வாசிப்பிற்குப் பார்வையின்மை தடையல்ல

வாசிப்பிற்கு பார்வையின்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சிந்தித்ததன் விளைவால் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் அவர்களுக்காக வாசிப்பு களம் சிறப்பாகவே அமைந்துவிட்டது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான 25 வயது இளம்பெண் செல்வி பெனோ செபைன் 100 சதவீதம் பார்வையற்றவர். பெனோ செபைன் இந்தியாவின் மிக உயர் வரிசை அதிகாரியாக ஐ.எப்.எஸ். பதவிக்கு தனது திறமையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்வையற்ற ஒருவர் இந்தியாவிலேயே முதல்முறையாக இந்திய வெளியுறவு அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற பெருமை இவரையேச் சாரும்.  

புகழ்பெற்ற எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஹெலன் கெல்லர், தன் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். ஆனாலும், தன்னம்பிக்கை இழக்காதவர்.

தனது கல்லூரி நாள்களிலேயே 1903இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார். பார்வைத் திறன் இழந்த அவர் தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.

தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில.

இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்னைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து எழுதி வந்தார். அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவர். சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். 

இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காது கேளாதோருக்காகச் செலவிட்டார்.

அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதியம் ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியைப் பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோருக்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் 88 வயது வரை அயராது உழைத்தார்.

ஒரு மனிதனை முழுமையடையச் செய்வது வாசிப்பு. எனவே, வாசிப்பிற்கு பார்வையின்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சிந்தித்ததன் விளைவால் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் அவர்களுக்காக வாசிப்பு களம் சிறப்பாகவே அமைந்து விட்டது. 

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உரிமை வழங்கப்பட்ட காலம் தொட்டு வாசிப்புக் களத்தில் அவர்களுக்கென்று புதிய வாசிப்பு முறைகள் பரிணாமங்கள் ஏற்பட்டன.

பார்வையற்றோர் எளிதாக படிக்க உதவியாக 'பிரெய்ல்' முறை 1824இல் லூயிஸ் பிரெய்ல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிரெய்ல் என்பது பார்வையற்றோரால் பயன்படுத்தப்படும் எழுத்து முறையாகும்.

பிரெய்லியின் துணை கொண்டு நேரடியாக எழுதவும், படிக்கவும் பயிற்சி பெற்ற பார்வையற்றவர்கள் ஆரம்பத்தில் பாடப்புத்தகங்களையும், பைபிள் போன்ற சமய நூல்களையும் படிக்க ஆரம்பித்தனர். 

வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அவர்கள், வாசிப்பினையும் நேரடியாக அணுகவியலாத நிலையில், அவர்கள் பார்வையுள்ளவர்களின் துணை கொண்டு செய்தித்தாள்களையும், மற்ற புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தனர். 

இன்று இவர்களது கற்றலுக்கு ‘ஸ்கிரீன் ரீடர்’ செயலி பெரிதும் உதவுகிறது. அச்செயலி சொற்களை அவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறது. கற்றலுக்கு இவர்கள் கைக்கணினியையும் சாதாரண விசைப்பலகையையும் பயன்படுத்துகின்றனர். 

யாருடைய உதவியுமின்றி இவர்களது நேரடி வாசிப்பு பிரெய்லியில் நிறைவேறுகிறது. பிறரின் உதவியுடன் பார்வை மாற்றுத்திறனாளிகள் வாசிப்பது. கணினி மற்றும் வாசிப்பாளர் உதவியுடன் புத்தகங்களை வாசிப்பது, பிறருடன் பழகுதல், புதிய தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளுதல் போன்றவை இவர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
 
பார்வையுள்ளவர்கள் நேரடியாக பார்வையற்றோருக்கு வாசித்துக் காட்டுதல், வாசித்த பாடங்கள் அல்லது புத்தகங்களை ஒலிநாடாவில் பதிவு செய்து கேட்டல், பதிவு செய்யப்பட்ட ஒலிப்பேழைகளை ஓரிடத்தில் தொகுத்து வைத்து ஒலி நூலகம் அமைத்தல் என்று தொடங்கியது பார்வையற்றோர் வாசிப்புத்தளம்.  

இன்றைய கணினி தொழில்நுட்பத்தால் பல மாறுதல்களை கொண்டு அவர்களை வாசிப்பில் முன்னெடுத்து செல்கிறது. வாசிப்பிற்கு பார்வையின்மை தடையல்ல என்பதை நிரூபிக்கிறது.

இன்று கணினி வழியாக மின் புத்தகங்கள் வாசிப்பு, ஓசிஆர்(OCR) எனப்படும் எழுத்துணரிகள் வழியாக புத்தகங்கள் வாசிப்பு முதலானவற்றின் ஊடாக பார்வையற்றோர் வாசிக்கின்றனர்.

