மகாத்மா - சுதேசியம் - தற்சார்பு - 2020

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று - நாடு கொண்டாடிக்கொண்டிருக்கிறது, குற்ற உணர்வுடன், கூச்ச மனதுடன்...
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

பிறந்த நாளில் வழக்கமாக நகராட்சி வளாகத்திலுள்ள கம்பி வலைக்குள் சிரிக்கும் காந்தி சிலையைச் சுத்தம் செய்து, மாலை போட்டு, அன்று மட்டும் கதராடை அணிந்து, காந்திஜிக்கு ஜே போட்டு, மிட்டாய்களைக் கொடுத்து, காந்தி தாத்தா நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று பேசி, அவர் வழியில் நடப்போம் என்று உறுதியேற்று அவரவர் வழியில் கலைந்துசெல்வோம்.

ஆனால், 2020 அக். 2 அப்படியா? அந்தச் சிரிக்கும் பொக்கைவாய்க் கிழவரின் திருவுருவச் சிலை அருகே செல்லவும் தொடவும் தயக்கம், ஜே முழக்கம் போடத் தயக்கம், உரையாற்ற வரும் தலைவருக்குத் தியாக வாழ்வு குறித்துப் பேசத் தயக்கம் என எல்லாமுமே தயக்கத்துடனும் குற்ற உணர்வுடனும்தான் நடக்கப் போகிறது. 

அவரை நடைமுறைக்கு உதவாத கற்பனை வேதாந்தி, அவர் சொல்வது போல வாழ முடியாது, முன்னேற முடியாது, வல்லரசாக முடியாது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோமோ என்கிற தயக்கம், குற்றவுணர்வு. யாரும் யாருடைய முகத்தையும் நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. தயக்கம், கூச்சம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கவும் தயக்கம். “கொல்வதும் கொன்று கோவில் வைப்பது கொள்கை உமக்கென்றால், உம்முடன் கூடி இருப்பதுண்டோ” என்று அவர் நம் காதுபட முணுமுணுக்கிறார். 

இந்த நாளில் வீட்டின் தனியறையில், ஒற்றை அகல் விளக்கின், அசையாத சுடரையே பார்த்தபடி, ஓர் ஆழ்ந்த அகத்தாய்வுக்கு, சத்திய சோதனைக்கு ஒவ்வொருவரும் நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்வதே உன்னதமான ஒன்றாக இருக்கும்.

1906-ல் தாதா அப்துல்லா கம்பெனியின் வாரக்கடனை வசூலிக்க 125 பவுண்ட் சம்பளத்தில் தென்னாப்பிரிக்கா சென்று விரக்தியுற்ற இளம் பாரிஸ்டரே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்தியர்கள் அனைவரையும் "கூலி" என்றே அழைத்தனர் வெள்ளையர். பீட்டர்மாரிட்ஸ்பர்க்கில் ரயில் பெட்டியிலிருந்து அவமானப்படுத்தப்பட்டுத் தூக்கி வீசப்பட்ட அந்த குளிர்ந்த இரவு, அவரது வாழ்க்கைப் பாதையைச் சூடானதாக மாற்றியது.

விடுதலை இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்பதை அவரது முதல் நூல் இந்திய சுயராஜ்யத்தில் மிகத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டார் அவர். வெள்ளை எஜமானர்களை விரட்டி ஆட்சிக் கட்டிலில் கருப்பு எஜமானர்கள்  அமர்ந்து மக்களை அடக்குவதுதான் சுதந்திரம் என்றால் அது தேவையற்றது, பயனற்றது என்று உறுதியுடன் கூறினார். சில முதலாளிகளின் பிரதிநிதியாக, அவர்களின் லாபத்திற்காகக் கை தூக்குவதுதான் நாடாளுமன்றம் என்றால் அது வேண்டாத அவையே எனக் கடுமையாகச் சாடினார்.

