
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும், 'பாதிப்பு தெரிந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் இந்த நோயிலிருந்து குணமடைந்த பெண்.
புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில், நம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் குணமடைந்தும் வருகின்றனர்.
அதிலும் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணமடைய முடியும் என்கிறார் இந்த நோயிலிருந்து மீண்ட திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலைச் சேர்ந்த ஈஸ்வரி (50).
அவர் மேலும் கூறியதாவது:
"எனக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக மார்புப் பகுதியில் சிறிய அளவிலான கட்டி தெரிந்தது. இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால், சில நாள்களிலேயே கட்டி தோன்றிய இடத்தில் வலி ஏற்படத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது என்னால் மற்றவர்களைப்போல அனைத்து வேலைகளையும் செய்ய முடிகிறது. புற்றுநோய் பாதித்த காலகட்டத்தில் எனது கணவரும், இரு மகள்களும் எனக்குத் துணையாக இருந்ததுடன், தன்னம்பிக்கையையும் அளித்தனர்.
மார்பகப் புற்று நோய் என்பது எளிதில் குணமாக்கக் கூடியதுதான். இந்த நோய் பாதிப்பு தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக எனது தாயும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் எனக்கும் வந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார் ஈஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.