பிள்ளைகளின் பாராமுகத்தால் பிச்சையெடுக்கத் தள்ளப்படும் பெற்றோர்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஏறக்குறைய 40 பேர் சந்நியாசிகளாகி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர், பெரும்பாலும் பிள்ளைகளின் பாராமுகத்தால்.
பாபநாசத்தில் தானம் வழங்கும் பக்தர்களுக்காக காத்திருக்கும் சந்நியாசி முதியவர்
பாபநாசத்தில் தானம் வழங்கும் பக்தர்களுக்காக காத்திருக்கும் சந்நியாசி முதியவர்

தாய் ஒருத்தி நான்கு குழந்தைகளைப் பெற்று சீரும் சிறப்போடும் வளர்த்து விடுகிறாள். அந்த 4 குழந்தைகளால் தங்களைப் பெற்றெடுத்த தாயைச்  சிறப்போடு பராமரிக்க முடியவில்லை என்பது பரவலாகக் கூறப்படும் சொலவடை.

இது தாய்க்கு மட்டுமில்லை, தந்தைக்குமானதுதான். சிந்தித்துப் பார்க்கும்போது இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே சரி.

இன்று சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக முதியவர்கள் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவர்களில் பலரும் பெற்றெடுத்த பிள்ளைகளாலும் உற்றார், உறவினர்களாலும் புறந்தள்ளப்பட்டு இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்களே.

பாபநாசத்தில் தானமிடுவோருக்காகக் காத்திருக்கும் சந்நியாசி முதியவர்
பாபநாசத்தில் தானமிடுவோருக்காகக் காத்திருக்கும் சந்நியாசி முதியவர்

30 வருடங்கள் வளர்த்து, திருமணம் செய்து, நல்ல நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகள், மனைவி, மக்கள் வந்ததும் தங்களை மறந்து, வெறுத்து வீட்டை விட்டும், குடும்பத்தை விட்டும் விரட்டிய சோதனைகளைப் பலரும் தங்கள் மனதில் புதைத்து வைத்துத் தற்கொலை செய்துகொள்ள மனமில்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஏறக்குறைய 40 பேர் இதுபோன்று சந்நியாசிகளாகப் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர். 40 பேருக்குமே 40 விதமான தனிக் கதைகள் இருக்கின்றன.

கடந்த 6 ஆண்டுகளாக பாபநாசத்தில் சந்நியாசியாக பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வரும் ராமசாமி கூறுகிறார்:

"எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி நகரம் (டவுன்). நான் பெண்ணெடுத்த ஊர் விக்கிரமசிங்கபுரம். திருமணத்திற்குப் பின் விக்கிரமசிங்கபுரத்திலேயே எனது வாழ்க்கையைத் தொடங்கிய நான் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தேன். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. உறவினர்களின் குழந்தைகள் மூன்று பேரை எடுத்து வளர்த்துவந்தோம். அனைவரையும் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, சீர், செனத்தி, குழந்தைப் பேறு வரை அனைத்து செலவுகளையும் செய்துள்ளேன். 

   பாபநாசத்தில் தர்ப்பணம் செப்பவர்களிடம் தானம் பெறும் சந்நியாசிகள்   
   பாபநாசத்தில் தர்ப்பணம் செப்பவர்களிடம் தானம் பெறும் சந்நியாசிகள்   

"இப்போது 69 வயதாகும் நான், 60 வயது வரை ஓட்டுநராக பணிபுரிந்தேன். அதற்குப் பின் உடல்நிலை ஒத்துழைக்காததால் வேலைக்கு செல்வதில்லை. வேலைக்குச் செல்வதை நிறுத்தியதிலிருந்து வீட்டில் பிள்ளைகளின் கவனிப்பு குறையத் தொடங்கியது. இதனால் மனம் உடைந்த நான் பாபநாசம் கோவிலில் அமர்ந்து, இங்கு தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்களும், சாமி கும்பிட வரும் பக்தர்களும் வழங்கும் தர்மத்தைப் பெற்று வாழ்ந்து வருகிறேன்.

"மனக் கசப்பால் தனியாக இருந்த மனைவியும் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாததால் மிகுந்த சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் கோயில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உணவு வழங்கியதை வைத்து காலம் தள்ளினோம்.

"நான் எப்பொழுதும் காலையில் சாப்பிடுவதில்லை. மதியம் பக்தர்கள் தர்மம் வழங்கும் உணவைச் சாப்பிடுவேன். இரவு சாப்பாடு கல்லிடைக்குறிச்சியிலுள்ள தன்னார்வலர்கள் நாள்தோறும் வழங்குவார்கள்.

"இங்கு என்னைப் போல பல்வேறு ஊர்களில் இருந்து  பெற்ற பிள்ளைகளாலும் சொந்தங்களாலும் கைவிடப்பட்டும் விரட்டப்பட்டும் அநாதரவான சுமார் 40 பெரியவர்கள் இதுபோன்று இங்கு வருபவர்கள் செய்யும் தர்மத்தால் வாழ்ந்து வருகிறோம்" என்றார்.

  வளர்ப்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் சந்நியாசியான ராமசாமி  
  வளர்ப்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் சந்நியாசியான ராமசாமி  

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர் அலமேலு அம்மாள். இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைக்குத் தாயான இவர், மகன்கள் இருவரும் திருமணம் செய்து மனைவியுடன் சென்று விட்ட நிலையில் மகளுடன் வாழ்ந்து வந்தார். மகளுக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இவரைக் கவனிக்க ஆளில்லை. இதையடுத்து கடையத்திலும்,  பொட்டல்புதூர் பள்ளிவாசலிலும் தர்மம் எடுத்து வாழ்ந்து வருகிறார். 

இதுபோன்ற கைவிடப்படும் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.  நகரத்தைச் சேர்ந்த  சில வசதி படைத்தவர்கள் தங்களின் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைச் சேர்த்துவிட்டு நிம்மதியாக இருந்து விடுகின்றனர். கிராமப்புறங்களிலும் தற்போது கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் கவனிக்கப்படாத பெற்றோர் சாலைகளிலும் மரத்தடியிலும் தங்கள் காலத்தைக் கழிக்கும் நிலை உருவாகி வருகிறது. 

ஆங்காங்கே தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் முதியவர்களைச் சேர்ப்பதற்கு பல சட்டதிட்டங்கள் இருப்பதால் அங்கு தங்களுக்கு சுமையாக நினைக்கும் பெற்றோர்களை பலர் சேர்ப்பதில்லை. அரசால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் பரவலாக இல்லாததால் அது குறித்து யாரும் நினைத்துப் பார்ப்பதும் இல்லை. 

இந்நிலையில் நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் கைவிடப்படும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதியோர் தினமாகக் கடைப்பிடிக்கும் நிலையில் முதியோர்கள் தங்களுக்கு பாதுகாப்பானவர்கள் என்ற விழிப்புணர்வு ஏற்படாமல் முதியோர்களைத் தங்களுக்குச் சுமையாக நினைக்கும் நிலை அதிகரித்து வருவது உள்ளபடியே வருத்தமளிப்பதாக உள்ளது.

இந்த நிலை மாற வேண்டுமானால் பெற்றவர்களைத் தவிக்க விடும் மகன்களும் மகள்களும் தங்களுக்கும் இந்த நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து பார்ப்பது மட்டும்தான் ஒரே வழி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com