ஆனால் இன்று அதுதான் நடக்கிறது. கரோனா ஊரடங்கில் மக்களின் வாயைக் கட்டி, காலைக் கட்டி முடக்கிவிட்டுச் சில பெருமுதலாளிகளின் நலனுக்கான சட்டங்கள் விவாதமின்றி அமலாக்கப்பட்டு வருகின்றன.

காந்தியின் இந்திய சுயராஜ்யம் என்பது கிராம சுயராஜ்யமே. கிராமங்களே இந்தியாவின் இதயம். பெரும்பான்மை மக்கள், கிராமங்களில் விவசாயிகளாக, நெசவாளிகளாக, கைவினைக் கலைஞர்களாகத் தன்னிறைவுடன் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். அவர்களே நகரங்கள் வாழ்வதற்கான உணவு, உழைப்பு என அனைத்தும் தந்து வாழ்வித்து வருகின்றனர்.

கிராமங்களின் கருணையில், கொடையில் வாழ்வனவே நகரங்கள். வளர்ச்சியென்கிற பெயரில் தற்சார்புடன் வாழ்ந்த கிராமங்களைச் சுரண்டி நகரங்கள் கொழுத்தன. கரோனா கால ஊரடங்கால் துயரங்களும் சோதனைகளும் வந்தபோது நகரங்களைத் தேடி வந்த கிராமத் தொழிலாளர்களின் வேலையை நிறுத்தினர். சம்பளம் வழங்க மறுத்தனர், பட்டினி போட்டனர். தூரத்துத் தாய் மண்ணுக்கு மனதிலும் தோளிலும் சுமையுடன் காலுக்குச் செருப்புமின்றி நீண்ட நெடுந்தொலைவு மக்களை நடக்கவிட்டனர். அநாதைகளாகத் தெருவோரம் சாக விட்டனர். வாழ்வு தரும் என்று நகரங்கள் நாடி ஓடி வந்து, விட்டில் பூச்சிகளாகச் செத்த அவர்களுக்கு அரசுகூடக் கருணை காட்டாமல் விரட்டி அடித்த கொடுமைகளைக் கண்டோம்.

மகாத்மா காந்தி சொன்ன சுதேசிய வாழ்வு என்பது என்ன? மக்கள் தாம் வாழும் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தமது வீட்டுக் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு வாழ்வது, அங்கு விளையும் பொருள்களைக் கொண்டு உண்பது, உடுப்பது என்று வாழ்வதே தற்சார்பு எனும் மலிவான செலவில்லா சுயமரியாதை வாழ்வு என்றார்.

மாறாக பஞ்சாபில் விளையும் கோதுமையை லாரியில் தேவையற்ற டீசல் செலவில் கடத்தி வந்து கோதுமை உணவுப் பழக்கமே இல்லாத நம் மக்களுக்குக் குடுமியைப் பிடித்து நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குகிறது அரசு.

தனது கிராமத்தின் பனை, கரும்புச் சாற்றில் தாமே சர்க்கரை காய்ச்சிப் பயன்படுத்திய மக்களுக்கு வெள்ளைச் சீனியை வழங்கி லாபத்தைப் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறது மக்களுக்கான அரசு. சுதந்திர நாட்டில் கிராம மக்கள் சர்க்கரை காய்ச்சுவது சட்டவிரோதம் எனத் தண்டிக்கும் சட்டங்களும் உண்டு.

காண்டிராக்டர்காரர்களின் லாபத்திற்கும் கமிஷனுக்கும் கட்டப்பட்டுப் பலனின்றிக் கிடக்கும் கட்டடங்கள், கட்டிய சில காலத்தில் இடித்து விடும் பாலங்கள் என மக்கள் பணம் பாழாவதைக் காண்கிறோம்.

கிராமத்தின் அரசுக் கட்டடங்கள் எதுவும் அந்தக் கிராம மக்களின் வீடுகளைவிட ஆடம்பரமாக இருப்பது அவர்களை அச்சுறுத்தி, உள்ளே நுழைய முடியாத பயத்தை உண்டாக்கி விடும் என்றார் காந்தியப் பொருளியலாளர் ஜே.சி. குமரப்பா.

