தள்ளாடும் வயதிலும் விசிறி மட்டை விற்று வாழ்க்கை நடத்தும் 80 வயது முதியவர்!

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே யாருடைய ஆதரவுமின்றி விசிறி மட்டை விற்று வாழ்க்கை நடத்தி வரும் 80 வயது முதியவர்.
மனைவி வசந்தாவுடன் குஞ்சிதபாதம்.
மனைவி வசந்தாவுடன் குஞ்சிதபாதம்.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே யாருடைய ஆதரவுமின்றி விசிறி மட்டை விற்று வாழ்க்கை நடத்தி வரும் 80 வயது முதியவர்.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தா. பழூர் கிராமத்தில் உள்ள தோப்பு தெருவில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம். 80 வயது முதியவர். இவருடைய மனைவி 74 வயதான வசந்தா. 45 ஆண்டுகளுக்கு முன் திருமணம். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

கணவன் மனைவியுமாய் இருவரும், ஒருவருக்கு ஒருவராக உதவி செய்துகொண்டு வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.

ஆரம்பத்தில் கூலி வேலைக்குச் சென்ற குஞ்சிதபாதம், நாளடைவில் தாமே ஏதாவது கைத்தொழில் கற்றுக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தார். அப்போது அவரது உறவினர் வீட்டுக்கு சென்றபோது பனை ஓலையில் விசிறி மட்டை தயாரிப்பதைக் கண்டார். அங்கு சில நாள்கள் தங்கிப் பயிற்சி எடுத்துக்கொண்டு, பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து தாமே பனை ஓலையில் விசிறி மட்டை தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொண்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் துளிகூட ஆர்வம் குறையாமல் இன்றுவரை ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரத்தில் இத்தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை என்றாலும், யாரிடமும் கையேந்தாமல் ஏதோ அன்றாட சாப்பாட்டிற்காவது இந்தத் தொழில் கைகொடுக்க உதவுகிறது என்கிறார் குஞ்சிதபாதம். மேலும் அவருக்கு உறுதுணையாக மனைவி வசந்தா, வீட்டு வேலைகளைச் செய்வதோடு மட்டுமின்றி விசிறி மட்டை செய்வதற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து, கணவன் உழைப்பில் தாமும் பங்கெடுத்து கொள்கிறார்.

விசிறி மட்டை தயாரிப்பதற்காக முதியவரான குஞ்சிதபாதம் தனது வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் ஓட்டிச் சென்று, பனை மட்டைகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு, சாலையைக் கடந்து வீட்டுக்கு வருவதற்குள் போதுமென்றாகி விடும் என்கிறார். அதன் பிறகு வீட்டில் மட்டைகளைச் சேகரித்து, அவற்றைக் காயவைத்து, அதன் பிறகு ஒவ்வொரும் மட்டையாக வெட்டி, பிறகு விசிறி மட்டை தயாராகும்.


தயார் செய்யப்பட்ட விசிறி மட்டைகளை எடுத்துக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் உள்ள கும்பகோணம், ஜயங்கொண்டம் ஆகிய நகர் பகுதியில் உள்ள கடைகளில் சைக்கிளில் சென்று மொத்தமாக விற்பனை செய்துவருகிறார். அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்றும் ஒரு விசிறி மட்டை ரூபாய் 15-க்கு விற்பனை செய்கிறார்.

இவர்களைக் கவனிக்கக் குழந்தைகள் இல்லாததாலும், தோள் கொடுக்க உறவினர்கள் யாரும் முன்வராததாலும், யாருடைய ஆதரவுமின்றித் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை.

மாதம் 300 ரூபாய் வாடகை கொடுத்து தற்போது கூரை வீட்டில்தான் வசித்து வருகின்றனர் என்பதுதான் பரிதாபம். முதியோர் உதவித்தொகை கேட்டு இருவரும் அரசுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடந்து, இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை குஞ்சிதபாதத்துக்கு மட்டும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மனைவிக்கு வழங்கப்படவில்லை.

முதியவருக்கு வழங்கப்படும் அந்த பணத்தைக் கொண்டு வீட்டு வாடகைக்கும், அன்றாட செலவுக்கும் சரியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள அவரது மனைவிக்கும் உதவித் தொகை வழங்க வேண்டுமென்பதே இவரது நீண்ட நாளைய கோரிக்கை. நாங்கள் இன்னும் கொஞ்சம் காலம்தான் வாழப் போகிறோம். எனவே மனைவிக்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்கிறார் முதியவர் குஞ்சிதபாதம்.

அதே நேரத்தில் முகத்தில் வறுமை தெரிந்தாலும், உள்ளத்தில் கவலை இருந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் தள்ளாடும் வயதிலும், தன் உயிர் மூச்சு நிற்கும் வரை உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, ஒரு இளைஞனைப் போன்று கம்பீரமாக நடை போடுகிறார் 80 வயது குஞ்சிதபாதம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com