கருணை பொழிய வேண்டும்: கைவிடப்பட்ட 82 வயது மூதாட்டி

கம்பத்தில் குடும்பத்தினரின் பராமரிப்பு இல்லாததால்  ஆதரவின்றிப்  பரிதவிக்கிறார் 82 வயதான ஒரு மூதாட்டி.
மூதாட்டி சரஸ்வதி
மூதாட்டி சரஸ்வதி
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்பத்தினரின் பராமரிப்பு இல்லாததால் ஆதரவின்றி பரிதவிக்கிறார் 82 வயது மூதாட்டி.

தேனி மாவட்டம் கம்பம் மெயின் ரோடு 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரின் மனைவி சரஸ்வதி (82). பெரிய விவசாய குடும்பத்தைச் சார்ந்த இந்த தம்பதிகள் மனமொத்து வாழ்ந்து வந்தனர். 

உற்றார், உறவினர்கள் அனைவரும் தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். விவசாய வேலைகளைப் பார்த்து மகன், மகள், பேரன், பேத்திகள் என வாழ்ந்து வந்தனர்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்தார். திருமணமாகி மகன், மகள் தனித்தனியாக சென்றனர். காலத்தின் கோலம், தனி மரமானார் சரஸ்வதி.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பொதுமுடக்கம் மூதாட்டி சரஸ்வதியை முழுவதுமாக முடக்கியது. கரோனா  பயத்தால் உற்றார், உறவினர், குடும்பத்தினர் யாரும் சரஸ்வதியை பராமரிக்கவில்லை. இதனால், தெருவின் ஓரத்திற்கு வந்து தங்கியுள்ளார்.

சரஸ்வதிக்கு தற்போது கண்பார்வை குறைந்து, பிறர் உதவி கிடைத்தால்தான் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறார். இந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்தான் அவருக்கு உணவு அளித்து வருகின்றனர்.

இதுபற்றி சரஸ்வதியிடம் பேசியபோது, தன்னைப் பராமரிக்க யாரும் இல்லை. கண் பார்வை குறைந்து வருகிறது. அறுவைச் சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், குளிரில் நடுங்கியும் தெரு ஓரத்திலே வசித்து வரும் சரஸ்வதியின் நிலைமை பரிதாபம்.

நல்ல முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை வழங்கினால் கண்டிப்பாக இன்னும் கூடுதலான நாள்களுக்கு வாழ்வார் சரஸ்வதி. எங்கிருந்தேனும் கருணை பொழிய வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com