சரஸ்வதி பூஜையின் மகத்துவங்கள்

கல்விக் கடவுளான, கல்வியின் தாய் சரஸ்வதிக்கும் சிறப்புப் பூஜை செய்வதே ஆயுத பூஜை எனச் சொல்லக் கூடிய சரஸ்வதி பூஜையாகும்.
சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை
Published on
Updated on
4 min read

கல்விக் கடவுளான, கல்வியின் தாய் சரஸ்வதிக்கும் சிறப்புப் பூஜை செய்வதே ஆயுத பூஜை எனச் சொல்லக் கூடிய சரஸ்வதி பூஜையாகும். நம்முடைய வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்து, அலங்கரிக்கப்படும். 

சரஸ்வதி வைரத்தைப் போன்றவள். சாந்தம் நிறைந்த பார்வையுடன் எழிலுடன் விளங்குகிறாள். கல்வி மற்றும் கலைகளின் தெய்வம். பிரம்மனின் சக்தி. நவராத்திரியின் 6 ஆவது 7 ஆவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் போது சரஸ்வதியை எழுந்தருளச் செய்ய வேண்டும். இது தேவியின் அவதார நாள். திருவோண (சிரவண) நட்சத்திரம் உச்சமாகும் நாளில் சரஸ்வதி பூஜை நிறைவு பெறுகிறது. அன்றே விஜயதசமி ஆகும்.

மக்களின் தொழில் அனைத்தும் புலமை, தொழில் என்ற இரண்டு பிரிவுகளில் அடங்குகின்றது. ஒன்று - புலமை ஞானம். இரண்டு - தொழில் ஞானம். எனவே ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை வழிபடுவது சரஸ்வதி பூஜையாகும். நூல்களில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர்.

ஆயுத பூஜை 

தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜை . இவர்கள் மிகச் சிறிய ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் கழுவி, சுத்தம் செய்து அவைகளுக்கு பூவும், பொட்டுமிட்டு தீபாராதனைக் காண்பித்து வழிபடுகின்றனர். காரணம், செய்யும் தொழில் தெய்வம். அத்தொழில் எத்தொழிலாயினும் வணங்கத்துக்கும், வழிபாட்டுதலுக்கும் உரியதாகும். இந்த அடிப்படைகளை உணர்த்தும் வழிபாடுகளே சரஸ்வதி பூஜையாகும்.

திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் சரஸ்வதிக்கென தனியே ஒரு கோயிலே இருக்கிறது. இங்கு சரஸ்வதி பூஜையன்று அம்மனின் திருவடிகள் வெளி மண்டபம் வரையில் நீண்டிருக்கும் படி அலங்காரம் செய்கின்றனர். பக்தர்கள் அனைவரும் அம்மனின் திருவடிகளுக்கு குங்குமத்தாலும், மலர்களாலும் அர்ச்சனைகள் செய்து வழிபடுகின்றனர். இந்த அபூர்வ வழிபாட்டு முறை இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. நவராத்திரியின் போது முப்பெரும் சக்திகளுக்குள் அடங்கியிருக்கும் ஒன்பது சக்திகளையும் வழிபட வேண்டும். அப்போது ஒரு சக்தியை முதன்மையாகவும், மற்ற எட்டு சக்திகளைப் பரிவாசர் சக்திகளாகவும் கருத வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று அதிகாலையில் படிக்க வேண்டும். சரஸ்வதி பூஜை முடிந்ததும் சிறிது நேரம் இராமாயணத்தின் ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். குழந்தைகள் சரஸ்வதி பூஜையன்று அதிகாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் படிக்க வேண்டும். பின்பு பூஜையில் புத்தகங்களை வைக்க வேண்டும். விஜயதசமி அன்று படிப்பைத் தொடங்கினால் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூர் எழுத்தறி நாதர் கோயிலில் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று நாக்கில் நெல்லால் ஓம் என எழுதி வித்யாப்பியாசம் செய்கிறார்கள்.

