'புகையிலைப் பழக்கத்தால் 27.1% புற்றுநோய் பாதிப்பு'

புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவில் 27.1  சதவிகிதம் அளவுக்கு புகையிலை தொடர்பானதாக இருக்கிறது என ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் வேலவன் தெரிவித்தார்.
டாக்டர் வேலவன்
டாக்டர் வேலவன்

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையில் 27.1 சதவிகிதம் அளவுக்கு புகையிலை தொடர்பானதாக இருப்பதாக ஈரோடு புற்றுநோய் மருத்துவர் கே.வேலவன் குறிப்பிடுகிறார்.

இவர்களில் பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இந்த நோய் வந்தபின் ஓரிரு ஆண்டுகளில் இறக்கின்றனர். ஏழை, வசதி படைத்தோர் என எந்தப் பாகுபாடும் இன்றி இந்நோய் வருகிறது. புற்றுநோய் வராமல் தடுக்க பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

முதல் மூன்று நிலையிலுள்ள புற்றுநோயை ரேடியோதெரபி, கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மூலம் குணமாக்குகின்றனர். நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு, வலியிலிருந்து விடுபட்டு,  ஆயுள்காலத்தை வேண்டுமானால் சில மாதங்களுக்கு நீட்டிக்கச் செய்ய சிகிச்சை அளிக்கின்றனர். நோயிலிருந்து அவர்களை முழுமையாக விடுபடவைப்பது இயலாததாகவே உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்நோய் பாதித்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த வேலூர் மாவட்டம் உள்ளது. அதற்கடுத்து ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன.

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இதில், கழுத்து, தொண்டை, வாய்ப்  புற்றுநோய் உள்ளோர் எண்ணிக்கையில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 

இதுபற்றி ஈரோடு கேன்சர் சென்டர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வேலவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் கிகிச்சைக்கு என இரண்டு மருத்துவமனைகள் 2007ஆம் ஆண்டு முதல் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் புதிதாக 2,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. இதில் 70 சதவிகிதம் பேர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். முதல் மூன்று நிலையில் உள்ளவர்களைக் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

ஆரம்பத்தில் கண்டறிந்தால் தடுக்கலாம்

புற்றுநோய் தடுக்கக் கூடிய, ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய் என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆரம்ப அறிகுறிகளை சரியாக / சரிபார்க்கத் தவறியதே நோய் முற்றிப்போக காரணமாக இருக்கிறது. 2012-2016 வரையிலான ஆண்டுகளில் ஐ.சி.எம்.ஆர். அறிக்கையின்படி ஈரோடு கேன்சர் சென்டர், ஆராய்ச்சி நிறுவனத்தில் 1,141 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இதில், 648 பெண்கள், 493 ஆண்கள். பெண்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் 27.5 சதவிகிதம், மார்பகப் புற்றுநோய் 26.1 சதவிகிதம் அளவுக்கும் இருந்தது. ஆண்கள், பெண்கள் இருவருக்கும், தலை, கழுத்தில் புற்றுநோய்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டன. இந்த பாதிப்பு 34.1 சதவிகிதம் அளவுக்கு இருந்தது.

2017 - 2019 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 1,904 புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆண்களுக்கு உணவுக் குழாய், வாய், நுரையீரல், வயிற்று புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. பெண்களைப் பொருத்தவரை மார்பக, கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஆண்களுக்கு தலை, கழுத்து புற்றுநோய் பாதிப்பு  32.9  சதவிகிதம், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்  22.6 சதவிகிதம், கருப்பை வாய்ப் புற்றுநோய் 23.5 சதவிகிதம் அளவுக்கு இருந்தது.

20 வயதுக்குள் 2.6 சதவிகிதம், 20க்கு மேல் 34 வயது வரை 5.1 சதவிகிதம், 35க்கு மேல் 44 வயது வரை 11.4 சதவிகிதம், 45 முதல் 54 வயது வரை 21.1 சதவிகிதம், 55 முதல் 64 வயது வரை 26 சதவிகிதம், 65 முதல் 74 வயது வரை 21 சதவிகிதம், 75 வயதுக்கு மேல் 12.9 சதவிகிதம் இருந்தது.

இதன்படி 45 முதல் 74 வயது வரை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புகையிலை தொடர்பான புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவில் 27.1 சதவிகிதம் அளவுக்கு புகையிலை தொடர்பானதாக இருக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமான மனநிலையை உருவாக்குவதும், குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது வழக்கமான சிகிச்சைக்கு வருவதும் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் ஆயுள் காலத்தை நீட்டிக்கவும் உதவும் என்றார் மருத்துவர் வேலவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com