

இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பெறுவதற்காக லட்சங்களைச் செலவழிக்கத் தயாராகிவிட்ட சூழலில், ரசாயனமே கலக்காத உணவுப் பொருள்கள் கிடைப்பது மிகவும் அரிதாகி வருகிறது.
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் எண்ணத்தில் பயணிக்கும் பலரும் இலக்கை அடைய முடியாமல் மீண்டும் ரசாயன உரங்களின் காலடியில் சரணடையும் இக்காலத்தில், துளியும் ரசாயனம் பயன்படுத்தாமல் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு மகசூலில் வெற்றிக்கொடி நாட்டி இயற்கை விவசாய வெற்றியாளராய்த் திகழ்கிறார் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (69).
முதுமை இவரை எந்த வகையிலும் தளரச் செய்யவில்லை. இயற்கை விவசாய வழிகாட்டியாய் வாழும் அவர் கூறியது:
"இயற்கை எப்போதும் உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. அதில் செயற்கையைப் புகுத்தித் தன்மையை மாற்ற முயலும்போது மனிதனும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். உணவு நஞ்சாகி மக்கள் மருத்துவமனைக்குப் படையெடுப்பதைக் கண்டும், எங்கள் பகுதி இளைஞர்கள் பல லட்சம் பேர் சம்பளத்தை உதறிவிட்டு விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டதை வைத்தும் எனக்குள் புத்துணர்வு ஏற்பட்டது.
"அதனால் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய முடிவெடுத்தேன். அதற்கு எனது மகன் முருகன் உறுதுணையாய் இருந்து வருகிறார். எங்கள் வயலில் காட்டுயானம், கருத்தகார், சொர்ணமயூரி, சொர்ண கிச்சிலி, பூங்கார், புள்ளகார், கருங்குருவை உள்ளிட்டவை பயிரிட்டுள்ளோம்.
"காற்றாலைகள் மிகுந்தது எங்கள் பகுதி. அதனால் நெல்மணிகள் உதிர்வது உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்தித்தோம். அதன்பின்பு ஆத்தூர் கிச்சடி சம்பா ரகம் இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூலைத் தந்தது. ஆரம்பத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்தோம். இப்போது 4 ஏக்கராக அதிகரித்துள்ளோம்.
"கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கரில் 1,875 கிலோ கிராம் நெல்மணிகள் மகசூல் கிடைத்தது. அதனால், பாரம்பரிய முறையில் நெல் விவசாயத்துக்கான 2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது.
"இயற்கை உரங்களின் மூலமே அதிக மகசூலைக் குவிக்க வழிகள் உள்ளன. பயிர்கள் மிகவும் செழிப்பாக வளர இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், அக்கினி அஸ்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். தழைச்சத்து தரும் தக்கைப்பூண்டு, நவதானியங்களை விதைத்து 40 நாள்கள் கழித்து மடக்கி உழுது மண் வளத்தை அதிகரிக்கலாம்.
"மாட்டுச்சாணம், மக்கிய காய்கனி கழிவுக் குப்பைகள், ஆட்டுக் கிடை உரம் மூலமும் வயலின் வளம் அதிகரிக்கும். ஆரம்பத்தில் மகசூல் குறைவாக கிடைத்தாலும் ஐந்தாண்டுகளில் நிலம் வளம் பெற்று தொடக்கத்தில் இருந்ததைவிட ஐந்து மடங்கு மகசூல் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் பயிரிடும் முறைகளைப் பழமை மாறாமல் பின்பற்றுவது அவசியம்.
"தமிழக அரசின் விருது பெற்றது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பணகுடிக்கு வந்து இயற்கை விவசாயம் குறித்து கேட்டுச் செல்கிறார்கள். எங்கள் வயலில் விளையும் இயற்கை நெல் மணிகளை அவித்து அரிசியாக்கி கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்து வருகிறோம்.
"எனக்கு இயற்கை விவசாயம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்திய எங்கள் பகுதியின் மகேஸ்வரன் உள்ளிட்டோர் இணைந்து வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பரிய விவசாயிகள் சங்கம் அமைத்து விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நான் இயற்கை விவசாயத்தைத் தொடங்கும்போது எனக்கு வயது 63 ஆகிவிட்டது.
"ஓய்வு வயதை எட்டிவிட்ட பின்பு சாதிக்க முடியுமா என்ற தயக்கம் சிறிது சிறிதாக மறைந்தது. இயற்கையைப் போற்றியும், அதன் வளத்தைத் துன்புறுத்தாமலும் கடுமையாக உழைத்ததால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. முதுமையை ரசித்து வாழ்வதோடு, வழிகாட்டியாக வாழ முயலும்போது ஏற்படும் சிரமங்களை விட மகிழ்ச்சியே அதிகம் இருக்கிறது" என்கிறார் கிருஷ்ணம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.