மைசூர் தசரா விழாவில் யானை பவனி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கர்நாடகாவின் பல பகுதிகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு வரும். அவற்றில் எந்த யானை சாமுண்டீஸ்வரியை சுமக்கப் போகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். இதற்காக கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டு அனைத்து யானைகளையும் பரிசோதனை செய்வார்கள். அதன் பிறகே தகுந்த யானை கோயில் நிர்வாகத்தால், தேர்வு செய்யப்படும். அந்த யானையின் மீது தங்க சிம்மாசனம் அமைத்து அதில், சாமுண்டீஸ்வரி சிலையை வைப்பார்கள். அந்த யானை முதலில் செல்ல மற்ற யானைகள் அணி வகுத்துச் செல்லும். ஆண்டொன்றிற்கு ஐந்து கோடி ரூபாய்க்கும் மேலாக கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இதில், திருவிழா செலவு ஒரு கோடி போக, மீதி பணம் மைசூர் நகர சாலைகளை செப்பனிட பயன்படுத்தப்படும்.

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்த சிலையை கடலிலும், நதிகளிலும் கரைப்பது போல, துர்க்கா தேவியையும் நீர் நிலைகளில் கரைக்கின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் விஜயதசமி விழா மிகவும் சிறப்பாக இருக்கும். விஜயதசமி பூஜை முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைப்பார்கள். துர்க்கை சிலையை கண்ணாடி முன்பு வைப்பர். பிம்பம் கண்ணாடியில் தெரியும். துர்க்கையின் சக்தி முழுவதும் கண்ணாடிக்குள் வந்து விடுவதாக எண்ணி அவளைப் புகழ்ந்து பாடுவார்கள். பின்னர், சிலையை மட்டைப் பல்லக்குகளில் ஏற்றிக் கொண்டு நீர் நிலைகளுக்குச் செல்வார்கள். தங்களை விட்டுப் பிரியும் துர்க்கையைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். நீர் நிலைகளில் சிலையைக் கரைப்பார்கள். துர்க்கையின் சக்தி கண்ணாடியில் தங்கியதாகவும் கருதி, தினமும் காலையில் எழுந்ததும், கண்ணாடியில் விழிப்பார்கள். இந்நிகழ்ச்சியை, கண்ணாடி விஜர்சனம் என்பார்கள்.

அஷ்ட சரஸ்வதி

சரஸ்வதியையும் எட்டு வகையாக அலங்காரம் செய்து மகிழலாம். அவளுக்குரிய திருநாமங்கள் இவைகள்தான். கட சரஸ்வதி, கினி சரஸ்வதி, அந்தரிட்ச சரஸ்வதி, சித்ரேஸ்வரி, வாகேஸ்வரி, கீர்த்தீஸ்வரி, கலைவாணி, துளஜா ஆகிய அஷ்ட சரஸ்வதிகள் உள்ளன. 

சுண்டல் ரகசியம் 

நவராத்திரி சமயத்தில் சுண்டல் பிரதானமாக இடம் பெறுகிறது. இதற்கு காரணம் யார் தெரியுமா. தெஷ்ணாமூர்த்திக்கு கொண்டைக் கடலைப் படைக்கிறோம். இவர் குரு ஸ்தானத்தில் இருந்து தனது சீடர்களுக்கு போதனை செய்கிறார். அதாவது வித்தைகள் சார்ந்த தெய்வங்களுக்கு சுண்டல் பிரதானமாக்கப்பட்டுள்ளது. சரஸ்வதியும் வித்தைகளின் அரசி, இவளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் பிரதானம். கிரக தோஷங்களைப் போக்கும் சக்தி இந்தக் கடலைக்கு இருக்கிறதாம். கிரக தோஷத்தால் உடல் நிலை, மன நிலைப் பாதிக்கப்படும். கொண்டக்கடலை உடலுக்கு மிகவும் நல்லது. கொண்டக்கடலை மட்டுமின்றி பட்டாணி, மொச்சை, பாசிப்பயறு உள்ளிட்டவைகளும் நோயைப் போக்கும் சக்தியும் உண்டு.

ராம லீலா

நவராத்திரியை ஒட்டி மைசூரில் தசரா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். தசஹர என்ற சொல்லில் இருந்து திரிந்ததே தசரா என்பதாகும். ராமபிரான் ராவணனைக் கொன்ற சம்பவத்தை தசஹரம் என்று சொல்லுவார்கள். பத்து தலை உள்ள ராவணனை அழித்ததால் இவ்வாறு பெயர் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் ராம்லீலா என்று இத்திருவிழாவை வர்ணிப்பர்.

