'கலக்கம் கூடாது, சிறிய நோய்தான், சிகிச்சையில் சரிசெய்யலாம் எனத் துணிய வேண்டும்'

சேலத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, மார்பகப் புற்றுநோய் பாதித்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வு பெற்று, ஓராண்டை நிறைவு செய்து முன்பைவிட தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
4 min read


முன்பெல்லாம் புற்றுநோய் வந்தால் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகளே நேரிட்டு வந்தன. ஆனால், இப்போது புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் மீளலாம் என நிலைமை மாறியுள்ளது. 

அந்த வகையில், சேலத்தைச் சேர்ந்த 51 வயது பெண் உமா மகேஸ்வரி, மார்பகப் புற்றுநோய் பாதித்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வு பெற்று, ஓராண்டை நிறைவு செய்து முன்பைவிட தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

திருமணமான 7 ஆண்டுகளில் இளவயதில் விபத்து ஒன்றில் தனது கணவரைப் பலி கொடுத்துவிட்டு 6 வயது மகளுடன் தனது வாழ்க்கைப் போராட்டத்தைத்  தனியே தொடங்கிய உமா மகேஸ்வரி மன தைரியம் நிரம்பிய பெண். வெறும் 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ள உமா மகேஸ்வரி  தனி ஆளாகத் தனது மகள் சுசித்ராவை முதுநிலைக் கல்வி வரை படிக்க வைத்துத் தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியராக அமரவைத்து அழகு பார்த்தவர்.

கடந்த 2019 இல் மார்பகத்தில் ஏற்பட்ட கட்டியைச் சோதனை செய்தபிறகு அது மார்பகப் புற்றுநோய் எனத் தெரிய வந்ததும் ஆரம்பத்தில் சற்று பதற்றம் அடைந்த உமா மகேஸ்வரி, அதிலிருந்து மீண்டு மன தைரியத்தை வளர்த்துக் கொண்டார்.

2019 ஜூலை மாதம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது எனது மகளுக்கு நான் மீண்டும் அம்மாவாகத் திரும்பி செல்ல வேண்டும் என அவர் மருத்துவக் குழுவினரிடம் குறிப்பிட்டார்.

மார்பகப் புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்த பிறகு நோய்ப் பாதிப்பிலிருந்து மீண்டு சாதாரண பெண்ணாக வலம்வரும் உமா மகேஸ்வரி கூறுகிறார்:

"எனது குடும்பத்தினர் யாருக்கும் மரபு ரீதியாக புற்றுநோய் பாதிப்பு இல்லை. இருந்தாலும் மார்பகத்தில் தோன்றிய சிறு கட்டியை அலட்சியப்படுத்தாமல், முறையாக சோதனை செய்தேன். அதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது.

"நான் மன தைரியத்தை வளர்த்துக் கொண்டேன். எதற்கும் பயப்படவில்லை. மன உறுதி குலையாமல் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். தொடர்ந்து கீமோதெரபி மற்றும் மருத்துவர்கள் அளித்த மாத்திரைகளை உட்கொண்டு தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டிருக்கிறேன். எனது மகளுக்கு மீண்டும் அம்மாவாகத் திரும்பி வந்துள்ளேன்.

"மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்று, அறுவைச் சிகிச்சை செய்யும் வரையில் உடனிருந்து எனக்கு மன தைரியம் அளித்து மீண்டுவரச் செய்ததில் எனது மகளுக்கும் அவரின் கணவருக்கும் முக்கிய பங்கு உண்டு.

"புற்றுநோயோ அல்லது வேறு நோயோ வந்துவிட்டால் எதற்கும் கலக்கம் அடையக் கூடாது. மாறாக சிறிய நோய்தான் வந்துள்ளது, சிகிச்சை மூலம் சரி செய்துகொள்ளலாம் என மன தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகி, முறையாகப் பதில் பெற்றுத் தெளிவடைய வேண்டும்.

"தற்போது சிகிச்சை முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. எல்லோரையும் போல நானே தனியாக சமையல் செய்துகொள்கிறேன். அனைத்து வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன். நடைப்பயிற்சி செல்கிறேன். நல்ல சத்தான உணவுகளை உள்கொள்கிறேன்."

மார்பகப் புற்றுநோயிலிருந்து தனது தாய் மீண்டது குறித்து அவரது மகள் சுசித்ரா கூறுகிறார்:

"எனது தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்ததும் முதலில் பயம் வந்தது. ஆனால், நான் நேர்மறை எண்ணங்களால், மன தைரியத்தை வளர்த்துக்கொண்டேன். சிறு வயதில் இருந்தே எனது தாய் எனக்குள் நேர்மறை எண்ணங்களை விதைத்தார்.

"மேலும், தாய்க்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் இடங்களில்கூட பிறருக்கு என்ன வித நோய் இருக்கிறது, எதற்காக சிகிச்சை பெற வந்திருக்கின்றனர் எனக் கேட்டதில்லை. இதனால் மற்றவர்களிடம் பேசி எதிர்மறை சிந்தனைகளைப் பெறாமல் தவிர்த்தேன். எனது தாய்க்கு மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பெறுவதை உறவினர்களிடம் தெரிவிக்காமல் இருந்தேன்.

