'காடுகள் உலகின் உயிர்நாடிகள்'

உயிரினங்களுக்கு உணவு, மருந்து மற்றும் உறைவிடம் வழங்கி உயிரினப் பன்மைக்கு  வழிவகுத்து வகுப்பது காடுகள். எனவே, காடுகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். 
'காடுகள் உலகின் உயிர்நாடிகள்'
Updated on
2 min read

(மார்ச் 21 - இன்று உலக காடுகள் தினம்)

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடுகள் ஆகும். இயற்கை வளங்களிலேயே மிக முக்கிய வளமாகக் கருதப்படும் காடுகள் பற்றி வள்ளுவரின் கூற்றாவது :  
    
    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
    காடும் உடையது அரண் - (குறள் 742)
    
தெள்ளிய தூய நீரும், நிலமும், மலைப்பகுதியும், நிழலை அணியாக அணிந்த காட்டுப்பகுதியும், அதாவது வெயில் நுழைவு அறியாதவாறு மர அடர்வு கொண்ட காட்டுப்பகுதியும் ஒரு நாட்டின் பாதுகாப்பை, அதன் நல் இருப்பை உறுதி செய்யும் என்று விளக்குகிறார்.

பழந்தமிழரின் வாழ்வியலில் ஐந்திணை நிலங்களாக வகைப்படுத்தி, நிலத்தின் இயல்பு அறிந்து வாழும் முறைகள் கையாளப்பட்டது அறியப்படுகிறது. குறிஞ்சித்திணை, முல்லைத்திணை இவை வனப்பகுதிகள் என்று அறியப்பட்டாலும், உட்பிரிவுகளாக மருதத்தில் முல்லை, நெய்தலில் முல்லை, திரிபுற்ற நிலம், பாலைவனம் என்று வனப்பகுதியை தெளிவுற விளக்குகிறது தமிழிலக்கியம்.  தமிழரின் வாழ்வியலில் காடுகள் எவ்வாறு முக்கியம் வாய்ந்தது என்பது அதற்கு இடப்பட்ட சுமார் 225 தமிழ்ப் பெயர்களே சான்று. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியை பாதிப்பு அடையாமல் காப்பது நமது முக்கியக் கடமையாகும். 

வளிமண்டலத்தில் வாயுக்களை சமநிலையில் வைக்க தூசி, புகை மற்றும் நச்சுப்பொருள்கள் நிரம்பிய காற்றை மரத்தின் இலைகள் வடிகட்டித் தூய்மைப்படுத்துகின்றன. அவை மழை பொழியவும் காரணியாக அமைகிறது. உலக தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கும் சக்தியாகவும் விளங்குகிறது. மேலும் மண் அரிப்பைத் தடுத்து மண்ணில் உள்ள உயிர் ஊட்டச்சத்துக்களை சமநிலையில் வைத்து நிலத்தாயைக் காக்கிறது.

உயிரினங்களுக்கு உணவு, மருந்து மற்றும் உறைவிடம் வழங்கி உயிரினப் பன்மைக்கு  வழிவகுத்து காக்கிறது. இதன் அடிப்படையில் காடுகளை நாம் "காற்றை சுத்தகரிக்கும் தொழிற்சாலை", "மண்ணை வளப்படுத்தும் தாய்", "நிலத்தாயை காக்கும் மருத்துவர்" என அழைக்கலாம்.

இத்தகைய மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை அழிப்பதனால் நாம் சந்தித்து வரும் பின் விளைவுகள் அளவிட முடியாதவை.

காற்று மாசுபாடு, சூழல் சீர்கேடு, புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், அதன் விளைவுகளான சுவாசக் கோளாறுகள், தொற்றுநோய்கள், உடல்நிலை சீர்கேடுகள் போன்றன அவற்றுள் அடங்கும். சராசரி மழை அளவும், மழை நாட்களும் காடுகள் அழிப்பால் குறைந்து அதன் விளைவாக மானாவரி விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் காடழிப்பால் மழைநீர் சேமிக்கப்படாமல் வீணாகி, மண் அரிமானமும் ஏற்பட்டு அதன் விளைவாக நிலத்தடிநீர் குறைந்து நன்னீர் தட்டுப்பாடும் ஏற்படுகின்றது.

நம் நாட்டின் காடழிவு விகிதம் – 0.43%. உலக அளவில்  காடழிவு  விகிதம் 0.60%   அதாவது உலக அளவில் காடழிவு 34.7 மில்லியன் ஹெக்டேர்/ ஆண்டு ஆகும். இது உலக இயற்கை அமைப்பின் கணக்கீடாகும். 1951 - 1980 வரை இந்தியாவில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக 5 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த காடழிவு விகிதத்தை மர வளர்ப்பின் மூலமாக கட்டுப்படுத்தலாம். தனி நபர் பங்களிப்பு முதல் அரசின் பங்களிப்பு வரை, கூட்டு முயற்சியால் மர வளர்ப்பை அதிகப்படுத்தலாம். அதிகளவு இலைப்பரப்பு கொண்ட ஆல், அரசு, வேம்பு, புங்கன், தூங்குவாகை போன்ற நமது தட்பவெட்ப நிலைக்கு ஏற்க தக்க மரங்களைத் தேர்வு செய்து வளர்ப்பதால் மரப்பரப்பளவை அதிகமாக்கலாம்.

ஒருபுறம் காடுகள் அழிப்பு மற்றும் காடுகள் உருவாக்கம் என இரண்டுமே தற்பொழுது நடைபெற்று வருகிறது உலகளவில் காடுகள் அழிவதால் ஏற்படும் இயற்கை பேரிடர்களை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனி மனித செயல்பாடுகளால் நாம் ஒன்றிணைந்து வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த விகிதத்தை குறைத்து காடுகளில் பரப்பளவை அதிகரிப்போம் என்ற உணர்வால் ஒன்றிணைவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com