மந்தையிலிருந்து பிரிந்த மனிதர்கள்: சொந்தங்களை சொல்லத் தெரியாத முதுமை

உறவுகளால் கைவிடப்பட்டு, வந்த இடம் தெரியாமல், செல்லுமிடம் புரியாமல் நடைவாசிகளாய் வாழ்ந்த முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது தேனியில் உள்ள மனித நேய காப்பகம்.
தேனி மனித நேயக் காப்பத்தில் வசித்து வரும் ஆதரவற்ற முதியவர்கள்
தேனி மனித நேயக் காப்பத்தில் வசித்து வரும் ஆதரவற்ற முதியவர்கள்
Published on
Updated on
1 min read

உறவுகளால் கைவிடப்பட்டு, வந்த இடம் தெரியாமல், செல்லுமிடம் புரியாமல் நடைவாசிகளாக வாழ்ந்த முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது தேனியில் உள்ள மனித நேய காப்பகம்.

உத்திரபிரேதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல்(60). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே மாநிலத்தைச் சேர்ந்த சிலருடன் தமிழகத்திற்கு காற்றாலை நிறுவன பணிக்கு வந்த இவர், உடல் நலன் குன்றியதால் இங்கு பணியை தொடர முடிவில்லை. இவரை, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல உறவுகள் முன் வரவில்லை. பேசும் மொழி புரியாவிட்டாலும், தற்போது காப்பகத்தில் உள்ள முதியவர்களின் பேச்சுத் துணையே ராகுல் தான்.

வங்காளதேசத்திலிருந்து வந்தவர் மௌலா(65). இவருக்கு முனிஸ் என்ற மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். மன நலன் மற்றும் உடல் திறன் குன்றியதால் இவரை குடும்பத்தினர் விட்டு பிரிந்துள்ளனர். சொந்தங்களைச் சேர முடியாமல் முதுமையில் தனிமை ஒன்றே தனக்கு துணையென இங்கு வாழ்ந்து வருகிறார் மௌலா.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் ராமர் என்ற ரஜினி (62). குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு நடைவாசியாய் சுற்றித் திரிந்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இதனால், பேச்சுத் திறன் மற்றும் நினைவாற்றாலை இழந்த ராமருக்கு, காப்பகம் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி புஷ்பராஜ், தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குணசேகரன் என குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 15 முதியவர்கள், இங்கு கூட்டுக் குடும்பமாகி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை தேடி குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இவர்களது முகவரியை கண்டுபிடிக்க காவல் துறை மூலம் மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை என்கின்றனர் மனித நேய காப்பக நிர்வாகிகள்.

நினைவுகள் தடுமாறி சொந்தங்களை சொல்லக் கூட தெரியாத இவர்கள், இங்கு தமக்குள் சொந்தமாகி முதுமை மொழி பேசி மகிழ்ந்து வருகின்றனர்.

வறுமை நிலையில் உள்ள குடும்பங்களில் வருவாய் மற்றும் செயல் திறன் குறைந்த முதியோர்களை கைவிடுவது அதிகரித்து வருகிறது. எந்த நிலையில் உள்ள குடும்பத்திலும், முதியோர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு அளிப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com