'குழந்தைகளைச் சிரமப்பட்டு ஆளாக்கினோம்; முதுமையில் கைவிட்டுவிடுகின்றனர்'

முதிய வயதில் மனைவி குழந்தைகள் பராமரிக்காமல் கைவிட்டு விட்டதால் நாள்தோறும் பிறரிடம் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வருவதாக முதியோர்கள் தெரிவிக்கின்றன
மூதாட்டி தயாள் அம்மாள்
மூதாட்டி தயாள் அம்மாள்


குழந்தைகளை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து, படிக்க வைத்துப் பெரிய ஆள்களாக்கினோம், முதிய வயதில் மனைவி, குழந்தைகள் பராமரிக்காமல் கைவிட்டு விட்டதால் நாள்தோறும் பிறரிடம் யாசகம் கேட்டுப் பிழைப்பு நடத்தி வருகிறோம் என்கிறார்கள் இந்த முதியோர்கள்.

ஒரு குழந்தை பிறக்கிறது, அதைப் பெற்றோர்கள் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக வளர்க்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு விரும்பிய கல்வி, வாழ்க்கை எல்லாம் அமைத்தும் தருகின்றனர். அதையடுத்து இளம் பருவம், திருமணம் முடிந்து பேரக்குழந்தைகள் பிறக்கின்றனர். பின்னர் மனது உற்சாகம் அடைந்தாலும், வயது முதிர்வால் நடை தளர்ந்து ஒரு குழந்தையின் மனநிலையை அடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற நேரங்களில் பெற்று வளர்த்த பிள்ளைகள் உதாசீனம் செய்து வெளியேற்றி விடுகின்றனர். இல்லையென்றால் அபலையாக அலைய விடுகின்றனர். ஒருசிலர் முதியோர் இல்லங்களில் விடுகின்றனர். மேலும், ரயில் நிலையம், திருக்கோயில் வாசல்களில் அநாதையாக விட்டுச் செல்லும் நிலையும் உள்ளது. ஆனால், அதைத் தொடர்ந்து அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்ப்பதற்குக்கூட ஆள் இல்லாத நிலையில் அநாதையாக உயிர்விட வேண்டிய நிலையும் உள்ளது.

பொதுவாக இன்றைய உலகில் குடும்ப உறவுகள் என்பது முன்பு இருந்ததைப் போல இல்லை. தாங்கள் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, பொருளாதார நிலையிலும் பாதிக்கப்பட்டு, அநாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் வீரராகவர் கோயில் பகுதியில் யாசகம் பெற்று வாழும் முதியவர் வெங்கடேஸ்வரன் (73) கூறுகிறார்:

"சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த எனக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உண்டு. அப்போதைய நிலையில் சேப்பாக்கம் பகுதியில் தையல் தொழில் செய்து வந்தேன். அதில் நாள்தோறும் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ரூ. 900 வாடகை வீட்டில் குடியிருந்து வந்தோம். அப்போது, குழந்தைகள் இருவரையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியதோடு விரும்பியதைப் படித்தார்கள். என்னால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, மனைவி, மகன்களால் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன். என்ன செய்வது எனப் புரியாத நிலையில் திருவள்ளூருக்கு வந்தேன். குழந்தையைப் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்து ஆளாக்கினோம். பெற்ற தாய், தந்தையைக் கடவுளாகப் பார்க்காமல் வெளியேற்றி விடுகின்றனர். தற்போதைய நிலையில் இதுபோன்ற துன்பத்தை முதியவர்கள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, வீரராகவர் கோயிலில் பிறரிடம் யாசகம் பெற்றுத் துறவி போல் வாழ்ந்து வருகிறேன். நான் சிறுவனான இருந்தபோது எனது தந்தையின் பேச்சையும் அறிவுரையும் கேட்டுதான் வளர்ந்தேன். ஆனால், என் குழந்தைகள் என் பேச்சைக் கேட்கவில்லை. தற்போது, மனைவி, மகன்கள் நன்றாக இருந்தும் இதுவரையில் வளர்த்து ஆளாக்கிய தந்தையைத் தேடி வரவில்லை என்றார் வெங்கடேஸ்வரன்.

வெங்கடேஸ்வரன்
வெங்கடேஸ்வரன்

திண்டுக்கல் அருகே பச்சாளகவுண்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னையா என்பவரின் மனைவி தயாள் அம்மாள் (85) கூறுகிறார்:

"எனக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவர் உயிரிழந்ததும் சொத்துகளை அவரது குடும்பத்தினர் பறித்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அங்கு இருக்கப் பிடிக்காமல், திருவள்ளூர் நொச்சி தெருவில் வசித்து வரும் மகன்களைத் தேடி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இங்கு வந்தேன். இரு மகன்களுக்கும் திருமணமான நிலையில் ஹோட்டலில் வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். வருவாய்ப் பற்றாக்குறையால் குடும்பம் நடத்தி வருவதால், என்னையும் பராமரிக்க முடியாது என வெளியேற்றி விட்டனர். கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியது குறித்துத் தெரிவித்தேன். ம். எதுவும் பயனில்லை. அப்போது, வெளியே வந்தபோது கால் இடறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் சிகிச்சைக்குப் பின் நடக்க முடியாத நிலையில் தள்ளுவண்டியில் வாழ்க்கை முடங்கியது. தற்போது, சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், திருவள்ளூர் பஜார், வீரராகவர் கோயில் தெப்பக்குளக் கரையில் வழிபாடு செய்ய வருவோரிடம் யாசகம் கேட்டு உயிர்வாழ்ந்து வருகிறேன். பெற்றோர்கள் தயவுடன் குழந்தைகள் வளர்கிறார்கள். ஆனால், பெற்றோர்கள் சொல் கேட்பதில்லை, அதேபோல் அந்த பாசத்தைத் திருப்பிப் பெற்றோர்கள் மீது காட்டுவதில்லை. திருமணமானதும் பெற்றோர்களை வெளியேற்றி விடுவதால் யாசகம் பெற்றுதான் வாழ வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. ரயில்கள் இயக்கினால் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன். மேலும், முதியோர் உதவித் தொகை பெறக்கூட குடும்ப அட்டைகளை தர  மறுக்கின்றனர்" என்றார் தயாள் அம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com