பறவைக்குக் கூடுண்டு, பாம்புகளுக்குப் புற்றுண்டு, ஆனால் மனித குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்ற விவிலிய வேதனையைப் போக்க, இங்கிலாந்தில் பிறந்த லாரி பேக்கர் காந்திஜியின் அறிவுரையைக் கேட்டு இந்திய மக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் கட்டித் தரத் தனது சொத்துகளை விற்று இந்தியா வந்தார்.

ஆனால், அவரை காங்கிரஸ் அரசுகள் பயன்படுத்துக் கொள்ளத் தவறியபோது அச்சுத மேனனின் கம்யூனிஸ்ட் அரசு கேரளம் முழுவதும் மலிவு வீடுகளைக் கட்டித்தரப் பயன்படுத்திக் கொண்டது. இவை மலைகளைத் தோண்டி உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட், காடுகளை அழித்துத் தோண்டப்படும் இரும்பு எதுவுமின்றி உள்ளூர் பொருள்களைக் கொண்டே கட்டப்பட்டன.

கரோனா நமக்குப் பல புதிய பாடங்களைக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறது. அன்னிய மோகத்தில் தறிகெட்டு ஓடிய நம் மீது நாம் விரும்பாவிட்டாலும் தற்சார்பு வாழ்வைத் திணித்துவிட்டது. காந்தி விரும்பித்  தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த சிக்கனமான, உடல் உழைப்பை மதிக்கும், பகிர்ந்து வாழும் வாழ்வே சரியென்பதை உணர்த்தியுள்ளது.

* வளர்ச்சி இதுதான் என்று ஏமாற்றி நம் மீது உலகமயப் பொருளாதாரம் திணித்த வெளிநாட்டுக்காரக் கம்பெனிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. தற்சார்பு வளர்ச்சியின் தேவை புரிகிறது.

* ஊரடங்கால் வாகனங்கள், விமானங்கள் ஓடவில்லை. கரிக்காற்றின்றிக் காற்று தூய்மையாகி தூரத்து மலைகளையும் வியப்புடன் காண முடிகிறது.

* வளர்ச்சி என்று குவிக்கப்பட்ட ஆலைகள் மூடப்பட்டதால் ஆற்று நீரும் காற்றும் தூய்மையாகி விட்டன.

* ரயில்கள் நோய் பரப்புவன என்று இந்திய சுயராஜ்யத்தில் காந்தி எழுதியதை முட்டாள்தனம் எனக் கருதிய உலகம் ரயிலை நிறுத்து, விமானத்தை நிறுத்து, பேருந்துகள் வேண்டாம், ஓடினால் கரோனா பரவும் என்று முடக்கியுள்ளது. பறந்துகொண்டிருந்த தலைவர்கள் சிறகொடிந்த பறவைகளாகி உள்ளனர்.

* ராணுவம், ஆயுதம், அணுகுண்டு இவையே பலம், இவை இருந்தால் வல்லரசாகலாம் என்று மக்கள் நலனைப் பின்னுக்குத் தள்ளிய அரசுகளுக்கு நல்ல கல்வியும், சிறந்த மருத்துவமுமே செல்வமெனக் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் பாடம் சொல்கிறது. அணுகுண்டுகளும் ரபேல் விமானங்களும் வெறும் காட்சிப் பொருள்களாகி விட்டன.

* இறைச்சிக் கழிவைப் பர்கராக்கிய அன்னிய நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. வீட்டுச் சமையலே உடல்நலத்திற்கு உகந்தது என்பதையும் கரோனா உணர்த்தியுள்ளது.

* ஏ.சி. மால்கள் நோய் பரப்பும் என மூடப்பட்டு விட்டன. தெருவோர அண்ணாச்சிக் கடைகள், தள்ளுவண்டிகள், கூடைக்கார கிழவிகளுமே தேடி வந்து சேவை செய்து செய்கின்றனர்.

