மத்தியதரைக் கடல் ஒரு சிவப்புக் கோடு! மோதலுக்குத் தயாராகும் நேட்டோ கூட்டாளிகள்

கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ளது காஸ்டெல்லோரிúஸô தீவு. இத்தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) ஏராளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்தியதரைக் கடல் ஒரு சிவப்புக் கோடு! மோதலுக்குத் தயாராகும் நேட்டோ கூட்டாளிகள்
Published on
Updated on
3 min read

கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் யாருக்குச் சொந்தம் என்பதில் துருக்கி, கிரீஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல், ஐரோப்பிய ஒன்றியத்திலும் கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும் தங்களது கடற்படைக் கப்பல்களை அனுப்பியதைத் தொடர்ந்து அங்கு போர்ப் பதற்றம் நிலவுகிறது.

கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ளது காஸ்டெல்லோரிúஸô தீவு. இத்தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) ஏராளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆளில்லா இத்தீவு துருக்கியிலிருந்து 2 மைல் தொலைவிலேயே இருந்தாலும், சர்வதேச சட்டத்தின்படி தனக்குச் சொந்தமானது என கிரீஸ் உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுக்காக அண்மையில் ஓர் ஆய்வுக் கப்பலையும், அதற்குப் பாதுகாப்பாக ஒரு போர்க் கப்பலையும் அத்தீவுப் பகுதிக்கு அனுப்பியது துருக்கி.

கிரீஸூம் எகிப்தும் மத்தியதரைக் கடல் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுதினம், துருக்கி அனுப்பிய ஆய்வுக் கப்பல் தனது பணியைத் தொடங்கியது. இதேபோல், 2019-இல் லிபியாவுடன் துருக்கி ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் நடவடிக்கைக்கு பதிலடியாக தனது கடற்படைக் கப்பல்களை கிரீஸ் அனுப்பியதால் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதற்றம் தொடங்கியது. துருக்கி, கிரீஸ் இரண்டும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையின் உறுப்பு நாடுகள். அதேவேளையில் கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக உள்ளதால், இதில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. "சர்ச்சைக்குரிய பகுதியில் தனது ஆய்வுப் பணியை நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும்' என ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியை எச்சரித்துள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும்; நேர்மையான மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என பதிலளித்தது. உச்சபட்சமாக, "மத்தியதரைக் கடலில் எங்கள் உரிமையைக் காக்க எந்த விலை கொடுக்கவும் தயார்' என துருக்கி அதிபர் எர்டோகன் கூறியதைத் தொடர்ந்து பிரச்னை உச்சத்தை எட்டியுள்ளது.

சிவப்புக் கோடு
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டாலும், அதன் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகளும் உள்ளன. இந்த பிரச்னையை தீவிரமாக அணுகுகிறது பிரான்ஸ். அதேவேளையில் துருக்கியை பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கிறது ஜெர்மனி. கிரீஸூக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கும் பிரான்ஸ், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் தனது போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது.

கிரீஸ், சைப்ரஸ், பிரான்ஸூடன் ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் இணைந்து கூட்டுப் பயிற்சியிலும் ஈடுபட்டன.

பிரான்ஸின் நடவடிக்கை குறித்துப் பேசிய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மத்தியதரைக்கடல் விவகாரத்தில் பிரான்ஸ் "சிவப்புக் கோடு' கொள்கையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

சிவப்புக் கோடு கொள்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வை தடுப்பது எனப் பொருள்படும். பொருளாதார பிரச்னையாக இருந்தால் அதற்கேற்பவும், பாதுகாப்பு பிரச்னையாக இருந்தால் அதற்கேற்பவும் சிவப்புக் கொள்கையின் நடவடிக்கை இருக்கும். மொத்தத்தில் இயற்கை எரிவாயு ஆய்வை துருக்கி நிறுத்தாவிட்டால் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதுதான் இதன் மறைமுக பொருள்.

பிரான்ஸ் அதிபரின் சிவப்புக் கோடு எச்சரிக்கைக்கும் துருக்கி பணிவதாக இல்லை. அதன் வெளியுறவு அமைச்சர் மெல்லட் கௌசோக்லு இதுகுறித்து கூறுகையில், கிழக்கு மத்தியதரைக்கடலில் துருக்கியின் நீதிக்கு எதிராக சிவப்புக் கோடு வரைந்ததாக நினைப்பவர்கள், துருக்கியின் உறுதியான நிலைப்பாட்டை மட்டும் எதிர்கொள்வார்கள். அப்படி ஒரு சிவப்புக் கோடு இருந்தால், அது துருக்கியின் உரிமைகளாக மட்டுமே இருக்க முடியும்' எனத் தெரிவித்தார். அத்துடன் செப். 2 முதல் செப். 10 வரை தொடர்ந்து இயற்கை எரிவாயு ஆய்வைத் தொடரப் போவதாகவும் துருக்கி தெரிவித்துவிட்டது.

தீர்வு ஜெர்மனி கையில்
கிரீஸ், துருக்கி இடையிலான கிழக்கு மத்தியதரைக்கடல் பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதாகத் தெரியவில்லை. அங்கு அதிபர் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டதால் டிரம்ப் இதில் கவனம் செலுத்துவார் என உறுதியாகச் சொல்ல முடியாது. அச்சூழலில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொறுப்பு ஜெர்மனியின் கைக்கு வந்திருக்கிறது. 

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இப்போது தலைமை வகிக்கும் நாடு என்ற வகையில், இப்பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க ஜெர்மனி முயல்கிறது. 

"கிழக்கு மத்தியதரைக் கடல் பிரச்னையை பொருத்தவரையில், சிறு பொறி உரசிக் கொண்டாலும் அது பேரழிவுக்கு வித்திடும்' என ஜெர்மனி ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இப்போதைக்கு பொருளாதாரத் தடை என்ற அச்சுறுத்தல் துருக்கியை பணிய வைக்குமா அல்லது பிரான்ஸின் சிவப்புக் கோட்டைத் தாண்ட துணியுமா என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மத்தியதரைக் கடல்- ஒரு பார்வை
அட்லாண்டிக் பெருங்கடலை இணைக்கும் மத்தியதரைக் கடல் ஏறக்குறைய சுற்றிலும் நிலப் பகுதியால் சூழ்ந்துள்ளது. கடிகாரச் சுற்றில் ஸ்பெயின், பிரான்ஸ், மொனாகோ, இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, போஸ்னியா, மோன்டிநெக்ரோ, அல்பேனியா, கிரீஸ், துருக்கி, சிரியா, லெபனான், இஸ்ரேல், எகிப்து, லிபியா, மொராகோ, மால்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகள் மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ளன.  மத்தியதரைக் கடலின் நீண்ட கடற்கரையை கிரீஸ் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com