உளுந்து வடை தானம் 

சரஸ்வதி பூஜையன்று பொதுவாக சர்க்கரைப் பொங்கல், கொண்டக் கடலை சுண்டல், பச்சைப் பயறு சுண்டல், கடலைப் பருப்பு சுண்டல், அவல், பொரி உள்ளிட்டவைகள்தான் நைவேத்தியம் செய்வது வழக்கம். இத்துடன், உளுந்து வடையும் மறக்காமல் வையுங்கள். சரஸ்வதி பூஜை குழந்தைகளுக்குரிய விழா. இந்த நாளில் அவர்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உளுந்து குழந்தைகளின் உடல் நலனுக்கு நல்லது.

மகிஷனை அழித்த தத்துவம்

நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்க்கா தேவியை வழிபடுகிறோம். அவளை மகிஷா சுரமர்த்தினி என்றும் சொல்வார்கள். மகிஷ  என்றால் எருமை என்று பொருள். அவளால் அழிக்கப்பட்ட அசுரன், காட்டெருமை உருவத்தில் இருந்தான். நமது உள்ளங்களிலும் எருமையின் குணங்கள் இருக்கின்றன. எருமை தமோ குணத்தைக் கொண்டது. தமோ என்றால், சோம்பல், இருட்டு, அறியாமை, செயலற்ற மந்தநிலை ஆகியவற்றை உணர்த்துகிறது. சோம்பலுக்கு அடையாளமாக நாம் உறக்கத்தை விரும்புகிறோம். நமக்குள் நிறைய சக்தி இருந்தாலும், செயல் புரியும் ஆற்றல் மறைந்திருந்தாலும் நாம் வேலை செய்யாமல் இருப்பதையே விரும்புகிறோம். நாமும் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். இந்த தமோ குணத்தை அழிப்பதைத்தான் மகிஷா சுரவதம் காட்டுகிறது.

உள்ளங்கையில் வாசம் செய்யும் முப்பெரும் தேவியர்

நமது உள்ளங்கையில் முப்பெருந்தேவியர் வாசம் செய்கின்றனர். விரல் நுனியில் செல்வம் தரும் லட்சுமியும், கையின் நடுப்பகுதியில் கல்வியைத் தரும் சரஸ்வதியும், அடிப்பகுதியில் வீரத்தைத் தரும் பார்வதியும் வாசம் செய்கின்றனர். எனவே, தாம் காலையில் எழுந்ததும் நமது உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும் எனச் சொல்கின்றனர் நம் முன்னோர்கள்.

சாந்தமான துர்க்கை

திருநெல்வேலி அருகிலுள்ள சிவலப்பேரியில் உள்ளது ஸ்ரீ துர்க்காம்பிகா ஆலயம். துர்க்கை என்றால், சவுத்ராசுரமாக ஆயுதங்களோடு காட்சி தருவார். ஆனால், இங்கு மட்டும்தான், பரிபூரண சாந்தஸ்ரூபிணியாக வலது கையில் புஷ்பம் வைத்த நிலையில் காட்சி தருகிறார் துர்க்கை. மேலும், இங்கு துர்க்கையும், விஷ்ணுவும் அண்ணன், தங்கையாக காட்சி தருகின்றனர். இதுதான் துர்க்கைக்கு என்று தனிப்பட்ட கோயிலாகும்.

தெஷ்ணாமூர்த்தி வடிவில் சரஸ்வதி

முனிவர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் வடிவில் கோயில்களில் அமர்ந்திருப்பது தெஷ்ணாமூர்த்தியின் திருஉருவமே. ஆனால், தஞ்சை பெரிய கோயிலில் இதைப் போல, சரஸ்வதி தேவியின் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த தேவியை வாசஸ்பதி என்றும் வாகீஸ்வரி என்றும் அழைத்து வழிபடுகின்றனர்.

பெரும்பாலும் சரஸ்வதி தினத்தன்றுதான் சரஸ்வதியின் நினைவு மக்களுக்கு வருகிறது. கல்விக்கு அரசியான அவளை மாணவச் செல்வங்கள் சரஸ்வதியை தினமும் வணங்க வேண்டும். வசதி உள்ளவர்கள் சரஸ்வதிக்கு தினமும் நைவேத்தியம் வைத்தும் வணங்கலாம். குழந்தைகளும் சந்தோஷப்படுவார்கள். அவர்களுக்கு கண்ட கண்ட தின்பண்டங்களைக் கொடுப்பதை விட, நைவேத்தியம் பண்டங்களைக் கொடுத்தால் அறிவு வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com