* குளிரூட்டப்பட்ட வகுப்பறை என்று விளம்பரம் செய்த கல்வி வணிகர்கள் முடக்கப்பட்டனர். மரத்தடியில் வகுப்பு நடத்துவதே பாதுகாப்பானது என்கிறார் படிப்பு அமைச்சர்.

* எல்லா நோயையும் நாங்கள் குணப்படுத்துவோம் என்ற நட்சத்திர கார்ப்பரேட் மருத்துவ வணிகர்கள், மருந்தில்லையென்ற போதும், ஐ.சி.யு.க்களில் கபசுரக் குடிநீரும், ஆர்சனிக் ஆல்ப மாத்திரைகளையும், நிலவேம்புக் கசாயத்தையும் தந்து பல லட்சங்களைக் குவித்துக் கொண்டுள்ளனர். காந்தி பரிந்துரைத்த கூட்டு மருத்துவ முறையே இனி நலவாழ்வு தர உகந்தது என்பதை மெல்ல உணர்ந்து வருகிறோம். 

* பெப்சி, கோக்கின் கவர்ச்சி விலகி இளநீரும் பதனீரும் நீர் மோருமே ஆரோக்கியமானது, மலிவானது என்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளோம்.

* இந்தியா விடுதலை பெற்ற நாளில், மத வன்முறை சூறையாடிய வங்க மண்ணில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தனிமனித ராணுவமாக நடந்துகொண்டிருந்தார் மகாத்மா. “இஸ்லாமிய வைரஸ்” என்று பகைமை வளர்ப்போரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. “சீன வைரஸ்” என்ற ட்ரம்பை ஐநா மன்றம் கண்டித்துள்ளது. பகையும் வெறுப்புமல்ல, ஒற்றுமையும் கல்விக்குமான சமூகமே இன்றைய தேவை என்பதை உணர்த்தியுள்ளது கரோனா.

மகாத்மாவும் சுதேசியமும் தற்சார்புப் பொருளாதாரமுமே இனி இந்தியாவைக் காக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

"பூமித்தாய் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவாள். ஆனால் நம் பேராசையை நிறைவு செய்ய அவளிடம் எதுவுமில்லை” என்கிற உண்மையை இந்தியா மட்டுமல்ல உலகமே புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. இயற்கையை அழித்துச் சுரண்டாத, இயற்கையுடன் இணங்கி வாழ்வதே கரோனா, பருவநிலை மாற்றம் எனும் இயற்கைப் பேரிடர்களிலிருந்து உலகைக் காக்க ஒரே வழி.

நாம் கடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டம், நமக்கு காந்தியின் தேவையை அதிகம் வலியுறுத்துவதாகவே உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது விரும்பியோ, விரும்பாமலோ அவரை ஏற்றுக் கொண்டுள்ளோம். எளிய சிக்கனமான இயற்கைநேயமிக்க கிராம வாழ்வு, உணவுக்கான உழைப்பு, பொருள்களை வீணாக்காமல் மதிப்புணர்ந்து பாதுகாத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, ஆரோக்கிய வாழ்வு, எவ்வகை மருத்துவமானாலும் சிறப்பானதை ஏற்பது ஆகியவற்றை ஏற்று வாழ்கிறோம்.

இவை சுடுகாட்டு வைராக்கியமாக அன்றி நமது வாழ்வு முறையாகத் தொடர்ந்தால், நாம் மட்டுமல்ல, நம் நாடு, நமது ஒரே வீடான இந்த பூமி யாவும் இனிவரும் தலைமுறைகளுக்கும் செல்வமாக என்றும் வாழுமென்பதுதான் 2020 காந்தி பிறந்த நாள் உலகுக்குத் தரும் செய்தியாக இருக்க முடியும்.

[கட்டுரையாளர் - மருத்துவர்,

தலைவர், தமிழக பசுமை இயக்கம், ஈரோடு]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.