சை நம்பிய தேசம்மா வைத்திருந்த சொற்ப உடைமைகளையும் கொடுத்துள்ளார். இதுவே அவர்களை மேலும் மூன்று ஆண்டுகள் வறுமையிலும் பட்டினியிலும் தள்ளும் என எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும் கரும்பு தோட்டங்களிலேயே தங்குவதால் அவர்கள் கொத்தடிமைகளாக இருப்பது அருகே இருக்கும் கிரமத்தில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இறுதியாக அவர்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதால் அவர்களின் பரிதாப நிலை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவர்கள் மீட்கப்பட்ட நாளன்று பட்டினியால் வாடிய பொழுதுகளையே திரும்பத் திரும்பக் கூறினர். முதலாளி அவர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்திய தருணங்களே அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. தேசம்மாவின் மகளுக்கு குழந்தை பிறந்தபோது அவரது கணவர் ஊருக்குச் சென்று குழந்தையைப் பார்த்து வர முதலாளி அனுமதிக்கவில்லை. வேலை அனைத்தும் முடிந்த பிறகே ஒன்றரை மாதம் கழித்துத்தான் அவர் குழந்தையைப் பார்த்துள்ளார். இம்மாதிரியான சம்பவங்களே அவர்கள் கொத்தடிமை முறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படக் காரணங்களாக இருந்தன. இறுதியாக அவர்களை 2014-ஆம் ஆண்டு திருவள்ளூர் கோட்டாட்சியர் கொத்தடிமையிலிருந்து விடுவித்தார்.

அன்றிலிருந்து தேசம்மாவும் அவரது கணவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குத் தெரிந்த திறமைகளைக் கொண்டு கடினமாக உழைத்துப் பணம் சேர்த்து ஒரு விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்கள் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் நெற்பயிரும் வேர்க்கடலையும் பயிரிட நிலத்தை உழுது கொண்டிருந்தனர். "முன்பு நான் கரும்பு வெட்டும் வேலை செய்யும் போது சுதந்திரமாக இருக்கவே முடியாதோ என்று பயந்தேன். ஆனால்  இப்போது அச்சுதந்திரத்தை அடைந்து விட்டேன். ஒவ்வொரு நிமிடமும்  விடுதலையை உணர்கிறேன்" என்கிறார்.

- விஜய்.பி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com