டிஜிட்டல் குரல் பதிவுகள் மூலம் வாசிப்பை பதிவு செய்வது எளிதாகி விட்டது. நேரடியாக வாசிப்பாளர்களை அணுகி புத்தகங்களை வாசிப்போருக்கு மீள் வாசிப்பிற்கு மிகவும் உதவியாக இந்த முறை அமைந்துவிட்டது.  இப்போது பென் டிரைவ் இருந்தால் போதும், நூறு புத்தகங்களைக் கூட இப்படி அதில் சேமிக்கலாம்.

வாசிப்பாளர்களின் துணை கொண்டு வாசிப்பதனை பலரும் விரும்புகின்றனர் அவர்களுக்கு இந்த பதிவு முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

தான் கற்ற துறையை விரிவுபடுத்தலுக்காகவும், அதில் ஆழ்ந்து செல்வதற்காகவும் வாசித்தல், அறிவின் புதிய பரப்புகளை அறிந்துகொள்ள வாசித்தல், பொது வாசிப்பு என பல வகை வாசிப்புகளுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கில் பல தன்னார்வலர்கள் தங்கள் வீட்டிற்கே பார்வைத் திறன் இல்லாத மாணவர்களை அழைத்து படித்துக் காட்டுகின்றனர். வீட்டுப் பாடங்கள் எழுதுவதற்கு உதவுவது, ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தரவுகள் திரட்டி தருவது என உதவுகின்றனர். இந்த நேரடி வாசிப்பிற்கும் கணினி வாசிப்பிற்கும் இடையில் சில  வேறுபாடுகளை உணர முடியும். 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை 

- குறள் எண்: 411

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். என்ற வள்ளுவரின் குறட்பாவை இங்கு நினைவு கூற வேண்டும்.

நேரடி வாசிப்பின் மூலம் வாசிப்பாளர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுகிறது. ஒரு புத்தகத்தினை வாசிக்கும்போது ஏற்படும் ஐயங்களை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும். 

மேலும், பல இடங்களுக்குச் சென்று நாம் படிப்பதன் மூலம், தனித்தியங்கும் ஆற்றல் வளர்கிறது; தன்னம்பிக்கை பெருகுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு வாசிப்பாளர், சன்றோர்கள் மூலம் நிறைய கேள்வி செல்வத்தை பெற முடியும்.  

கணினி வாசிப்பு, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது; திரைநவிலியின் குரல் மட்டுமே அங்கு பிரதான இடத்தைப் பெறுகிறது. கணினித் தட்டச்சில் செய்யும் தவறுகள் திருத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அது மீள்வாசிப்பின் வாயிலாக நடைபெறும். ஆனால், கேள்விச் செல்வம் எனப்படும் வாசிப்பை கேட்டல் மூலம் பல தகவல்களை புரியும் வண்ணம் பெறலாம். 

இப்படி இருவேறு களங்களைக் கொண்ட பார்வையற்றோர் வாசிப்புக் களங்களுள் அவர்களின் தேடலே இன்று முக்கியத்துவம் பெறுகிறது. கணினியைக் கொண்டு வாசிக்கும் வழக்கம் இன்று பார்வையற்றவர்களிடையே அதிகம் உள்ளது. அதில் ஏற்படும் தடுமாற்றங்களைப் போக்கிக்கொள்வதற்கு நேரடி வாசிப்பு மிகவும் துணை புரிகிறது. 

கற்றலும் கற்பித்தலும் மனித குலத்திற்கு நன்மை தரும்

கணினியின் மூலமாக இவர்கள் வாசிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும். கணினியை இயக்கும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்; கணினியில் சரியான திரைநவிலி (Screen Reader) இருக்க வேண்டும். வாசிப்பு, பொருள், காலம் முதலானவற்றை இதில் அவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். பயணக் களைப்பும், அதற்கு நாம் செலவிடும் நேரமும் மிச்சமாகின்றது. கணினியில் எல்லாவற்றையும் சேமித்துக்கொள்ளலாம். இப்படி எண்ணற்ற நல்ல விளைவுகள் கணினி கற்றலின் மூலம் விளைகின்றன.

2500-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தில் இன்று 1500-க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், வங்கிகளிலும், மற்ற  அலுவலகங்களிலும் பணியாற்றுகின்றனர். 