அறுவைச் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் நேரத்தில்தான் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். கீமோதெரபி சிகிச்சை தரும்போது மட்டும் உடல் அளவில் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் ஓரிரு மாதங்களில் இயல்பு நிலைக்கு வந்தார். தற்போது அவர் நலமாக உள்ளார். எனது தாய் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

மருத்துவர் கே. சிவகுமார்
மருத்துவர் கே. சிவகுமார்

புற்றுநோய் பாதிப்பும், சிகிச்சை முறை குறித்தும் மருத்துவ புற்றுநோயியல் துறை மருத்துவர் கே. சிவக்குமார் கூறியது:

"உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். சத்தமே இல்லாமல் நம் உடலில் புற்றுநோய் பாதித்து, இறப்புக்கு செல்லும் நோய்களில் புற்றுநோய் பிரதானமானது. புற்றுநோய் வந்துவிட்டாலே இறப்பு என்ற நிலை மாறி தற்போது நவீன சிகிச்சை முறை மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

"புற்றுநோயைப் பொருத்தவரையில் ஏராளமான புற்றுநோய்கள் உள்ளன. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்டவை முதன்மையாக உள்ளன.

"இந்தியாவில் குறிப்பாக மகளிருக்கு மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் தாக்கிதான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

"ஆண்களைப் பொருத்தவரையில் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவது மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது.

"இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோயும் அதிகம் ஏற்படுகிறது. முன்பெல்லாம் பெண்கள் 15 வயதில் பூப்பெய்தி வந்தனர். இப்போது எல்லாம் முன்கூட்டியே உதாரணமாக 12 வயதில் சிறுமிகள் பூப்பெய்தி வருகின்றனர்.

"அதேபோல மெனோபாஸ் மாதவிடாய் நிற்பது 52 வயதில் நடப்பதாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் தாக்கம் பாதிப்பதால் புற்றுநோய் வரவும் சாத்தியக்கூறு உள்ளது.

"மரபணு ரீதியாகவும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. ஒரு குடும்பத்தில் ரத்த உறவுள்ள இரண்டு பேருக்கு புற்றுநோய் தாக்கியிருந்தால், அவர்களின் குழந்தைகளுக்குப் புற்றுநோய் வர  வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு குடும்பத்தில் அம்மா மற்றும் பெரியம்மா ஆகியோருக்கு இருந்தால் அடுத்து அவரது மகளுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் அதிக உடல் பருமனாகி வருகின்றனர்.  உடல் பருமனும் புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ளது. உடல் பருமன் காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

"போதிய உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் ஆகிய காரணங்களால்கூட புற்றுநோய் வரலாம். வாரத்திற்கு 5 நாள்கள் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செல்லலாம். இதன் மூலம் உடல் பருமனைக் கட்டுப்படுத்தலாம். இதய பாதிப்பு உள்ளிட்ட எந்த நோய் வராமல் உடல் நலம் காக்கலாம். ரெட் மீட் எனப்படும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் மலக்குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை, காய்கறி மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளைக் குறைவாக உள்கொள்பவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. 

"புகையிலை மற்றும் குட்கா பொருள்களைத் தவிர்த்தல், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். புற்றுநோய் சிகிச்சையைப் பொருத்தவரையில் கதிரியக்க சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, கீமோதெரபி ஆகிய மூன்று துறைகளை உள்ளடக்கியதாகும்.

"முன்னொரு காலத்தில் புற்றுநோய் பாதித்தவர்கள் அடுத்து 6 மாதத்தில் இறந்து போகும் நிலை இருந்தது. இப்போது மருத்துவ அறிவியல் வளர்ச்சி காரணமாக தரம் மேம்பட்ட சிகிச்சை காரணமாக உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.

"மேலும், புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடையும் அளவுக்கு சிகிச்சை முறைகள் வந்துவிட்டது.
ரத்த புற்றுநோய் பாதித்தவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் ரத்த புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.

"இம்யூனோதெரபி, டார்க்கெட்டேட் தெரபி மற்றும் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (லீனியர் ஆக்சிரலேட்டர்) ஆகிய நவீன சிகிச்சை முறைகளால் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு முன்பெல்லாம் மார்பகத்தை அகற்றிவிடும் சூழல் இருந்தது. இப்போது அவர்களுக்கு புற்றுநோய் பாதித்த கட்டியை மட்டும் அகற்றி பெண்களின் மார்பகத்தைப் பாதுகாக்க முடிகிறது.

"மேலும், மாவட்டம் தோறும் புற்றுநோய் பதிவு மையம் (கேன்சர் ரெஜிஸ்டரி) ஏற்படுத்தும்போது, புற்றுநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுத் தகவலையும் நாம் அறிய முடியும்.

"மத்திய அரசு அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து விலையைக் கட்டுப்படுத்தியதன் (குறிப்பாக உயிர் காக்கும் மருந்து விலை) மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர்" என்றார் மருத்துவர் கே. சிவக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com