bonded labour
bonded labour

3 முக்கிய காரணங்களுக்காக நடைபெறும் மனிதக் கடத்தல் 

மனிதக் கடத்தல் என்பது நம் சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு கொடுமையான குற்றச் செயலாகும்.
Published on

மனிதக் கடத்தல் சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு கொடுமையான குற்றச் செயலாகும்.  வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு செயல்களில் வெவ்வேறு முறைகளில் ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்து வருகிறது கவலை தரத்தக்கது. மனிதர்கள் வணிக பொருட்களாக மாற்றப்பட்டு, பெரும்பாலும் பாலியல் சுரண்டலுக்காகவும் உழைப்புக் சுரண்டலுக்காகவும் மற்றும் உடல் உறுப்புகளுக்காகவும் விற்கப்படுவதே, இந்த மனித வணிகத்தின் இன்றைய அவல நிலையாகும். 

இந்தியாவில் கட்டாய உழைப்பிற்கும் பாலியல் தொழிலுக்காகவும் மனிதர்களை கடத்தும் போக்கு அதிகமாக இருப்பினும், உடல் உறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. பொதுவாக மனித வணிகம் 3 முக்கிய காரணங்களுக்காக நடைபெறுகிறது. அதாவது கடத்தப்பட்ட மனிதர்கள் அதிகப்படியாக இந்த மூன்று காரியத்திற்காக ஈடுபடுத்தப்படுகின்றனர். உழைப்புச் சுரண்டலுக்கு கடத்துதல், பாலியல் சுரண்டலுக்கு கடத்துதல் மற்றும் உடல் உறுப்பு சுரண்டலுக்கு கடத்துதல்.

பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்படும் மனிதர்கள் உதவிக்காக ஏங்குவது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது. நாம் என்றோ ஒழிந்ததாக எண்ணிக் கொண்டிருக்கும் அடிமைமுறை பல்வேறு பரிணாமங்களில் முன்பைவிட பல கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அளவிற்கு இன்றும் நிலவி வருவது வேதனை தரும் செய்தி.

உடல் உறுப்புகளுக்காகவும், கட்டாய உழைப்பிற்காகவும், பாலியல் அடிமைத்தனத்திற்காகவும் மனிதர்கள் பிற மனிதர்களைக் கடத்தி தன் சந்ததிக்கு பல தலைமுறைக்கான சொத்தை சேர்த்து விடுகின்றனர். இவ்விரு பிரச்னைகளைத் தடுப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தாலும், முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இக்குற்றத்தைத் தடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுப்பது மட்டுமில்லாமல் சமூகத்தில் இக்குற்றம் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக உள்ள ஏழ்மையையும் அறியாமையையும் துடைத்தெறிய வேண்டும். சமூகத்தின் அடிமட்ட அளவில் நுழைந்து, மனிதக் கடத்தலில் ஈடுபடும் இடைத்தரகர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் அரசும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மனிதக் கடத்தல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். மேலும் பலரை கடத்தாத வண்ணம் அவர்களைத் தடுக்க வேண்டும். மனிதக் கடத்தலின் அனைத்து வடிவங்களையும் நாம் எதிர் கொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அமலாக்கியும் புதிய ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்கியும் இதனை ஒழிக்க வேண்டும். 

 - புகழ் செல்வம்.சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com