அத்தோடு வழக்கறிஞர்களாகவும், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை ஊழியர்களாகவும், ஆட்சித் துறை அலுவலர்களாகவும், இன்ன பிற துறைகளிலும் பணி வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நேரடி வாசிப்பு – கேள்விச் செல்வம் பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரெய்ல் முறையிலான புத்தகங்கள், வரைபடங்கள், கம்ப்யூட்டர், நடைபயிற்சிக்கான ஸ்மார்ட் கேன், புத்தகங்களை ஒலி வடிவில் வழங்கும் ரீட் ஈசி மூவ் உபகரணம், சக்கர நாற்காலிகள், உயரம் குறைந்த புத்தக செல்புகள், பார்வையற்றோர் மற்றும் பார்வைத் திறன் குறைந்தோருக்கான பிரெய்ல் டிஸ்ப்ளே ஸ்கிரீன், பிரத்யேக கீபோர்டுகள் கொண்ட கம்ப்யூட்டர்கள், மூளைத் திறன் குறைந்தவர்களுக்கான கம்ப்யூட்டர்கள், சாய்தள நடைபாதை, தனி கழிப்பிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள்  கொண்ட பார்வையற்றோருக்கான தனிப்பிரிவு நூலகங்கள் அமைய வேண்டும். 

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மொழி கற்றல், இயலாமை மற்றும் அதிக விலையுள்ள பிரெய்ல் புத்தகங்கள், அனைத்து புத்தகங்களும் பிரெய்லியில் கிடைக்கப்பெறாதது போன்ற குறைபாடுகள்  இருக்கத்தான் செய்கின்றன. வாசிப்பு மற்றும் எழுதும் வழக்கம் வந்து நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும், துரதிருஷ்டவசமாக பிரெய்ல் முறையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே படைப்புகள் உள்ளன. இதன் காரணமாக பார்வையற்றோர் சமூகம் மிகவும் குறைவாகவே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

பார்வையற்றோருக்கு வாசிப்பை எளிதாக்குவதற்காக, 23 வயதான ரூபம் ஷர்மா பார்வை குறைபாடுள்ள சமுதாயத்திற்கான வாசிப்பு வழிமுறைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளார். 2015ல் தில்லியில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளிக்குச் சென்ற அவர் 30 நிமிடங்களுக்கு கண்களை கட்டிக் கொண்டிருந்தார். அதன்மூலம், பார்வையற்றோர் எந்த விதமான உதவியும் இன்றி இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை உணர்ந்தார் ரூபம். 

பிரெய்ல் முறை கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் 1% சமூகம் கூட பிரெய்ல் கல்வியறிவை பெற்றிருக்கவில்லை என்பதை அறிந்த அவர் அவருடைய நடைமுறை பயன்பாட்டில் அவர்களுக்கு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று முயற்சித்தார். 

அதன் தொடர் முயற்சியாக அவர் ‘மனோவியூ’ (Manovue) என்ற எழுத்துக்களை ஸ்கேன் செய்யும் டிஜிட்டல் கையுறையை கண்டுபிடித்தார்.  பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு நடைமுறையில் உள்ள சிரமங்களை இந்த கையுறை போக்குகிறது. பார்வையற்றோர் எளிதில் உணரும் வகையில், அணிபவரின் சுற்றுப்புறங்களில் உள்ள எழுத்துக்களை ஸ்கேன் செய்து உணர்த்துகிறது.

மனோவியூ-ஐ தங்கள் கைகளில் அணிந்துகொண்டு வெறுமனே எந்தவொரு அச்சிடப்பட்ட எழுத்துக்களை நோக்கி விரலை சுட்டிக் காட்டினாலும், அங்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை உரத்த குரலில் அக்கருவி கூறுகிறது. 200 ஆண்டு கால பிரெய்ல் மொழிக்கு மாற்றாக வந்துள்ள இந்த மனோவியூ என்ற மலிவு விலை தொழில்நுட்பம், பார்வை குறைபாடுள்ள சமூகத்திற்கு வேலைவாய்ப்புத் திறன், வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை வழங்கவல்லது.

மனோவியூ தொழில்நுட்பம் படிப்பறிவு இல்லாதோர் அல்லது டிஸ்லெக்ஸியா உள்ளோர், இரண்டாவது மொழி கற்போர், மொழிபெயர்ப்பு தேவைப்படும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் முதன்மை மொழியை கற்கும் இளம் குழந்தைகள், மூளை அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருபவர்கள் போன்ற பலதரப்பினருக்கு உதவியாக இருக்கும்.

மேலும் கவனக்குறைவு / ஹைப்பர்ஆக்டிவ் நோயாளிகளுக்கு இலவச வாசிப்பு மற்றும் கற்றல் அனுபவத்தை மனோவியூ-ஆல் வழங்க முடியும். இவரது கண்டுபிடிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 உலக சிந்தனையாளர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ரூபம் ஷர்மா. தொழில் நுட்பத்தோடு, மனித அன்பும் அரவணைத்து செல்லும் தன்மையும் அனைவருக்கும் இருந்தால் சாதனைக்கு எதுவும் தடையாக இருக்காது. 

[கட்டுரையாளர் - நூலகர் மற்றும்

நூலக அறிவியல் துறைத் தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com