கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முத்துலட்சுமி!

தன்னம்பிக்கையும், தொடர் சிகிச்சையும் இருந்தால் மார்பகப் புற்றுநோயை வென்று விடலாம் என்றார் 7 ஆண்டுகளாக இந்த நோயுடன் போராடி வெற்றிகண்ட முத்துலட்சுமி.
முத்துலட்சுமி
முத்துலட்சுமி
Published on
Updated on
1 min read


தன்னம்பிக்கையும், தொடர் சிகிச்சையும் இருந்தால் மார்பகப் புற்றுநோயை வென்று விடலாம் என்றார் 7 ஆண்டுகளாக இந்த நோயுடன் போராடி வெற்றிகண்ட முத்துலட்சுமி.

புற்றுநோய் என்றதும் பயப்படவோ, மனதளவில் சோர்ந்து போகவோ தேவையில்லை. மார்பகப் புற்றுநோயையும் மரணத்தையும் வெல்லும் ஆற்றல், மகளிருக்கு நிச்சயம் உண்டு.

பாலிவுட் நடிகை மும்தாஜ், தமிழ் நடிகை கௌதமி, டாம்ப் ரெய்டர் புகழ் ஏஞ்சலினா ஜோலி, டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா போன்ற பிரபலங்கள் மார்பகப் புற்றுநோயை வென்று நம்பிக்கை அளிக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி, அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை ஆகிய மும்முனை சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமே வழங்கப்படுகிறது.

பொருளாதார வசதி இல்லாத பலரும்கூட தொடர் சிகிச்சை மூலம் புற்றுநோயை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவராகத் திகழ்கிறார்.

வாரத்தில் 4 நாள்கள் வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம், மற்ற நாள்களில் உள்ளூரிலேயே பலகாரம் விற்பனை செய்து வாழ்கை நடத்தி வரும் 60 வயதான முத்துலட்சுமி புற்றுநோயிலிருந்து மீண்யெழுந்தது பற்றிக் கூறுகிறார்: 

7 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஈரோட்டில் தனியார் மருத்துமனையில் பரிசோதனை செய்தபோது மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. அப்போது முதல் சிகிச்சையைத் தொடர்கிறேன்.

கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை என தொடர்ந்து 7 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனால், என்னுடைய உழைப்பைச் சற்றும் குறைத்துக்கொள்ளவில்லை. கடந்த ஓராண்டாக 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மட்டும் செய்து வருகிறேன்.

புற்றுநோய் சிகிச்சைக்கு இப்போதைய காலகட்டத்தில் பணம் ஒரு பிரச்னையாக இருப்பது இல்லை. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் இலவசமாக அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கின்றனர்.

எனக்கு அறிமுகமான ஒரு பெண், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுமார் 2 ஆண்டுகளிலேயே மார்பக புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தீவிர நோயாளி மற்றும் அவருடன் இருக்கும் உதவியாளர்களுக்கு வெளியூர்களில் இருந்து சிகிச்சைக்கு வந்து செல்ல இலவசமாக ரயில் அல்லது பேருந்து பாஸ் வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் குறிப்பிடும் தேதியில் சிகிச்சைக்கு செல்வதும், பொறுமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும், செலவே இல்லாமல் இந்த நோயில் இருந்து மீண்டு விடலாம். இதற்கு அந்த பெண் உதாரணமாக இருக்கிறார்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மீண்டுவிடலாம் என்பதை எனக்குத் தெரிந்த பெண்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இப்போதுள்ள சூழலில் 40 வயதைக் கடந்த பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.

தன்னம்பிக்கை, மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுதல், தொடர் சிகிச்சை மூலம் மார்பகப் புற்றுநோயை வென்று வாழ்ந்து காட்ட முடியும் என்கிறார் முத்துலட்சுமி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com